யுத்தம் நிறைவடைந்தும் ஐந்து ஆண்டுகள் பூர்த்தி சம்பூரை விட்டு ஓடிய மக்களின் அகதி வாழ்விற்கும் எட்டு ஆண்டுகள் பூர்த்தி

2006 சித்திரை 26ம் திகதி மீண்டும் தோற்றுவிக்கப்பட்ட யுத்த சூழல் காரணமாக அன்றுநள்ளிரவே கையில் அகப்பட்டதை எடுத்துக்கொண்டுமரண பயத்துடன் சம்பூரை விட்டு ஓடிய சம்பூர் மக்களின் இடப் பெயர்வுக்கும் அகதி வாழ்விற்கும் எட்டு ஆண்டுகள் நிறைவடைந்து ஒன்பதாவது ஆண்டு தொடங்குகின்றது.
“யுத்தம் நிறைவடைந்தும் ஐந்து ஆண்டுகள் முடிவடைகின்றது. ஆனால் கிழக்கில் இன்னமும் மூடப்படாத அகதி முகாம்களான கிளிவெட்டி, பட்டித்திடல், மணற்சேனை, கட்டைபறிச்சான் ஆகிய அகதிமுகாம்களில் சம்பூர் மக்கள் அடைபட்டுக்கிடக்கின்றனர். கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், அரச உயர் அதிகாரிகள் என அனைவரினதும் கவனத்தை ஈர்த்தது.

மட்டுமன்றி ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் கவனத்திற்கு வந்த பின்னரும் கூட சம்பூர் மக்களின் மீள் குடியேற்றத்தில் அரசு நாட்டம் காட்டாதுள்ளது.தொடர்ந்து தட்டிக்களிப்பது சம்பூர் மீள் குடியேற்றம் தொடர்பான அச்சத்தையும் சந்தேகத்தையும் அதிகரிக்கின்றது. மற்றுமொரு புது வருடமும் அகதிகளாக வாழும் சம்பூர் மக்களை கடந்து சென்றிருக்கின்றது. குழந்தைகளின் மனம் கோணாமல் இருக்க அங்குமிங்கும் கடன் வாங்கி கையேந்திமக்கள் அலைகின்றனர். அவர்களுக்கு புத்தாடை வாங்கிக் கொடுத்து அறுசுவை அறியாத அன்றாட உணவையே புது வருட உணவாக உண்டனர்.

சொந்த பந்தங்களுடன் ஒப்புக்கு உறவாடி அரச தலைவர்களினதும், அமைச்சர்களினதும், கட்சித் தலைவர்களினதும் அலங்கார வார்த்தைகளால் சோடிக்கப்பட்ட புதுவருட வாழ்த்துக்களை படித்தும் கேட்டும் காதுகள் புளித்துப்போய் சோகம் கலந்த கேலிப் புன்னகையை உதிர்த்துவிட்டு தமது எதிர்காலம் குறித்த அச்சத்துக்குள் அவர்கள் அமிழ்ந்து போனார்கள்.

கொழுத்தும் வெய்யிலில் தலையைத் தொட்டுவிடும் உயரத்தில் அமைந்துள்ள தகரக் கூரையின் வெப்பத்தில் அவிந்தபடி, 8வது சித்திரப் புத்தாண்டை துரத்திவிட்டு 9வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமது அகதி வாழ்வின் அவலத்தை நினைத்தபடி,வாழ்கின்றனர். அதனுள் அமிழ்ந்தபடி இயல்பு வாழ்விற்காக ஏங்கும் சம்பூர் மக்களின் துயரம் இறுமாப்பு பிடித்த ஆட்சியாளர்களின் மனசாட்சியை இதுவரை தொடவில்லை. இன்றோ நாளையோ என்ற நிலை மாறி இந்த வருடமாவது சொந்த மண்ணுக்கு திரும்புவோமா என்ற சம்ப+ர் மக்களின்  ஏக்கம் கலந்த வினாவிற்கு எவரிடமும் விடையில்லை.

