ஆலையடிவேம்பில் பெண்களை இராணுவத்தில் சேர்த்துக்கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை

ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள இளம் தமிழ் யுவதிகளை இலங்கை இராணுவத்தில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சையானது எதிர்வரும் 10-03-2014, திங்கட்கிழமை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது. 

இது தொடர்பாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பணியாளர்களைத் தெளிவுபடுத்தும் கூட்டமொன்று இன்று (05) காலை பெண்கள் படைப்பிரிவுக்கான கட்டளையிடும் அதிகாரி கேணல் கிரிஷாந்த தலைமையில் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் இராணுவப் படைப்பிரிவு அதிகாரிகளான கேணல் நீல் பெரேரா, மேஜர் பிரசாத் மற்றும் மேஜர் நவரட்ண ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இலங்கை இராணுவத்தின் ஆட்சேர்ப்புப் பிரிவினரால் நடாத்தப்படவுள்ள இந்நேர்முகப் பரீட்சைக்குப் பின்வரும் தகைமைகளைக் கொண்ட யுவதிகள் சமுகமளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* 18 முதல் 24 வயதிற்குட்பட்ட திருமணமாகாதோர்.
* ஆகக்குறைந்தது 5 அடி 3 அங்குல உயரத்தினையுடையோர்.
* ஆகக்குறைந்தது 8 ஆந் தரம் வரை கல்விகற்றோர்.

மேற்குறிப்பிட்ட தகைமைகளையுடையோர் இந்நேர்முகப் பரீட்சைக்குச் சமுகமளிக்கும்போது கீழுள்ள ஆவணங்களைச் சமர்ப்பிக்கும்படியும் கோரப்பட்டுள்ளனர்.

* பிறப்புச் சான்றிதழ்.
* தேசிய அடையாள அட்டையின் பிரதி.
* கல்விச் சான்றிதழ்.
* அண்மையில் பெறப்பட்ட பிரதேச செயலாளரால் உறுதிப்படுத்தப்பட்டு கிராம சேவகரால் வழங்கப்படுகின்ற வதிவிட மற்றும் குணநலச் சான்றிதழ்.
* உறவினரல்லாத இரண்டு நடுவர்களிடமிருந்து அண்மையில் பெறப்பட்ட நற்சான்றிதழ்கள்.
* வேறு சான்றிதழ்கள் (விளையாட்டு, பொதுச்சேவை போன்றவை).

மேலும் இவ்வாறு இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்படும் யுவதிகளுக்கு சுடுகலன்கள் அல்லாத, தொழில்சார் 3 மாதப் பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், இராணுவத்தில் பணியாற்றுகின்ற காலத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் அனைத்து வரப்பிரசாதங்களும் இவர்களுக்கு வழங்கப்படும். தமிழ்ப் பிரதேசங்களில் பணியாற்ற இவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அவர்கள் 15 வருடங்கள் தொடர்ச்சியாகப் பணியாற்றி ஓய்வுபெறுமிடத்து ஓய்வூதிய நன்மைகளும் கிடைக்கப்பெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.