இனங்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் சித்திரைப் புத்தாண்டு விளையாட்டுப் போட்டிகள்

(சிவம்)

சிங்கள தமிழ் புதுவருடத்தையும் மற்றும் இனங்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் நோக்கோடும் மட்டக்களப்பு பொலிசார் நடாத்திய விளையாட்டுப் போட்டிகள் இன்று வியாழன் (10) மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றன.

காலை நேரப் போட்டிகளில் ஆண்களுக்கான 70 மைல் சயிக்கிள் ஓட்டப் போட்டி மைதானத்திலிருந்து ஆரம்பமாகி நாவலடி சந்திவரை சென்று திரும்பியது.


ஆண், பெண் இருபாலாருக்குமான 10 மைல் மரதன் ஓட்டப்போட்டி மைதானத்திலிருந்து ஆரம்பமாகி காத்தான்குடி பொலிஸ் நிலையம்வரை சென்று திரும்பியது.

மாலை நேரப் போட்டிகளில் வழுக்கு மரம் ஏறுதல், கண்கட்டி முட்டி உடைத்தல், கயிறு இழுத்தல், விநோத உடைப் போட்டி, தலையணைச் சமர், சங்கீதக் கதிரை, அழகு ராணிப் போட்டி உட்பட பல போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றன.

காலை நேரப் போட்டிகளை கிழக்குப் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க, மட்டக்களப்பு அம்பாரை மாவட்ட பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரெட்ண, மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் மேவன் சில்வா ஆகியோர் போட்டிகளை ஆரம்பித்து வைத்தனர்.

போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கான பரிசுகளை மட்டக்களப்பு அம்பாரை மாவட்ட பொலிஸ் மா அதிபர், மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர்  மற்றும் மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பண்டார ஹக்மன ஆகியோர் வழங்கினர்.

மட்டக்களப்பு, வாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் , மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்;;. உதயகுமார், மதத் தலைவர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொன்டனர்.