தேசத்துக்கு மகுடம் கண்காட்சி! கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையின் செயற்பாடுகள் ஓர் விமர்சன நோக்கு

இலங்கையின் ஒவ்வொரு பகுதியிலும் வருடாவருடம் தேசத்துக்கு மகுடம் கண்காட்சியானது அரசாங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்படுகின்றமை பிரபல்யமான ஓர் விடயமாக இருந்துவருகின்றது. இதில் பல்வேறு அமைச்சுக்களும், அவ்வமைச்சுக்கள் தங்களுக்கு கீழ் செயற்படும் உப அமைச்சுக்கள், திணைக்களகங்கள், ஆணைக்குழுக்கள் என்று பல்வேறு பிரிவுகளுக்கூடாக பல்வேறு காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டும் நிகழ்ச்சிகள் ஒழுங்குபடுத்தப்பட்டும் முன்னெடுக்கப்படுகிறது.

இதில் கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத் துறையும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தொகுதியில் கடந்த சில கண்காட்சியில் காட்சிக்கூடத்தினை அமைத்திருந்தமை சிறப்பம்சமாகும்.  இதே போல் பல்வேறு பல்கலைக்கழகங்களும் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் தேசத்துக்குமகுடம் ஏழாம் கண்காட்சி கடந்த வருடம் அம்பாறையில் இடம்பெற்ற போதும், தேசத்துக்கு மகுடம் எட்டாம் கண்காட்சி இவ்வருடம் குழியாப்பிட்டியில் இடம்பெற்ற போதும் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் காட்சிக்கூடம் வெவ்வேறு வழிகளில் கிழக்கின் பாரம்பரியங்கள், பண்பாடுகள், கிழக்கின் சமூக வாழ்க்கைமுறை என்று கிழக்கின் தனித்துவங்கள் பலவற்றை பிரதிபலித்திருந்தமை சிறப்பம்சமாகும். பல்கலைக்கழகமானது அது அமைந்திருக்கும் பிரதேசத்தின் மத்தியில் தொழிற்படுவது, அப் பிரதேசத்தின் தனித்துவங்களை வெளிப்படுத்துவது பல்கலைக்கழகத்தின் சிறப்பான கடன்களில் ஒன்றாக அமைந்திருக்கின்றது. அதனை சிறப்பாக வெளிப்படுத்தி கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறை அதன் தலைவர் கலாநிதி.சி.ஜெயசங்கர் அவர்களின் வழிகாட்டலிலும், துணைவேந்தர் கலாநிதி.கி.கோவிந்தராயன் அவர்களின் முனைப்பிலும் செயற்பட்டிருந்தமை கண்கூடாக காணமுடிந்தது.

2013ல் அம்பாறையில் இடம்பெற்ற தேசத்துக்கு மகுடம் கண்ணாட்சியில் கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறைக் காட்சிக்கூடமானது கிழக்கில் சடங்குக் கோயில்களில் பயன்படுத்தும் சடங்குப்பொருட்களான அம்மானைக்காய், வாள், வில், சிலம்பு, திரிசூலம், உடுக்கு, பொல், விளக்கு, குடம், பட்டுத்துணி முதலியவற்றை மையமாக கொண்டும் இவற்றுடன் கிழக்கில் வடமோடி, தென்மோடிக் கூத்துக்களில் பயன்படுத்துகின்ற ஆடை, ஆபரணங்கள், அமையப்பெற்ற மாதிரிப்பொம்மைகள், நுண்கலைத்துறை மாணவர்கள் வடமோடி, தென்மோடிக் கூத்துகளில் பங்குபெற்றிய போது எடுக்கப்பெற்ற புகைப்படங்கள், கிழக்கின் கட்டடக்கலைக்கே உரிய களரி, தோரணம் மற்றும் கிழக்கின் மூத்த அண்ணாவியார் நொஞ்சிப்போடி அவர்களினதும், கிழக்கின் பறைமேளக் கலைஞர்களுடையதும் புகைப்படங்களையும் காட்சிப்படுத்தியது மட்டுமல்லாது பாரம்பரிய இசைக்கருவிகளையும், வீடுகளில் அன்று அன்றாட பாவனைப்பொருட்களாக பயன்படுத்தப்பட்டு இன்று கலைப்பொருட்களாக காணப்படுகின்ற பல வெண்கலப் பொருட்களையும், வேறு பல சித்திரங்களையும் காட்சிப்படுத்தியிருந்தது. இவற்றுடன் காட்சிக்கூடத்தின் கீழ்ப்பகுதியில் கூத்துக்களரி அமைக்கப்பட்டு அதன் மேல் பகுதியில் தோரணம் கட்டப்பட்டிருந்தது. இக்களரியில் கண்டிஅரசன் ஸ்ரீவிக்கிரம ராயசிங்கன் தென்மோடிக் கூத்து நுண்கலைத்துறை மாணவர்களால் அளிக்கை செய்யப்பட்டது.

