அம்பாறை மாவட்ட தமிழ் மக்களை நடுத்தெருவில் கைவிட்டுச் செல்ல மாட்டோம் - மு.இராஜேஸ்வரன்

(முரளி)
தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுறுதி கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து தமிழர்களின் தனித்துவம், தன்மானம் என்பனவற்றை பாதுகாத்து வரும் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களை எந்தவொரு வேளையிலும் நாம் நடுத்தெருவில் கைவிட்டுச் செல்ல மாட்டோம் தமிழ் மக்களின் காவலர்களாகவே நாம் இருப்போம் என தமிழ்தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் குறிப்பிட்டார்.

புதிய வளத்தாப்பிட்டி ஸ்ரீ மாரியம்மன் ஆலய கும்பாவிசேகப் பெருவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் பேசுகையில்,
அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுப்பான் என்பது உலக நியதி. இன்று தமிழ் மக்களுக்கான நீதியை வழங்க வேண்டுமென தெய்வம் துணை நிற்கும் நிலையை நாம் ஜெனிவாவில் காணலாம்.

அமைதி வழியில் சென்று அரசியல் உரிமைகளை கேட்டோம் அடக்கு முறைகளை எதிர்த்து ஜனநாயக வழிமுறையில் போராடினோம். பின்னர் எமது மக்கள் ஆயுதம் ஏந்தி போராடும் நிலைக்கு ஆளாக்கப்பட்டனர். இப் போராட்டங்கள் மூலம் இழந்த இழப்புக்களை பார்த்துக் கொண்டிருந்த இறைவன் இராஜதந்திர பொறிமுறைக்குள் இலங்கையை உட்படுத்தி எமது அரசியல் உரிமையை வழங்க வேண்டும் என்ற தீர்ப்பை வழங்கியுள்ள நிலையை காணலாம்.

ஒரு காலத்தில் பேரினவாத அரசியல் கட்சிகளின் பசப்பு வார்த்தைகளை நம்பி அக்கட்சிக்கு வாக்களித்து ஏமாற்றப்பட்ட இவ்வூர் மக்கள் கடந்த பொதுத் தேர்தல் கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னால் அணிதிரண்டு தமிழரின் அரசியல் பலத்தை நிருபணமாக்கியதற்கு தலைவணங்குகின்றேன். இன்று காட்டு யானைகளின் தொல்லை காரணமாகவும் காணி உறுதிப்பத்திரங்களை பெற முடியாமலும் உள்ள உங்களது விடயங்களை உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து தீர்வினைப் பெற்றுத்தருவேன் எனவும் கூறினார்.