பெரியகல்லாறு மாவட்ட வைத்தியசாலையில் தொடர்ச்சியாக நடைபெற்ற தேசிய சகாதாரவார நிகழ்வுகள்.

( ரவிப்ரியா )
பெரியகல்லாறு மாவட்ட வைத்தியசாலையின் தேசிய சுகாதார வார நிகழ்வுகள் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் ம.ருதேசன் தலைமையில்
தினமொரு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்றது. பாடசாலை மாணவர்களும், வைத்தியசாலை உத்தியோகத்தர்களும் இணைந்து மாபெரும் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றையும், நடமாடும் பிரசாரத்தையும் செய்தனர்.   தொற்றா நோய்கள் பற்றிய சிகிச்சை முகாம் மத்தியல்லூரி, உதயபுரம் தமிழ் வித்தியாலயம் என்பவற்றில் நடைபெற்றதுடன் , இது பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்குகளும் நடாத்தப்பட்டன.

சனியன்று வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் சுகாதாரவார பரிசளிப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அதில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் உளநல பிரிவின் டாக்டரும் முன்னாள் இவ் வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரியுமாக கடமையாற்றி வைத்தியசாலையின் பொற்காலத்தை உருவாக்கிய டாக்டர் செல்லையா.வாமதேவன் கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினராக மட்டக்களப்பு மாவட்டத்தில் இன மத வேறுபாடின்றி ஒவ்வொரு வீட்டிலும் அவர் சேவையை நினைவில் வைத்திருக்கும் அளவிற்கு மனிதாபிமானத்தடன் செயற்பட்ட மகப்பேற்று நிபுணரான டாக்டர் சீனித்தம்பி.தங்கவடிவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்விற்கு, முழுமையும் பெருமையும் சேர்த்தார். அதேபோல் பொறியியலாளர் கே.லோகநாதன்,; வளர்ந்துவரும் அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.முகுந்தன், ஆகியோரும் நிகழ்விற்கு மெருகூட்டினர்.

கௌரவ விருந்தினர்களாக வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு செயலாளர் ஈ.தவராஜ், எழுத்தாளரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான வி.கே.ரவீந்திரன் (ரவிப்ரியா), ஸ்ரீசர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்தின் செயலாளர் பெ.அகிலேந்திரன், ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலய தலைவர் சி.செல்வராசா, தொழிலதிபர் கே.சுதர்சன் (பரிசுப் பொருட்களுக்கு அனுசரணை வழங்கியவர்) ஆகியோரும் , பட்டிருப்பு வலய உதவிக் கல்விப் பணிப்பாளர்களான த.நடேசமூர்த்தி , எஸ்.அன்னநவபாரதி மற்றும் பல பிரமுகர்களும் வைத்தியசாலையின் உத்தியோகத்தர்களும் மாணவர்களும்; கலந்து கொண்டனர்.

 ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் வரவேற்கப்பட்டனர். சம்பிரதாயப்படி மங்கல விளக்கேற்றி இறைவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. சிறுமி ருதேசன் அஸ்வெனி - வரவேற்பு நடனம் முலம் பார்வையாளர்களை பரவசப்படுத்தினார்.

தொடர்ந்து போதைவஸ்து பாவனை, மற்றும் புகைத்தல் சம்பந்தமான பேச்சுப் போட்டிகளில் முலாம் இடத்தைப் பெற்ற கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலய மாணவிகளான செ.கௌசிகா, வி.நிதுசனா ஆகியோர் கருத்துச் செறிந்த பேச்சினாலும், சிறந்த பேச்சாற்றலாலும் சபையோரை கவர்ந்தனர்;. அதனைத் தொடர்ந்து டாக்டர் ம.ருதேசன் தொற்றா நோயை எவ்வாறு தடுக்கலாம் என்பது பற்றியும், டாக்டர் எம்.முகுந்தன் புகைத்தலின் பாதிப்பு பற்றியும், சிரேஸ்ட எழுத்தாளர் வி.கே.ரவீந்திரன் (ரவிப்ரியா) போதை வஸ்து சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றியும் இரத்தினச் சுருக்கமாக பெறுமதிமிக்க கருத்தரை நிகழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதம மற்றும் சிறப்பு விருந்தினர்களால் பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டது. சுகாதார வாரத்தின் சிறப்பம்சமாக சிரமதானங்கள் வைத்தியசாலை வளாகத்திலும், ஸ்ரீ சர்வார்த்த சித்தி விநாயகர் ஆலயத்திலும் மாணவர்களாலும், வைத்தியசாலை உத்தியோகத்தர்களாலும் மேற் கொள்ளப்பட்டது.

மொத்தத்தில் வருமுன் காப்போம் என்ற தொனிப்பொருளில் டெங்கு ஒழிப்பு,  தொற்றா நோய்கள், மற்றும் புகைத்தல் போதைவஸ்து பாதிப்பு, இதற்கான நடமாடும் சிகிச்சை முகாம், விழிப்புணர்வு ஊர்வலம், சிரமதானம் என எல்லா வகையிலும் நடைமுறை சுகாதார பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பொது மக்கள் விளங்கிக் கொள்ளுமளவிற்கு அர்த்தபுஸ்டியாக சமூக நோக்கோடு, மிகவும் பயனுள்ள வகையில் நடாத்திய மாவட்ட வைத்திய அதிகாரியும் உத்தியோகத்தர்களும் பாராட்டுக்குரியவர்கள்.