மூன்றாவது கண் உள்ளூர் அறிவுத்திறன் செயற்பாட்டுக்குழுவின் கிழக்கின் வாழ்வாதார ஊக்குவிப்புடன் இணைந்த செயற்பாட்டின் தொடர்ச்சி.........கிழக்குப் பல்கலைக்கழகம்-வந்தாறுமூலையிலும்......
கிழக்கு மக்களின் வாழ்வாதார செயற்பாடுகளாக பயிர் வேளாண்மை, பால் உற்பத்தி, மீன்பிடி முதலியன காணப்படுகின்றன. இவை பாரிய அளவில் கிழக்கின் அனைத்துப் பகுதிகளிலும் மேற்கொள்ளப்படுகின்றன. கிழக்கின் பாரம்பரியங்கள் பண்பாடுகள் முதலியவற்றை இவ் வாழ்வாதார செயற்பாடுகள் பலவும் பிரதிபலித்து வருகின்றன. பிறரில் தங்கிநிற்காத சுயபொருளாதார வாழ்க்கை முறையை கிழக்கு மக்களின் வாழ்வாதார செயற்பாடுகள் கொண்டமைந்துள்ளன. இதன் அடிப்படையில் ஊர்ப்பசுக்களூடாக நிகரற்ற வருமானத்தினை கிழக்கின் பலபகுதிகளிலும் இருக்கும் குடும்பங்களும் பெற்று வருகின்றன. ஆனாலும் நவீனத்தின் மாயை, பல்தேசிய கொம்பனிகளின் தாக்கம் இப்பகுதிகளையும் தாக்க ஆரம்பித்திருக்கின்றன. கிழக்கின் பல பகுதிகளின் சுயபொருளாதார வாழ்க்கைமுறையின் வலிமை பல பல்தேசிய நிறுவனங்களுக்கும் அவற்றின் தரகர்களுக்கும் தலையிடியாகவே இருந்துவருகின்றது. ஆனாலும் மக்களை அடிமைப்படுத்துவதற்கு பாரிய பல முயற்சிகள் மறைமுகமாக மேற்கொள்ளப்படுகின்றன.
இவற்றிலிருந்து மக்களை விடுவித்து அவர்களுடைய சுய வலிமை வாழ்க்கைமுறையை அவர்களுக்கு உணர்த்தவும் அதில் அவர்களுக்கூடாகவே அவர்கள் நிரந்தரமாக செயற்பட வழிசெய்வதுமான ஓர் செயற்பாடாகவே 'தூய பசும்பால் பாவனை ஊக்குவிப்பு செயற்றிட்டமானது' 2011ம் ஆண்டில் மூன்றாவது கண் உள்ளூர் அறிவுத்திறன் செயற்பாட்டுக் குழுவினரால் மட்டக்களப்பின் பலபகுதிகளிலும் சில ஆற்றுகை முறைகளுக்கூடாக முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக பால் உற்பத்தி அதிகமாக காணப்படும் மட்டக்களப்பின் கன்னங்குடா, பருத்திச்சேனை, மண்டபத்தடி, வவுனதீவு முதலிய ஊர்களில் பொது இடங்களிலும், பாடசாலைகளிலும் இச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. மேற்குறிப்பிட்ட இடங்களை நோக்கிய அணிவகுப்பில் பல்தேசியக் கொம்பனிகளும், சமுதாய எதிரிகளும் மும்மரமாக முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில் இவ் விழிப்புணர்வு செயற்திட்டமானது முக்கியமான ஒன்றாக அமைந்தது.
