மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் சித்திரைப் புத்தாண்டுவிழா 24ந் திகதி வியாழக்கிழமை களுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ள மட்டக்களப்பு ஹொலிடே
றிசோட்டில் பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
கல்முனை சிவாசுப்பர் ரியூனசின் சுகமான இராகங்கள் இசை நிகழ்ச்சியுடன் விழா எழுச்சி பெற்றது. இசைக்குழுவுடன் இணைந்து பாடி பிரதேச செயலாளர் தானும் சிறந்த ஒரு மேடைப்பாடகன் என்பதை நிரூபித்ததுடன் ரசிகர்களின் அமோக ஆதரவையும் பெற்றார். அதற்கு மெருகூட்டுவதுபோல் தேனுகா கலைக் கழகத்தின் சிறப்பு நடனங்கள் இடம் பெற்றன.
அதுமட்டுமின்றி பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் பவானி தானே வடித்த கவிதையை தானே மெட்டமைத்து சொந்தக்குரலில் பாடி காட்சிப் பின்னணியுடன் வீடியோ முலம் காடசிப்படுத்தி தனது திறமையை வித்தியாசமாக வெளிப்படுத்தி, அனைவரினதும் பாராட்டைப் பெற்றுக் கொண்டார். பெண் நினைத்தால் கலைத்துறையிலும் சாதிப்போம் என்பதை முதற் தடவையாகச் சாதித்து விட்டார்.
அரங்கானது, பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் கலைத் திறமையை வெளிக் கொணரும் ஒரு அபூர்வ அரங்காகவே மாறிவிட்டது. அதற்கு மற்றுமொரு உதாரண புருஷராக செயலக உத்தியோகத்தர் தெ. உதயசுதன், தான் வடித்த வாழ்த்து கவிதை மூலம் வெளிப்பட்டார். அறிவிப்பாளர் இருவரும் அதேரகம்தான். பிரதேச செயலகத்தின் சித்திரைப் புத்தாண்டு விழா கலைப் பூக்களால் ரசிகர்களின் இதயங்களை அர்ச்சனை செய்தது என்றால் மிகையாகாது.












