வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த குடும்பங்களுக்கு வலுவூட்டல் பயிற்சி

(சிவம்)
 வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கியிருக்கும் 129 குடும்பங்களுக்குமான வலுவூட்டல் நிகழ்ச்சித் திட்டமொன்றைத் தாம் தொடங்கியிருப்பதாக பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் பணிப்பாளர் சல்மா அமீர் ஹம்ஸா தெரிவித்தார்.

வன்னியிருந்து இடம்பெயர்ந்து  வந்து  ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் வாழ்ந்து கொண்டிருக்கும் 27 குடும்பங்களுக்கான வலுவூட்டல் பயிற்சியை நேற்று வியாழக்கிழமை (06.03.2014)  ஆரம்பித்து வைத்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவில் 87 குடும்பங்களும், மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் 15 குடும்பங்களும், ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் 27 குடும்பங்களுமாக மொத்தம் 129 குடும்பங்கள் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது தங்கியிருக்கின்றார்கள்.

இந்தக் குடும்பங்களுக்கான வலுவூட்டல் நிகழ்ச்சித் திட்டத்தை தாம் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்த பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் பணிப்பாளர் சல்மா அமீர் ஹம்ஸா இவர்களுக்கான ஒரு வருட வலுவூட்டல் நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக தற்சமயம் தலைமைத்துவம், சமூக அணிதிரட்டல், சுகாதார சௌக்கிய மேம்பாடு, பெண்கள் சிறுவர் உரிமைகள் சமூகப் பாதுகாப்பு, வாழ்வாதாரத் தொழில் முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளித்து வருவதாகவும் அவர் கூறினார்;.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த 93 குடும்பங்களில் 15 பேர் யுத்தத்தின் காரணமாக கை, கால், கண் என்பன பாதிக்கப்பட்டும் கடுமையான உளநலப் பாதிப்புக்கு உள்ளாகியும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை தமக்கு அளிக்கப்படும் வாழ்வாதாரத் தொழில் முயற்சிகளைத் தொடங்குவதற்கான பயிற்சிகள் தமக்கு மிகுந்த பிரயோசனம் மிக்கதாய் அமைந்திருப்பதாய் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த விதவைப் பெண்ணான களுவன்கேணியைச் சேர்ந்த எஸ். சரஸ்வதி தெரிவித்தார்.
நேற்றைய பயிற்சி நிகழ்வின் வளவாளராக மன்முனைப்பற்றுப் பிரதேச செயலாளர் வி. வாசுதேவன் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினார்.