அடர்ந்த காட்டுப்பகுதியான செம்பிமலையில் அமைந்துள்ள ஸ்ரீ செம்பீஸ்வரர் ஆலய மகா சிவராத்திரி விழா

(த.லோகதக்சன்)
இந்தியாவின் காஷ்மீர் தேசத்தில் அவதரித்த வணக்கத்திற்குரிய சுவாமிஜி ஸ்ரீலஸ்ரீ சோமேஸ்வரானந்தகிரி திருகோணமலையில் குச்சவெளி பிரதேசத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியான செம்பிமலையில் அமைத்து வைக்கப்பட்ட ஸ்ரீ செம்பீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி விழா கடந்த புதன்கிழமை வெகுவிமர்சியாக கொண்டாடப்பட்டது.

நீண்ட நாட்களாக பராமரிப்பற்ற நிலையில் இருந்த இவ்வாலயத்தை குச்சவெளிப் பிரதேச கிராம மக்களும், குச்சவெளி பிரதேச செயலக இந்து கலாசார உத்தியோகத்தர் நே.பிருந்தாபன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் வெ.தழிழ்ச்செல்வி,  குச்சவெளி சித்தி விநாயகர் ஆலய தர்மகர்த்தா கே.தருமலிங்கம் உள்ளிட்டோர் உழவு இயந்திரம் மூலம் சென்று ஆலயத்தை துப்பரவு செய்து பூசகர் எஸ்.சிவானந்தம் தலைமையில் பூசை வழிபாடுகளை நடாத்தியிருந்தனர்.

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இவ்வாலயம்  நீண்டகால வரலாற்றைக் கொண்டதாகும். இவ்வாலயத்தினுடைய சிறப்பு மலை உச்சியிலே வற்றாத இரு தீர்த்தகேணிகள் அமைந்திருப்பது விஷேட அம்சமாகும்.

சுவாமிஜி ஸ்ரீலஸ்ரீ சோமேஸ்வரானந்தகிரி அவர்களால்; பின் நாளில் மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயமும், மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் சோமகலாநாதர் ஆலயமும் மக்களின் ஆன்மீக ஈடேற்றத்திற்காக ஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.