சைவ சமய குருமார்களுக்கும் ஓய்வூதியத்திட்டம் அமுல்படுத்தப்படவேண்டும் - பூ.பிரசாந்தன்

(உ.ஜெஷோமிக்கா)

சைவ சமய கருத்துக்களையும், அதன் தொன்மைகளையும் மக்களுக்கு எடுத்துச் செல்லும் வழிகாட்டிகளாக திகழும் குருமார்களுக்கு ஓய்வூதியத்திட்டம் நடைமுறைப்படுத்தப் படுவதற்கான முன்யோசனைகளை முன்னாள் முதல்வர் சி.சந்திரகாந்தன் முன்னெடுத்து வருகின்றார். இது விரைவில் திட்ட வரைபுகளுக்கும் சட்டதிட்டங்களுக்கும் அமைவாகவும் அமுல்படுத்தப்படவேண்டும் என நாம் இந்துக்கள் அமைப்பின் தலைவர் பூ.பிரசாந்தன் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண குருமார்களுக்கான வேதாகமப் பாடசாலையினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரை நிகழ்த்துகையில், நம்பிக்கை என்ற அச்சாணியைக் அடிப்படையாக கொண்டு சுழலும் மிகத் தொண்மையான இந்து மதத்தின் தர்மக் கோட்பாடுகள் மனிதனை முழுமையான மனிதனாக்குகின்றது. இம்மதக் கருத்தக்களையும் ஏனைய வழிபாடுகளையும் நெறிப்படுத்தும் ஆலய குருமார்களுக்கு நிலையான நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்பு இன்மையினால் இவர்களின் தனித்துவங்களும் எதிர்கால  ஸ்திரத் தன்மையும் கேள்விக் குறியாக உள்ளது. இளமைப்பருவம் தொடக்கம் முதுமைப்பருவம் வரை இறைவனுக்கு தொண்டாற்றும் இந்துக் குருக்கள் முதுமை காலத்தில் தனது குடும்ப வாழ்வாதாரத்தினை தொடர்ந்து நடத்த முடியாத நிலை தோன்றுகின்றது. வாழ்வாதாரத்திற்காக தொழில் புரியும் சுய தொழிலாளர்கள் உட்பட பெரும்பாலான தொழில்களுக்க அரசு ஓய்வூதியத் திட்டங்களை உள்வாரியாகவும், வெளிவாரியாகவும் நடைமுயைப்படுத்த முனைகின்றது, சமுகத்தினை நல்வழிப்படுத்தி இறைவனுக்காக தொண்டாற்றும் குருமார்களுக்கு ஓய்வூதியத்திட்டங்கள் அமுல்படுத்த வேண்டியது கண்டிப்பான தேவையாகும்.

இளமைக்காலத்தில் சமுகத்திற்காகவும், இறைவனுக்காகவும் தொண்டாற்றிய குரு முதுமைப் பருவத்தில் ஏக்கத்துடன் வாடுவாரானால் அது எமது மார்க்கத்தில் “ பிரமகத்தி தோஷம்” வரும் என்பார்கள் என்பது ஒரு புறம் இருக்க ஓய்வூதியத்திற்கான கால எல்லைகள், தகமைகளை விதிமுறைகளாகத் தொகுத்து இதன் அடிப்படையில் இதற்கான நடவடிக்கைகளை முன்னாள் கிழக்கின் முதல்வர் சி.சந்திரகாந்தன் மேற்கொள்வார் என எதிர்பார்க்கின்றோம். நாம் இந்துக்கள் அமைப்பு தொடர்ந்தும் இந்து மதத்தின் வலுவாக்கத்திற்காகவும், குருமார்களின் ஸ்திரத் தன்மையினைப் பேணுவதற்க்கும் பாடுபடும் எனவும் குறிப்பிட்டார்.

ஆரையம்பதி ஸ்ரீ அரசடிப்பிள்ளையார் ஆலயத்தின் ஏற்பாட்டில் சிவஸ்ரீ லோகநாதக் குருக்கள் தலைமையில் கிழக்கு மாகாண குருமார்களுக்காக கிழக்கின் முதலாவது வேத ஆகமப் பாடசாலை திறந்து வைக்கும் நிகழ்வு கடந்த (22) ஆரையம்பதி நந்தகோபன் கலாசார மண்டபத்தில் நடாத்தப்பட்டது.


இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கின் முதல்வரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தன் மற்றும் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் வாசுதேவன், இந்திய தில்லை ஆதின பிரதம குரு கோப்பாய் சிவம் ஐயர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.