மட்டக்களப்பின் மேற்காக வவுணதீவு பிரதேசத்தில் அமைந்தள்ள ஆயித்தியமலை - மகிழவட்டவான் பிரதான வீதியின் ஒருபகுதி மிக நீண்டகாலமான புனரமைக்கப்படாமல் சிதைவடைந்துள்ளதால் மக்கள் போக்குவரத்திற்கு சிரமப்படுவதாக அக் கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இவ் வீதி சுமார் நான்கு கிலோமீற்றர் தூரம் அளவில் மிக கடுமையாக சேதமடைந்துள்ளதனால் இவ் வீதி ஊடாக போக்குவரத்தினை மேற்கொள்ளும் தனியார் பஸ் உரிமையாளர்களும், பொதுமக்களும் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக எமக்கு தெரிவித்தனர்.
இது விடயமாக தாம் சம்பந்தப்பட்ட சில அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் அதற்கு அவர்களால் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் கூறுகின்றனர்.
இவ் வீதியால் மட்டக்களப்பு, செங்கலடி,ஏறாவூர் நகர்கள் உட்பட நரிப்புல்தோட்டம், ஆயித்தியமலை, கரவெட்டி,நாவற்காடு,வவுணதீவு உட்பட பல கிராமத்திற்கும் மக்கள் சென்றுவருவதனைக் காணக்கூடியதாக உள்ளது.
மேலும் இதுதவிர இக் கிராமத்திற்கு குடிநீர் வசதிகள் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு வீட்டு வசதிகள் இல்லை எனவும் கூறுகின்றனர்.
இவ் விடயங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திலெடுத்து உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளமாறு மகிழவட்டவான் கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்