இத் 'தூய பசும்பால் பாவனை ஊக்குவிப்பு செயற்திட்டத்துக்கான ஆற்றுகையானது' ஆரம்பத்தில் மட்டக்களப்பின் போக்கஸ் மண்டபத்தில் ஜெயம் பால் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மட்டக்களப்பின் பால் உற்பத்தியாளர்களது கலந்துரையாடலில் சூழல் அரங்கின் ஓர் வடிவமாக முன்னெடுக்கப்பட்டு அதனூடாக அவர்களது கருத்து வெளிப்பாடுகளை தூண்டுவதாக அமைந்தது. இதில் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பல்தேசியக் கொம்பனிகள் அவர்களது தரகர்கள் மூலம் பாலை குறைந்த தொகை பணம் கொடுத்து சேகரித்து அதனை பைக்கற்றுக்களில் பால்மாவாக திரும்பவும் அதே மக்களிடம் கூடிய விலைகளில் விற்பதனை கருப்பொருளாக கொண்டு அவ்வாற்றுகை அமைந்திருந்தது. இதனூடாக அங்கிருந்தவர்களிடம் பைக்கற்றுக்களில் அடைக்கப்பட்ட பால்மாவானது ஆரேக்கியமானதா? இல்லையா? என்றும் எங்களிடம் இருக்கும் வளத்தை நாம் பிறருக்கு குறைந்த விலைகளில் விற்றுவிட்டு பின் அவர்களிடமிருந்தே கூடிய விலைகொடுத்து வாங்குவது மட்டுமல்லாது அதனுடன் சேர்த்து உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கேற்படுத்தும் பலவற்றையும் தேடிச்சென்று பெற்றுக்கொள்கின்றமை எவ்வளவு பாரதூரமானது என்பதனை கருத்தாடலுக்கு கொண்டுவரப்பட்டது. கருத்துரையாடல்களின் போது பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பலதரப்பட்ட கருத்துக்களும் வெளியாகின. அவர்கள் தாங்கள் பசுக்கள் வளர்ப்பதில் எதிர்நோக்கும் சவால்களை உரையாடலுக்கு கொண்டுவந்தனர். சிலவகை வெளிநாட்டு பசுக்கள் வளர்ப்பதினூடாக பெறுகின்ற அனுகூல, பிரதிகூலங்களை உரையாடலுக்கு கொண்டுவந்தனர்.
இங்கு இடம்பெற்ற ஆற்றுகை உத்திகள் முற்றிலும் வேறுபட்டதே! சிறுவர்களது விளையாட்டான 'சங்கிலி புங்கிலி கதவைத்திற' என்கின்ற விளையாட்டினூடாக ஆற்றுகை ஆரம்பமானது. கட்புலனாகா அரங்க உத்தியை பயன்படுத்தி வந்திருந்தோருடைய கவனத்தை ஆற்றுகையின்மேல் திருப்பி பின் அதனை மூன்றாவது கண் நண்பர்கள் வீதி நாடக பாணியில் வளர்த்துச்சென்றனர். இவ்வாறு வளர்த்துச் செல்லப்பட்ட ஆற்றுகை அங்கு இருந்தவர்களை கருத்தாடலுக்கு தூண்டியது மட்டுமல்லாது அவர்கள் கூறிய சில விடயங்களை அவதானித்து வேறு இடங்களில் ஆற்றுகை செய்யும் போது அக்கூற்றுக்களை நாடகத்தினூடாக தந்திருந்தது. உதாரணமாக வெளிநாட்டு பசுவளர்ப்பு பிரச்சினைகள் சில அங்கு வந்திருந்த பாலுற்பத்தியாளர்களினால் கூறப்பட்டிருந்தது. இவ்வகை கூற்றுக்களை வேறு இடங்களில் ஆற்றுகை செய்யும்போது கலந்துரையாடலை வளர்த்துச்செல்லும் விதமாக பயன்படுத்தப்படது.
தொடர்ச்சியாக இவ் ஆற்றுகை வெபர் மைதானத்தில் மூன்று நாட்கள் இடம்பெற்ற கண்காட்சியில் பல தடவைகள் அளிக்கை செய்யப்பட்டு பெரு வரவேற்பை பெற்றிருந்தது. முதன்முறை போக்கஸ் மண்டபத்தில் உள்ளக வெளியில் குறிப்பிட்ட ஒரு தொகை மக்களுக்கு ஆற்றுகை செய்யப்பட்ட இச் ஊக்குவிப்பு செயற்பாடானது வெபர் மைதான திறந்த வெளியில் பல்லாயிர மக்களுக்கு முன்னால் அளிக்கை செய்யப்பட்டபோது ஆற்றுகைமுறையில் பல புதிய மாற்றங்களுடன் அளிக்கை செய்யப்பட்டும் கலந்துரையாடல்கள் பலகோணங்களில் மேற்கொள்ளப்பட்டும் இத் தூய பசுப்பால் பாவனை ஊக்குவிப்பு செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அக் கண்காட்சியில் பல வியாபார நிறுவனங்கள் தமது வியாபார விளம்பரங்களுக்கு அரங்க வகைகளை பல ரூபா செலவு செய்து பயன்படுத்திக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இவ்வகை ஆற்றுகை சமூக நலனை மனதில் கொண்டு சிறு தொகை செலவில் மூன்றாவது கண் நண்பர்களால் மேற்கொள்ளப்பட்டிருந்ததும், அது அவ்வியாபார உத்திகளில் பயன்படுத்தப்பட்ட சில அரங்கச் செயற்பாடுகளை வெற்றிகொண்டு மக்களை உரையாடலுக்கு தூண்டியதும் சிறப்பம்சமே! அத்துடன் இவ்வகை அரங்க செயற்பாடுகள் சமூக நலத்தினை அடிப்படையாக கொண்டிருந்தமையும், தூரநோக்கினை கொண்டிருந்தமையும் இதன் வெற்றிக்குரிய காரணிகளாகின.