பெருவாரியான சிங்கள மக்களையும், ஓரளவான முஸ்லிம், தமிழ் மக்களையும் பார்வையாளர்களாக கொண்ட இக்கண்காட்சியின் விஷேட அம்சம் யாதெனில் சிங்கள மக்கள் இத்தகைய சில கிழக்கு பாரம்பரியங்களை தங்களுடைய பிரதேசங்களில் காணப்படும் சிலவற்றுடன் தொடர்புபடுத்தி விளங்கிக்கொண்டமை, சில அவர்களுடைய பிரதேசத்தில் காணப்படுகின்றமை இன்றைய தலைமுறையினர் அவற்றை அறியாதவிடத்து அதனை அறிந்து கொள்வதற்கான களமாக நுண்கலைத்துறை காட்சிக்கூடம் அமைந்திருந்தமை முதலியன குறிப்பிடத்தக்கது. உதாரணமாக சிங்கள மக்களிடம் வழக்கிலுள்ள சிலம்புவ, கெச்(ஞ்)சி, த்தீசூல முதலியன முறையே தமிழில் சிலம்பு, சதங்கை(கெஞ்சியை ஒத்தது), திரிசூலம் முதலியவற்றை குறிப்பிடுவதும் தென்மோடிக்கூத்தில் ஆடிய கண்டிஅரசன் ஸ்ரீவிக்கிரம ராயசிங்கன் கதையானது சிங்கள மக்கள் மத்தியில் காலி, அம்பலாங்கொடை பக்கங்களில் அளிக்கை செய்யப்படும் 'றூகட' (பொம்மைகளுக்கூடான அளிக்கை)ல் இடம்பெறுவதும் அங்கும் இக்கூத்தில் இடம்பெறுவது போல் விக்கிரம ராயசிங்கன் தனது மந்திரியின் பிள்ளைகளை மந்திரியின் மனைவியைக்கொண்டு உரலில்(சிங்களத்தில் வங்கடிய) போட்டு துவைக்கும் சம்பவம் இடம்பெறுவது கலை கலாச்சார, பாரம்பரிய பகிர்வுக்கான களமாக, புரிந்துணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைந்து காணப்பட்டன.

இங்கு மும் மொழிகளிலும் குறிப்புக்கள் எழுதப்பட்டும், விளக்கங்கள் கொடுக்கப்பட்டும் வெகுவாரியாக இருந்ததைப் போல் இவ்வருடம் எட்டாவது தேசத்துக்கு மகுடம் கண்காட்சி குருநாகல் குழியாப்பிட்டியில் இடம்பெற்ற போதும் நுண்கலைத்துறையின் செயற்பாடு எடுத்துக்காட்டும்படியாக அமைந்திருந்தது. இறுதியாண்டு அம்பாறையில் ஏழாவது தேசத்துக்கு மகுட கண்காட்சியில் காட்சிப்படுத்தியதிலிருந்து பல வித்தியாசமான முறைகளில் ஒரே நோக்கமான கிழக்கின் பாரம்பரியங்கள், பண்பாடுகள், கிழக்கின் சமூக வாழ்க்கைமுறை என்று கிழக்கின் தனித்துவங்கள் பலவற்றை பிரதிபலிப்பதையும், கூட்டுச் சமூக வாழ்வையும் ஒற்றுமையையும் கலைகளுக்கூடாக ஏற்படுத்தல் என்ற நேயமான தொனிப்பொருளில் காட்சிக் கூடத்தினை அமைத்திருந்தது. இக்காட்சிக்கூடத்தில் பாரம்பரிய வாத்தியக்கருவிகள், செந்நெறி வாத்தியக்கருவிகள் என்பனவும் ஏழாவது தேசத்துக்கு மகுடம் கண்காட்சியில் இடம்பெற்றது போல் தமிழர் கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் கூத்துக்களரி, தோரணம் முதலியவற்றின் புகைப்படங்களும் சில தோரண வகைகளின் மாதிரிகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததோடு வேடுவர் சமூகத்தின் சடங்குகளிலும், மூலிகைகளாகவும் பயன்படுத்தப்படுகின்ற காய்கள், செடிகள், பூக்கள் முதலியவற்றையும் முஸ்லிம்களின் பாரம்பரிய கலையான கழிகம்பு, பறங்கியரின் பாரம்பரிய கலைவடிவமான கபறிஞ்ஞா, தமிழர்களுடைய சிலம்பாட்டம், தப்பு, பறை முதலியவற்றின் ஆற்றுகைநிலைப் புகைப்படங்கள், வேடுவச்சடங்குகளின் புகைப்படங்கள் முதலியனவும் காட்சிப்படுத்தியிருந்தது. காட்சிக்கூடத்தின் மையம் 'கொம்புமுறி' சடங்கைப்பற்றியதாகவும், அக் கொம்புகள் இரண்டையும் அதற்குரிய முறையில் செய்தெடுத்து பிணைக்கப்பட்டும் இருந்தது அனைவரையும் கவர்ந்த ஒன்றாக அமைந்தது.