சம்பூர் மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் விரும்பினால் மாற்றிடங்களில் குடியேறட்டும் என்ற அலட்சியமான போக்குடனும் அலட்டிக்கொள்ளாத மனப்பாங்குடனும் ஆட்சியாளர்கள் இருக்க, எமது அரசியல் தலைவர்களுக்கு இது அவ்வப்போது தொட்டுச் செல்கின்ற அல்லது குரல் கொடுப்பதுடன் நின்று விடுகின்ற ஒரு பிரச்சினையாக மட்டுமிருக்கிறது. ஐ.நா சபைக்கோ ஆண்டுக்கொரு தடவை கூடிப் பேசும் விடயமாக மட்டும் போய்விட்டது.

ஆனால் முகாம்களில் வாடும் மக்களுக்கு இது அன்றாடம் அனுபவிக்கின்ற மரண வேதனையாகும். வாழ் நாளில் எட்டு ஆண்டுகளைத் தொலைத்துவிட்டு, சமூக வளர்ச்சி, தொழில் வாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம், கல்வி என அனைத்தையும் இழந்து எட்டு வருடங்கள் வாழ்வில் பின்னோக்கித் தள்ளப்பட்டவர்களாகவுள்ளனர்.

தமது பிள்ளைகளையும் அவர்கள் எதிர்காலத்தையும் எண்ணி எண்ணி இரத்தக் கண்ணீர் வடிப்பவர்களாக, அடுத்து என்ன செய்வது என்றே தெரியாமல் ஏங்குபவர்களாக வாழ்கின்றார்கள். அரசின் மாற்றாந்தாய் மனப்பாங்கும் அதிகாரிகளின் ஒரு தலைப்பட்சமான முடிவுகளும் மட்டுமல்ல, அரசியல் தலைவர்கள்,படைத்துறை அதிகாரிகள் என பல்வேறு தரப்பினராலும் அவ்வப்போது வழங்கப்பட்டு நிறைவேற்றாமல் கைவிடப்பட்ட உறுதி மொழிகளாலும் ஏமாந்து விரக்தியுற்றுள்ளனர்.

 வறும் ஆதாரமற்ற நம்பிக்கைகளையும் ஆனால் விட்டுக் கொடுக்காத உள உறுதியையும் கொண்டவர்களாக வாழ்கின்றார்கள்.இரண்டு வருடங்களுக்கு மேலாக உலர் உணவு நிறுத்தப்பட்டும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டும், மின்சாரம் மட்டுப்படுத்தப் பட்டும், பாதுகாப்புக் கெடுபிடிகள் இறுக்கப்பட்டும், வரட்சி மற்றும் பல்வேறு காரணங்களால் தொழில் வாய்ப்புக்களை முற்றாக இழந்தும்,அல்லல்படுகின்றனர்.

அடிப்படைத் தேவைகள் அனைத்துமே கேள்விக் குறியாக்கப்பட்டும், முதியவர்கள், குழந்தைகள், விதவைகள், நோய்வாய்ப் பட்டவர்கள், அங்கவீனர்கள் என பாதிக்கப்பட்ட அனைத்து மக்களும் பட்டினியால் வாடுகின்றனர். மனந்தளராது தம் சொந்த மண்ணை அதன் மீதுள்ள பற்றை, பாசத்தை, உரிமையை அதன் மீது அமைந்து இழந்துபோன தம் வாழ்வை விட்டுக் கொடுக்க முடியாமல் உடைந்த உள்ளங்களுடன் ஆனால் உறுதியுடன்வாழும் சம்பூர் மக்களின் எதிர்காலம் தொடர்பாக ஆக்கபூர்வமாகச் சிந்திக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. 

உண்மையான அக்கறையும், அனுதாபமும் கொண்டவர்கள் ஒன்றுபட்டு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு அம் மக்களுக்கான தீர்வை கண்டாக  வேண்டிய உடனடித் தேவை எழுந்துள்ளது. எட்ட நின்று அரசியல் பிரச்சினையாகப் பார்க்காமல் அதற்கப்பால் மனிதாபிமானத்துடனும் உண்மையான அக்கறையுடனும் யதார்த்தமான அனுகுமுறையை கையாண்டு செயற்பட்டால் அரசின் பிடிவாதத்தில் தளர்வு ஏற்படவும் சாத்தியமான தீர்வை எட்டவும் அதன் மூலம் எட்டுவருட இருண்ட வாழ்வில் இருந்து சம்பூர் மக்கள் விடுபட்டு சொந்த மண்ணில் இயல்பு வாழ்வையும் எதிர்காலத்தையும் மீட்டுக்கொள்ளவும் முடியும்”