நிர்வாக சேவை பதவியானது உயர்வானதாகவும், கண்ணியமானதாகவும் மதிக்கப்படுகிறது

(ராஜா)
நிர்வாக சேவை பதவியானது உயர்வானதாகவும், கண்ணியமானதாகவும் மதிக்கப்படுகிறது.  இது அரசாங்க நிறுவனங்களுடன் மாத்திரமின்றி பொது மக்களுடனும் நெருக்கமான தொடர்பை கொண்டிருப்பதால் அதனை இறைவனுக்கு பொருத்தமான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி ,கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.


மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்திலிருந்து 2012 ஆம் ஆண்டு இலங்கையின் நிர்வாக சேவைக்கு (SLAS) தெரிவாகி தற்சமயம் உதவிச் செயலாளராக பதவி வகித்து வரும் எம்.ஏ.சி.றமீஸா, ஐ.எம்.றிகாஸ், எஸ்.எம்.அல் அமீன், என்.எம்.நௌபீஸ் ஆகியோர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு ஏறாவூர் சமூக ஆய்வு மையத்தின் ஏற்பாட்டில் ஏறாவூர் அல் அஸ்கர் பெண்கள் உயர்தர பாடசாலையில் கடந்த 12.04.2014 அன்று இடம்பெற்றது.

இவர்கள் பொன்னாடை அணிவித்து ஞாபகச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இவ் வைபவத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்குகையில்
பதவி என்பது இறைவன் தரும் அமானிதம் அந்த அமானிதத்தை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதிகாரம் கிடைத்தது என்பதற்காக நாம் கண்டபடி செயலாற்ற முடியாது. அரசாங்கத்தின் பிரமாணங்கள் ஒரு புறம் இருக்க நாம் இறைவனுக்கு பயந்தவராக பணிபுரிய வேண்டும். மக்களுக்காகவே மக்களின் பணிகளை இலகுவாக்குவதற்கு அதிகாரிகள் பயன்படுத்தப் படுகின்றார்கள்.

பொது மக்கள் தமது தேவைக்காக வரும் போது அவர்கள் மீது எரிந்து விழுவதும், அவர்களை நீண்ட நேரம் காக்க வைப்பதும் நல்லதல்ல. அது என் மீதான வெறுப்பை சம்பாதிக்கவே உதவும். ஏறாவூர் பிரதேசம் பண்பாளர்களை உருவாக்கிய இடம் ஏனைய பிரதேசங்களுக்கு முன்மாதிரியான இடம் எனவே இப்பிரதேசத்தில் இருந்து கல்வி கற்று உயர் தொழில் தேர்ச்சி அடைந்துள்ள நீங்கள் மக்கள் சேவையாளனாக பணி புரிய வேண்டுமென்பதும் , உங்களைப் போன்று பல அதிகாரிகளை நீங்கள் உருவாக்க வேண்டும் என்பதும் எனது எதிர்பார்ப்பாகும்.

இந்த விழாவில் அதிதிகளாக பங்கேற்றவர்கள் பல கட்சிகளை கொண்டவர்களாக இருந்தாலும் நமது சமூக நன்மைக்காகவும் கல்வியின் வளர்ச்சிக்காகவும் பிரதேசத்தின் அபிவிருத்திக்காகவும் ஒன்று சேர்ந்து உழைப்பதுவே காலத்தின் தேவையாகும் என அவர்; குறிப்பிட்டார்.

மேலும் இவ்வைபவத்தில் உற்பத்திதிறன் ஊக்குவிப்பு அமைச்சர் பசீர் சேகுதாவூத், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய ஏறாவூர் பிரதேச நகர சபையின் தவிசாளர் அலிசாகிர் மௌலானா உட்பட பல அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.