மேலும் நுண்கலைத்துறையினரால் முன்னெடுக்கப்பட்டிருந்த நிகழ்ச்சிகளில் பிரசுரிக்கப்பட்ட பிரசுரங்கள், சஞ்சிகைகள், தபால் அட்டைகள், பனையோலை அழகுப்பொருட்கள், கைத்தறி துணிமூலமாகவும் இதர இயற்கைப் பொருட்களான சிப்பி, சங்கு முதலியவை மூலம் செய்யப்பட்ட கைவினை அழகுப்பொருட்கள் விற்பனைக்கும் பார்வைக்குமாக வைக்கப்பட்டிருந்தன.

இக் காட்சிக்கூடம் பார்வையாளரை கவர்ந்தவிதம் தனிச்சிறப்பே!
கண்காட்சிக்கூடத்தில் நுழைந்தவுடனே பார்வைக்குப்படுவது கொம்புமுறி சடங்கில் பயன்படுத்தப்படும் இரு கொம்புகளும்தான். கிழக்கு தமிழ் இன மக்களின் பாரம்பரியங்களில் ஒன்றாக காணப்படுவதும் விவசாயத்துக்கான மழையில்லா வரட்சிக் காலங்களில் மழை வரும் என்ற நம்பிக்கைகளின் அடிப்படையில் நிகழ்த்தப்படுவதும், விளையாட்டாக நிகழ்த்தப்படுவதுமாகிய இக்கொம்புமுறி அங்கு பார்வையாளர்களாக வந்த வேறு பிரதேச தமிழ், முஸ்லிம் மக்கள் அதனை அறிந்து கௌ;வதற்கான வெளியினை ஏற்படுத்தியதோடு சிங்கள இன மக்களுக்கு அவர்களது பக்கங்களில் இதனைஒத்த 'அங் அதீம' என்ற பெயரில் நிகழ்த்தப்படும் செயற்பாட்டை மீட்டுவதாக அமைந்தது. தமிழ்ப்பகுதிகளில் கொம்புமுறியில் வடசேரி, தென்சேரி என்ற இரு குழுக்களாக, இரு குழுக்களுக்குரிய கொம்புகளும் காணப்படுவது போல சிங்கள மக்கள் மத்தியில் 'உடுப்பில்ல, யட்டப்பில்ல' என்ற குழுக்கள் காணப்படுவதையும் ஒப்பீட்டு விளங்குவதற்கான சந்தர்ப்பத்தை அம்மக்கள் பெற்றிருந்தமையை அவர்களது உரையாடல் மூலம் அறியமுடிந்தது.

