நலிவுற்ற பெண்களை வலுவூட்டும் நிகழ்ச்சித் திட்டம்!





(மா.சசி)
மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ நிறுவனத்தினால் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடனும் சேவ் த சில்ரன் நிறுவனத்தின் அனுசரணையுடனும் நலிவுற்ற பெண்களை வலுவூட்டும் திட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான விழிப்பூட்டல் நிகழ்வுகளை தாம் கிராமங்கள் தோறும் நடத்தி வருவதாக வை.எம்.சி.ஏ. நிறுவனத்தின் சமூக அணிதிரட்டுனர் அனுஜா மாணிக்கராசா தெரிவித்தார்.



கிராமப் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தங்கள் திறமைகளை வெளிகொண்டு வரும் முகமாக பல கலை நிகழ்வுகளும், தலைமைத்துவம், பிரச்சினைத் தீர்வு, பால்நிலை சமத்துவம், பெண்கள் சிறுவர் உரிமைகள், தொழிற் பயிற்சி மற்றும் வழிகாட்டல் பயிற்சிகளும் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பான நிகழ்வொன்று நேற்று ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கொம்மாதுறை மற்றும் ஆறுமுகத்தான்குடியிருப்பு ஆகிய கிராமங்களிலும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மாதர் சங்கங்கள் மற்றும் பாடசாலை மாணவிகள் கிராம மக்கள் ஆகியோர் பங்கெடுத்துக் கொண்டனர்.
இன்நிகழ்வின் போது வை.எம்.சி.ஏ பால்நிலை தொடர்பான உத்தியோகத்தர் லாவண்யா சிறிஸ்டி, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சுஜாந்தி ஜெயகாந் வெளிக்கள உத்தியோகத்தர்களான பிரசாந்தி மயூரதன்; ஆகியோரும் கலந்து கொண்டனர்.

செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 19 கிராமங்களில் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெற்று வருவதாக வை.எம்.சி.ஏ பால்நிலை தொடர்பான உத்தியோகத்தர் லாவண்யா சிறிஸ்டி தெரிவித்தார்.