(தியாஷினி)
அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டுக்கழகத்தின்
இருபத்தைந்தாமாண்டு நிறைவையும், மலர்ந்திருக்கும் ஜய புதுவருடத்தினைச் சிறப்பிக்கும்
வகையிலும் அக்கழகத்தினரால் நடாத்தப்பட்ட மாபெரும் சித்திரைப் புத்தாண்டு
விளையாட்டுப் போட்டிகள் இன்று (15) பிற்பகல் அக்கரைப்பற்று – 9, ஸ்ரீ தம்மரதன
சிங்களப் பாடசாலை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றன.
இந்நிகழ்வுக்கு விசேட அதிதிகளாக ஆலையடிவேம்பு பிரதேச சபை
உறுப்பினர் ஆர்.வடிவேல், ஸ்ரீ மருதடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத் தலைவர்
எஸ்.சோமசுந்தரம் ஆகியோரும், கௌரவ அதிதிகளாக நிந்தவூர் பிரதேச அபிவிருத்தி
வங்கியின் முகாமையாளர் கே.புஸ்பராஜா, கிராமசேவை உத்தியோகத்தர் ஏ.தர்மதாச,
விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல்.தாஜுதீன், சமாதான நீதவானும் ஆலையடிவேம்பு பிரதேச
சபையின் முன்னாள் தவிசாளருமான ஆர்.நடராஜா மற்றும் சமாதான நீதவானும் ஆலையடிவேம்பு
பிரதேச இணக்கசபையின் உறுப்பினருமான கே.காசுபதி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது வழுக்கு மரமேறுதல், கிடுகிழைத்தல், முட்டியுடைத்தல்,
யானைக்கு வால் வைத்தல், சங்கீதக் கதிரை, கயிறிழுத்தல், தலையணைச் சமர், தேங்காய்
துருவுதல், சாக்கோட்டம், வினோத உடைப் போட்டி, சிறுவர் அழகுராணிப் போட்டி உட்படப் பல்வேறு போட்டி
நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டதுடன் வெற்றிபெற்ற வீர வீராங்கனைகளுக்கு அதிதிகளால்
பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டன.