தொடர்ச்சியாக கிழக்கின் கட்டிடக்கலையின் பிரதிபலிப்பான தோரணம், அதன் மாதிரி வடிவங்கள், களரியின் புகைப்படங்கள் பார்வையாளர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் விடயங்களாகின. சிங்கள மக்கள் அத்தோறணத்தை தாம் 'தொறண' என்று கூறுவர் என்றும் அதனை தமது இளம் சந்ததியினருக்கு காட்டியும் மகிழ்ந்தனர். அத்துடன் தமிழர்களுடைய சிலம்பாட்டம் தொடர்பான புகைப்படத்தை சிங்கள மக்கள் அவர்களுடைய 'அங்கம்பொற' கலையில் காணப்படும் ஒரு பகுதியை ஒத்திருப்பதையும் ஆனால் சிலம்பாட்டத்தின் தனித்துவம் வேறுபட்டதனையும் காட்சிக்கூடத்தில் இருந்த நுண்கலைத்துறை மாணவர்களுடன் கலந்துரையாடினர். இது தவிர பாரம்பரிய இசைக்கருவிகளான தப்பு, பறை, மத்தளம், சவணிக்கை, உடுக்கு, றபான், தாளம், கொம்பு முதலியனவும் சாஸ்திரிய இசைக்கருவிகளான வீணை, மிருதங்கம், தவில், கடம் முதலியனவும் அவற்றுக்குரிய சிறப்புக்களை வெளிப்படுத்தியதுடன் மாணவர்களாலும், அண்ணாவியராலும் அவ்வப்போது பார்வையாளர்களுக்கு இசைத்துக்காட்டப்பட்டும் பார்வையாளர்கள் அதனை இசைத்துப் பார்க்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டும் இருந்தது. இது பார்வையாளர்கள் பலருக்கு புது அனுபவத்தை ஏற்படுத்தியிருந்தது. இதுதவிர மட்டக்களப்பிலிருந்து அழைத்து வரப்பட்ட பறங்கியர் குழாம் அவர்களுடைய பாரம்பரிய இசையான கபறிஞ்ஞாவை இடைவிடாது இசைத்தது கண்காட்சிக்கூடத்தை உயிரூட்டியவண்ணம் இருந்தது. இவற்றுடன் அவ்வவ்போது சில பாரம்பரிய கலைகளின் காட்சிகள் திரையில் காட்டப்பட்டன. இதுவும் காட்சிக்கூடத்தை உயிரூட்டியது.

2013ல் இடம்பெற்ற தேசத்துக்குமகுடம் கண்காட்சியில் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை ஆற்றுகை, காட்சிப்படுத்தல் என்று எவ்வாறு இருவழிகளில் செயற்பட்டதோ அதேபோல இம்முறையும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பிரதான காட்சிக்கூடத்துக்கு முன்னால்  ஆற்றுகைக்கான இன்னுமோர் வெளியை அமைத்து இருந்தது. இங்கு கூத்துக்களரியும், தோறணமும் அத்துடன் வேடுவர் சடங்குப் பந்தல்கள் முதலியன நிர்மானிக்கப்பட்டும் கூத்துப்பாடல்கள், சடங்கு நிகழ்வுகள் ஆற்றுகை செய்யப்பட்டும் இருந்தன. ஏழாவது தேசத்துக்கு மகுடம் கண்ணாட்சியில் மாணவர்களைக் கொண்டு ஆற்றுகைகளை மேற்கொண்ட நுண்கலைத்துறை எட்டாவது இக்கண்காட்சியில் கிழக்கிலிருந்து பாரம்பரிய கலைஞர்களை நேரடியாக பங்குகொள்ள வைத்து ஆற்றுகைகளை மேற்கொள்ள வைத்திருந்தது இன்னுமோர் சிறப்பம்சமே! இறுதியாக இக்காட்சிக்கூடத்தில் பல்வேறு பார்வையாளர்களுக்கு மத்தியில் போரில் அங்கவீனமுற்ற இராணுவ வீரரொருவர் இயலாத நிலையில் பல காட்சிக்கூடத்தைப் பார்த்து வந்தும் அதே ஈடுபாட்டுடன் இக்காட்சிக்கூடத்தினை பார்த்து பின்வருமாறு கருத்து பகிர்ந்தமை மெய்சிலிர்க்க வைத்தது. 'தமிழ் மக்களுடைய மனங்களை இக் கலைகளைவிட வேறு எதனைக்கொண்டும் எடை போட்டுவிட முடியாதுளூ இவ்வாறு இனிமையான கலைகள் அவர்களது மனங்களையும் வெளிப்படுத்துகின்றன. தன்னுடைய வாழ்க்கையில் தமிழ் மக்களுடைய உறவுப்பாலத்தை தனது குடும்பத்தாருடன் பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ளவனாக இருக்கிறேன்' என்று உணர்ச்சி பொங்க கூறினார். நுண்கலைத்துறை எதிர்பார்த்ததைவிட மேலாக அடைந்துவிட்டதை உணர்கிறேன்.

(எழுத்து:ஸ்ரீ.ஸ்ரீவாகீசன்)