மிக பழமையான வினாயகர் விக்கிரகம் விசமிகளால் உடைப்பு

(த.லோகதக்சன்)
 வாழைச்சேனை வாகனேரி கிராமத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் இந்து மக்களால் வழிபட்டப்பட்டு வந்த விநாயகர் ஆலய மூல விக்கிரகம் தூக்கி எடுக்கப்பட்டு அதே வீதியில் சிறிது தூரத்துக்கு அப்பால் காடு புல் சார்ந்த பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தூக்கி எறியப்பட்டுள்ளது.

 மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வாகனேரிக் கிராமத்துக்கு காகித ஆலை அருகாமையாக செல்லும் பிரதான வீதி அருகாமையில் 4ம் கட்டை சந்திக்கு அண்மித்து இவ்வாலயம் அமைந்துள்ளது.

 விக்கிரகத்தை வெளியில் எறிந்த விஷமிகளால் இவ்வாலயத்திற்குள் மிக்சர் மற்றும் புகைத்தல் பொருட்கள் என்பவற்றை உள்ளே போட்டு விட்டு, அதனுள் இறைவனுக்கு வைக்கப்பட்ட பூக்கள், பட்டுக்கள் என்பவற்றையும் வெளியே வீசியுள்ளனர்....... இவ்வாலய விநாயகர் விக்கிரகம் வீசப்பட்ட செய்தியை கேள்வியுற்ற மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை இரவு இவ்விடத்திற்கு சென்று ஆலயத்தையும், வீசப்பட்ட விநாயகர் விக்கிரகத்தையும் பார்வையிட்டதுடன், உடனடியாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் முறையிடுமாறு வாகனேரி இந்து மக்களை கேட்டுக் கொண்டார்.

 இவ்விக்கிரகத்தை தூக்கி எரிந்தவர்கள் ஒரு போதும் இந்து சமயத்தை சார்ந்தவர்கள் அல்ல என்பதை பாராளுமன்ற உறுப்பினரிடம் பொதுமக்கள் உறுதிப்பட உரைத்துள்ளனர். இவ்விடயமாக கூடிய கவனம் செலுத்தப்படும் எனவும், இவ்வாலயத்தை இங்கு திறம்பட அமைக்கவும், மீண்டும் விக்கிரகத்தை இங்கு வைத்து பூசைகளை நடத்தவும் ஒழுங்குகள் செய்யப்படும் எனவும் பொது மக்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் குறிப்பிட்டார்.