கல்முனை ஆதார வைத்தியசாலை வரலாற்றில் முதற்றடைவையாக முறையான அவசர சிகிச்சைப் பிரிவு ( ETU) பல கோடிருபா செலவில் நிருமாணிக்கப்பட்டுவருகிறது.இன் னும் ஒரு வாரத்தில் இதன் நிருமாணப்பணிகள் நிறைவுபெறவுள்ளது.மார்ச் மாதத்தில் திறந்துவைக்கப்படவுள்ளது.
விரைவில் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இச்சிகிச்சைப் பிரிவை திறந்துவைப்பார்.அதற்கான ஏற்பாடுகளை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரனுடன் இணைந்து பொறியியலாளர் வீ.கிருஸ்ணமூர்த்தி தலைமையிலான வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அவசர சிகிச்சைப்பிரிவுடன் இணைந்தவாறு புதுமுறையான கன்ரீன் ஒன்றும் அமர்ந்து உண்ணும் குடைவடிவலான கொட்டகையும் அமைக்கப்பட்டுவருகிறது. இதைவிட 100 வருடங்கள் பழைமைவாய்ந்த பழயை வெளிநோயாளர் கட்டடம் புனருத்தாரணம் செய்யப்பட்டுவருகிறது. அவைகூட இன்னும் ஓரிரு வாரத்தில் நிறைவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி. டாக்டர்.எஸ்.முரளீஸ்வரன் இதுபற்றிக் கூறுகையில்;
''கல்முனை ஆதார வைத்தியசாலை வரலாற்றில் பூரண வசதிகளுடன்கூடிய முறையான அவசர சிகிச்சைப்பிரிவு ( E.T.U) அமைக்கப்படுவது இதுவே முதற்றடைவையாகும்.இதுவரை காலமும் பாரிய வசதியீனங்களுக்கு மத்தியில் ஒரு சிறு அறையில் தற்காலிகமாக இவ் அவசர சிகிச்சைப் பிரிவு இயங்கிவந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் ஒரு குறை. இப்பிரிவுக்குரிய பல லட்சருபா பெறுமதியான உபகரணங்கள் அனைத்தையும் சுகாதார அமைச்சு தரும் என்று எதிர்பார்க்கமுடியாது.
எனவே பொதுநல அமைப்புகள் வங்கிகள்; தனவந்தர்கள் நலன்விரும்பிகள் இவ்வுபகரணங்களை அன்பளிப்புச்செய்ய முன்வரவேண்டும்.அப்போதுதான் திறந்தவுடன் உடனடியாக இப்பிரிவை இயங்கவைக்கமுடியும்.மக்கள் சிறந்த சேவையையும் பெறமுடியும்.
இதேவேளை இப்பழைமை வாய்ந்த வைத்தியசாலையில் இதுவரை அதிதிவீர சிகிச்சைப்பிரிவு (I.C.U) இல்லையென்பதும் இங்கு குறிப்பிட்டுச் சொல்லலாம்.
அவசர சிகிச்சைப்பிரிவு திறந்துவைக்கப்படும் நேரத்தில் வெளிநோயாளர் பிரிவுக்கட்டடமும் புதிய சிற்றுண்டி சாலையும் (கன்ரீன்) திறந்துவைக்கப்படும்' என்றார்.


















