லயன்ஸ் கழக வரலாற்றில் மட்டக்களப்பு பெண்கள் லயன்ஸ் கழகத்தினர் புதிய சாதனை

மட்டக்களப்பு பெண்கள் லயன்ஸ் கழகத்தினரது புதிய அங்கத்தவர்களை கழகத்திற்குள் உள்ளீர்க்கும் நிகழ்வு கடந்த 30. 03. 2014 ஆம் திகதி, சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெற்றது. இதில் சிறப்பு அதிதிகளாக லயன். பொறியியலாளர் ரஞ்சன் அவர்களும், லயன். பாஸ்கரன் அவர்களும் மட்டக்களப்பு பெண்கள் லயன்ஸ் கழகத்தினரது வழிகாட்டியும், இலங்கை லயன்ஸ் கழகத்தின் GLT இணைப்பாளருமான திருமதி. சந்திரகாந்தா மகேந்திரநாதன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். இந்நிகழ்வை பெண்கள் லயன்ஸ் கழகத்தினது தலைவி திருமதி. சாந்தா ஞானப்பிரகாசம் தலைமை தாங்கி நடாத்திச் சென்றார்.

 மட்டக்களப்பு பெண்கள் லயன்ஸ் கழகமானது 2012ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 20 அங்கத்தவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையில் பெண் அங்கத்தவர்களை மாத்திரம் கொண்ட ஒரே ஒரு கழகமாக செயற்படுவது இக்கழகத்திற்கான சிறப்பம்சமாகும். அந்தவகையில் தனது ஒரு வருட பூர்த்தியை நிறைவு செய்த நிலையில் புதிய அங்கத்தவர்களை உள்ளீர்க்கும் நிகழ்வில் ஒரே தடவையில் 10 அங்கத்தவர்களை இணைத்துக் கொண்டமை இக்கழகத்திற்கு மேலும் வலுவூட்டமாக அமைகின்றது. 

லயன்ஸ் கழக வரலாற்றில் இவ்வாறு ஒரே தடவையில் 10 அங்கத்தவர்களை இணைத்துக்கொண்டமை புதிய பதிவாக கொள்ளப்படுகின்றது. மேலும் 99 வீதமான அங்கத்தவர்கள் கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் என்பதும், பேராசிரியர்கள், கலாநிதிகள், சிரேஸ்ட விரிவுரையாளர்கள் போன்றோர்களை கொண்ட அமைப்பாக காணப்படுவதும் இக்கழகத்திற்கான தனித்தன்மையாகும். இவர்கள் மட்டக்களப்பு மாணவர்கள் சமூகத்தினது கல்வி நிலையை உயர்த்துதல் மற்றும் பெண்களுக்கான வலுவூட்டம், பெண்களது வாழ்வாதார முன்னேற்றம் போன்ற பெண்கள் தொடர்பான செயற்பாடுகளிலும் தங்களது சேவைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  

 குறித்த தினத்தில் கழக அங்கத்தினர்கள் புதிதாக உள்ளீர்க்கப்பட்ட அங்கத்தவர்களுடன் இணைந்து செங்கலடி மற்றும் கிரான் பிரதேசங்களைச் சார்ந்த விசேட தேவைப்பாடுள்ளவர்களை கொண்ட 35 குடும்பங்களில் வீட்டுத்தோட்டம் மூலம் வாழ்வாதாரத்தினை உயர்த்துதல் எனும் நோக்கில் பயிற்கன்றுகள் மற்றும் விதைகள் வழங்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர். இதற்கு  அரசசார்பற்ற நிறுவனமான CAMID தங்களது ஆதரவினையும் வழிகாட்டலினையும் வழங்கியிருந்தது. இச் செயற்பாடானது அக்குடும்பங்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றது.