மட்டக்களப்பில் பிறந்த ஊடகவியலாளா் சிவராம் அவா்களின் 9வது நினைவு தினம் இன்று!

(தீரன்)
மட்டக்களப்பு மண்ணில் பிறந்து ஊடகத்துறையில் சிறந்து விளங்கிய தராக்கி என்றழைக்கப்பட்ட தர்மரெட்ணம் சிவராம் அவர்களின் 9வது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.


ஊடகத்துறை வரலாற்றில் மிகவும் சவால் நிறைந்த காலகட்டத்தில் துப்பாக்கி முனைகளின் அச்சுருத்தல்களுக்கு மத்தியில் தனது கருத்துக்களின் ஊடாக உண்மைகளை உரக்கச்சொன்ன மிகவும் துணிச்சல் மிக்க ஊடகப் போராளியாக திகழ்ந்த ஊடகவியலாளர் தர்மரெட்ணம் சிவராம் அவா்களை மட்டக்களப்பு மாவட்டத்தின் ஊடகவியலாளா்களாகிய நாம் நினைவு கூறுகின்றோம்.


'தராக்கி' மற்றும் 'எஸ்.ஆர்' ஆகிய புனைபெயர்களில் சிவராம் பல ஆக்கங்களை எழுதிவந்திருந்தார். ஆங்கில ஊடகத்துறை மூலமே சிவராம் தன்னை ஊடகவியலாளராக அறிமுகப்படுத்தினார். எனினும் பிற்காலத்தில் ஆங்கிலப் பத்திரிகைகளில் ஆக்கங்கள் எழுதுவதை சிவராம் நிறுத்திக்கொண்டார்.

இந்த நிலையில் 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதி  "நான் சரியென்று உறுதியாகக் கண்டதை எழுதுகின்றேன். அதற்காக எந்த அழிவையும் சந்திக்க தயாராகவே இருக்கின்றேன். ஓடிவிடமாட்டேன்..." என்று வீரகேசரி வார வெளியீட்டில் சிவராம் கட்டுரையொன்றை எழுதியிருந்தார்.

இதேவேளை வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் பத்திரிகையாளர்கள் பலரை கணினி யுகத்திற்குள் கொண்டுவந்த பெருமையும் சிவராமையே சாரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தர்மரெட்ணம் சிவராம் அவா்களின் அரசியல், போரியல், பாதுகாப்பு சார்ந்த அவரது கட்டுரைகள் உள்நாட்டில் மாத்திரமின்றி உலகளவிலும் பரவாக வாசிக்கப்பட்டன.

பத்தி எழுத்தாளராக அரசியல் ஆய்வாளராக படைத்துறை ஆய்வாளராக பல்வேறு பரிமாணங்களை கொண்ட சிவராம் ஆரம்பத்தில் 1980 களில் விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் (புளொட்) முழுநேர செயற்பாட்டாளராக மாறிய சிவராம் 1990 களின் நடுப்பகுதியில் அதன் அரசியல் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமாகக் கடமையாற்றியவர்.

இவா் கடந்த 2005-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டியில் காவல் நிலையம் முன்பாக   வெள்ளை நிற கூடுந்து (வான்) ஒன்றில் வந்த ஆயுததாரிகளால் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட பின்னர் வாகனமொன்றில் கொண்டு வரப்பட்டு இலங்கை பாராளுமன்றத்துக்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தலையை இலக்கு வைத்தே 9 மில்லி மீட்டர் வகை கைத்துப்பாக்கியினால்  இவா் இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

வாழ்க்கை குறிப்பு-
சிவராம் கிழக்கிலங்கையின் மட்டக்களப்பில் மகேஸ்வரி, புவிராஜகீர்த்தி தர்மரட்ணம் அகியோருக்கு மகனாகப் பிறந்தார். சிவராமின் தந்தையார் கேம்பிறிட்ச் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். அவரின் பாட்டனார் சபாபதிப்பிள்ளை தர்மரெட்ணம் (வன்னியனார்) 1938-ஆம் ஆண்டில் மட்டக்களப்பின் இரண்டாவது தெரிவு செய்யப்பட்ட இலங்கை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.

சிவராம் 1989 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் யோகரஞ்சனி என்பவரை வாழ்க்கைத் துணையாக ஆக்கிக்கொண்ட சிவராமிற்கு வைஸ்ணவி, வைதேகி என்ற இரு மகள்களும் சேரலாதன் என்ற மகனும் உள்ளனர்.

ஆரம்பக்கல்வியை புனித மிக்கேல் தேசியப் பாடசாலையில் கற்றார். அதைத் தொடர்ந்து கொழும்பில் அக்குவானாஸ் கல்லூரியில் தொடர்ந்தார். பல்கலைக்கழகத்திற்கு தெரிவான இவர் பேராதனைப் பல்கலைகழகத்தில் அனுமதிபெற்றார். செப்ரெம்பர் 1981இல் பேராதனைப் பல்கலைக் கழகத்திற்குச் சென்ற அவர் ஆங்கிலத்தினையும் ஒரு பாடமாகக் கொண்டு இரண்டு ஆண்டுகள் மட்டுமே அங்கு பயின்ற பின்னர் அரசியல் ஈடுபாட்டினாலும் 1983 இல் இடம்பெற்ற இனக்கலவரங்களினாலும் பல்கலைக்கழகக் கல்வியைக் கைவிட்டார்.


இன்று ஊடகத்துறையில் உண்மையாய் செயற்படும் நண்பா்களுக்கு இது சமா்ப்பணம்