மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை ஊடாக சுவிஸ்லாந்து ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் நிதி உதவி மூலம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தந்தை இழந்த மற்றும் வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் ஞாயிற்றுக்கிழமை மாலை வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் மட்டக்களப்பிலுள்ள பேரவையின் மாவட்ட காரியாலயம் மற்றும் வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம் ஆகியவற்றில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பேரவையின் அலுவலக பொறுப்பாளர் ச.ஜெயலவன், பிரதிநிதிகளான ச.ஜெயகரன், பி.நந்தகோபன், த.சந்திரகுமார், ந.குகதர்சன், துவிச்சக்கர வண்டி பெறும் மாணவர்கள், வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய உதவிக் குரு மற்றும் நிருளவாக சபையினர், மாதர் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இங்கு பேரவையிடம் தாங்கள் தூர இடங்களுக்கு சென்று கல்வி கற்பதற்கு போக்குவரத்து சிரமத்தை எதிர்கொள்கின்றோம் என மாணவர்கள் துவிச்சக்கர வண்டி உதவி கோரி விடுத்த கோரிக்கைக்கு அமைய ஏழு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.
சுவிஸ்லாந்து ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட தொன்னூற்று மூன்று ஆயிரம் (93,000.00) ரூபாய் நிதியில் இருந்து வழங்கி வைக்கப்பட்டது.
இவ்உதவியை வழங்கி வைத்த சுவிஸ்லாந்து ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தினருக்கும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவைக்கும் பெற்றுக் கொண்ட மாணவர்கள் தங்களது நன்றிகளைத்; தெரிவித்தனர்.