இதன் தொடர்ச்சியாக 'எகெட்' நிறுவனத்தின் பிரதான அனுசரணையோடு மட்டக்களப்பின் கன்னங்குடா, மண்டபத்தடி, பருத்திச்சேனை, வவுனதீவு போன்ற இடங்களிலும் பாடசாலைகளிலும், சந்தைகள், கோவில் வெளிகளிலும் இச்செயற்பாடுகள் முன்னெடுக்கப் பட்டிருந்தன. இவ்வூர்களில் இச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட போது அது அவ்வூர்களில் உள்ள பாலுற்பத்தியாளர்களால் வரவேற்கப்பட்டிருந்தமையும், அவ்வூர் மக்களை விழிப்படையச் செய்திருந்தமையும் காணமுடிந்தது. மேலும் அவ்வூர் மக்கள் பசுப் பாலினூடாக தாம் நாளாந்தம் பல பயன்களை அடைவதாகவும், நெய் முதலியவற்றை நீண்ட நாள் பாவனைக்கு பயன்படுத்துவதாகவும் பெருமிதத்துடன் கூறியமை இச்செயற்பாடுக்கு இன்னும் வலுச்சேர்த்தது.
இவ்வாறு தூய பசும் பால் பாவனை ஊக்குவிப்பு செயற்றிட்டமானது 2011ல் ஊரூராக முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து 2013,2014களில் கிழக்குப் பல்கலைக்கழகம் வந்தாறுமூலையில் நுண்கலைத்துறையினரால் சி.ஜெயசங்கரது தலைமையில் பட்டிப்பொங்கல் நிகழ்வின் தொடர்ச்சியாக முன்னெடுக்கப் பட்டிருந்தது. இதனை அங்கு பணியாற்றும் நுண்கலைத்துறை விரிவுரையாளர்கள் முன்னைய அளிக்கைவடிவிலிருந்து சிறுசிறு புதிய அழகுபடுத்தலுடன் மாணவர்களூடாக அளிக்கை செய்ய வைத்து வருகின்றனர். இதன்போது வர்த்தக, உயிரியல், விவசாய பீட விரிவுரையாளர்களும், அப் பகுதி பாலுற்பத்தியாளர்கள் சிலரும் ஆற்றுகையின் இறுதியில் ஏற்படும் கலந்துரையாடலில் பங்கு கொண்டு பல சமூக நலன்பயக்கும் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். பல்கலைக்கழகத்தில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்படுவது இச்செயற்பாடு எட்டிய வெற்றியை தக்கவைப்பதிலும் இது தொடர்ச்சியாக கிழக்கின் பல பகுதிகளிலும் மேற்கொள்ள வழிசேர்ப்பதாகவும் அமைந்துள்ளது. அத்துடன் பல்கலைக்கழகத்தில் இது போன்ற செயற்பாடுகள் அனைத்து பீடங்களில் உள்ள மாணவர்கள், விரிவுரையாளர்களால் ஒன்றிணைந்து மேற்கொள்ளப்படும் போது கிழக்கில் மட்டுமல்லாது இலங்கையின் பலபாகங்களில் உள்ள மக்களுக்கு இது போன்ற சமூக நல செயற்பாடுகள் பரப்பப்பட்டு முன்னெடுக்கும் சாத்தியப்பாடுகள் அதிகம் உள்ளன. இவ்வாறு முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அதன் முழுப்பெருமைக்கும் உரியவர்கள் கிழக்குப் பல்கலைக்கழகத்தினரே ஆவர்...
(எழுத்து-ஸ்ரீ.ஸ்ரீவாகீசன்)














