வவுணதீவு பிரதேசத்தில் 15 நிரந்தர வீடுகளுக்கு அடிக்கல் நடப்பட்டது.

(எஸ்.சதீஸ்  & வரதன்)
மண்முனை மேற்கு - வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள உன்னிச்சை, இராஜதுரை நகர் கிராமத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மனிதாபிமான உதவித் திட்டத்தின் கீழ் 15 நிரந்தர வீடுகளை  சுவீடன் கூட்டுறவு நிறுவனத்தின் நிதி உதவியில் நிர்மாணித்து வழங்குவதற்காக இன்று 24ம் திகதி அடிக்கல் நடப்பட்டது.

இந் நிகழ்வு சுவீடன் கூட்டுறவு நிறுவனத்தின் கிழக்கு மாகாணத்திற்கான திட்ட ஒருங்கிணைப்பாளர்  T. மயூரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இங்கு  நிர்மாணிக்கப்படவிருக்கும் வீடுகள் ஒவ்வொன்றும் தலா ஏழு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் பயனாளிகளின் ஒத்துழைப்புடன் நிர்மாணிக்கப்படவுள்ளன என்றும் இவை நான்கு மாத காலப்பகுதிக்குள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும் என்றும் சுவீடன் கூட்டுறவு நிலைய நிறுவனத்தின் கிழக்கு மாகாணத்திற்கான திட்ட ஒருங்கிணைப்பாளர் ரீ. மயூரன் தெரிவித்தார்.

இந் நிகழ்வில், மண்முனை மேற்கு வவுணதீவுப் பிரதேச செயலாளர் எஸ். சுதாகர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் , சுவீடன் கூட்டுறவு நிறுவன கணக்காளர் திருமதி.D. லெவனா, பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் நிர்மல்ராஜ், சுவீடன் கூட்டுறவு நிறுவனத்தின் தொழிநுட்ப உத்தியோகத்தர் உ.தேவரவி, மட்டக்களப்பு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தின் பொது முகாமையாளர் எம். நவறஞ்சன், உட்பட இன்னும் பல பிரதிநிதிகளும் கிராம மக்களும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதன்போது மக்கள் மத்தியில் சுவீடன் கூட்டுறவு நிறுவனத்தின் கிழக்கு திட்ட இணைப்பாளர் T. மயூரன் அவர்கள் உரையாற்றுகையில்,  'சுவீடன் நாட்டின் உதவியால் வழங்கப்படும் இவ் நிதியினைக் கொண்டு கூடுதலாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மனிதாபிமான உதவியளிப்பு திட்டத்தின்கீழ் இவ் உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றது.

இவ் வீட்மைப்புத் திட்டம் இப் பிரதேசத்தில் முன்னர் கடமையாற்றிய பிரதேச செயலாளர் வெ.தவராஜா அவர்களின் வேன்டுகோளுக்கமைய பொருத்தமான முறையில் தெரிவுசெய்யப்பட்டு இக் கிராமத்திற்கு வழங்கப்படுகின்றது.

இக் கிராமத்தில் வீடுகள் வழங்கப்படும் அனைவருக்கும் எதிர்காலத்தில் வீடு இல்லாத குறை தீரும். எனவே இங்குள்ள அனைத்து மக்களும் உழைப்பால் உயர்வடைந்து வாழ்க்கைத்தரத்தினை உயர்த்தவேன்டும்'.

என கூறினார்.