(சுழற்சி நிருபர் & வரதன்)
சஜீ ஊடகக் கல்லூரியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் 'காரிகை' பெண்களுக்கான மாதாந்த சஞ்சிகை வெளியீடும் நேற்று 24.05.2014 சனிக்கிழமை மட்டக்களப்பு கூட்டுறவு நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சஜீ ஊடகக் கல்லூரியின் பணிப்பாளரும் சூரியன் எப்.எம். செய்தி முகாமையாளருமான முருகையா இந்திரஜித் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மண்முனை வடக்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.சுகுமாரன், காத்தான்குடிப் பிரதேச செயலக நிதி உதவியாளர் பாத்திமா முஹம்மத், சஜீ ஊடகக் கல்லூரியின் சிரேஷ்ட போதனாசிரியர் சி.பி. ஹரிச்சந்திரன் மற்றும் பாடசாலை அதிபர்கள், அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
சஜீ ஊடகக் கல்லூரியில் 10 மாதங்கள் பல்துறை ஊடகப் பயிற்சிகளைப் பெற்ற 10 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன் 'காரிகை' என்ற பெயரில் பெண்களுக்கான மாதாந்த சஞ்சிகையும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
சஜீ ஊடகக் கல்லூரியின் பணிப்பாளரும் சூரியன் எப்.எம். செய்தி முகாமையாளருமான முருகையா இந்திரஜித் நிகழ்வில் சான்றிதழ்களையும், 'காரிகை' பெண்களுக்கான மாதாந்த சஞ்சிகையையும் வெளியிட்டு வைத்த பின்னர் உரையாற்றினார்.
'நாங்கள் ஊடகத்துறையில் பிரவேசித்தபோது எதிர் நோக்கிய கஷ்டங்களை புதிதாக ஊடகத்துறைக்குள் நுளையக்கூடியவர்கள் எதிர்கொள்ளக் கூடாது என்ற சிந்தனைதான் இவ்வாறு ஒரு ஊடகக் கல்வி நிறுவனத்தை உருவாக்குவதற்குக் காரணமாக இருந்தது.
அதனடிப்படையில்தான் இன்று நீங்கள் ஊடகத்துறையோடு சம்பந்தப்பட்ட பல்துறைசார்ந்த பயிற்சிகளையும் ஒருங்கே பெற்று வெற்றிகரமாக பயிற்சியை நிறைவு செய்து கொண்டு சான்றிதழ்களைப் பெறுகின்றீர்கள். அதற்கும் மேலதிகமாக மும்மொழி அறிவும் உங்களுக்குப் புகட்டப்பட்டிருக்கின்றது.
எங்களுடைய வானொலி தொலைக்காட்சிக் கலாசாரத்தை தமிழ்நாட்டு மக்கள் ரசிக்கின்றார்கள். எங்களது ஊடகத்துறைப் பெருமை உலகத் தமிழ் பேசும் மக்களிடையே மகோன்னத வரவேற்போடு சிறப்பித்துப் பேசப்படுகிறது.
ஆனால் துரதிருஷ்டவசமாக நாம் தென்னிந்திய தூய தமிழல்லாத பிற மொழி கலந்த பேச்சுவழக்கு கலாசாரத்துக்கு சென்று கொண்டிருக்கின்றோம். இது கவலையளிக்கின்றது.
இந்த நிலைமையை மாற்ற வேண்டும் என்பதற்காகவும்தான் இப்படி ஒரு ஊடகக் கல்வியை ஆரம்பிக்க வேண்டும் என்ற உறுதி எமக்கு ஏற்பட்டது.
அறிவிப்பு, செய்தி வாசிப்பு, செய்தித் தயாரிப்பு என்பவற்றுக்கும் மேலதிகமாக 'காரிகை' என்கின்ற சஞ்சிகையை நாம் வெளியிடுகின்றோம்.
இது முற்றுமுழுவதுமாக பெண்களுக்கானது. முன்னேறும் பெண்களுக்கான ஒரு வழிகாட்டலாகவும் முன்னுதாரணமாகவும் இச்சஞ்சிகை விளங்கும்.
இது வழமையான பெண்களுக்கான சஞ்சிகைகளைப் போன்று அழகுக் குறிப்புக்களையோ அல்லது சமையல் குறிப்புக்களையோ தாங்கி வராது.
மாறாக வடக்கு கிழக்கில் மட்டுமல்ல நாடுபூராகவும் சீர்குலைந்திருக்கின்ற தமிழ்ப் பெண்களின் கலாசாரப் பண்பாட்டு விழுமியங்களை மீள நிலைநாட்டி அதனைப் பாதுகாக்கின்ற ஒரு பொறுப்பையும் இந்த சஞ்சிகை கொண்டிருக்கும்.
கலாசாரச் சீரழிவுகளைத் தடுத்து நிறுத்துகின்ற விடயத்திலே பெண்கள் மத்தியில் ஏற்படக்கூடிய விழிப்புணர்வுகளை மீள வலியுறுத்துகின்ற ஒரு சஞ்சிகையாக இது மிளிரும்.
இதிலே வெளிவருகின்ற ஆக்கங்கள் ஏனைய வெளியீடுகளில் பிரசுரிக்கப்பட்டதாகவோ அல்லது பிரதி செய்ததாகவோ ஒரு போதும் இருக்கக் கூடாது என்பதிலே நாம் மிகக் கவனமாக இருப்போம்.
சமகால நடைமுறை வாழ்க்கை அனுபவங்களைத் தாங்கிய முன்னுதாரணங்களையும் சாதனைகளையும் சுமந்து வரும் ஒரு பொக்கிஷமாகத்தான் இந்தச் சஞ்சிகை இருக்கும்.
எமது ஊடகக் கல்லூரியிலே கற்று முடித்தவர்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கும் முகமாக ஒன் லைன் வானொலி ஒன்றைத் துவங்குவதற்கான பரீட்சார்த்த முயற்சிகள் யாவும் நிறைவு பெற்றுவிட்டன.
இதனை நாங்கள் உங்களுக்காகவே சமர்ப்பிக்கின்றோம். 24 மணி நேர ஒன்லைன் வானொலியாக அது இருக்கும். எனவே மட்டக்களப்புப் பிராந்தியத்திலிருக்கும் உங்களுக்கும் அந்த ஒன்லைன் வானொலியில் முழுமையான வாய்ப்புத் தரப்படும்.
எங்களது நுவரெலியா மற்றும் கொழும்பு ஊடகக் கல்லூரிகளில் அளிக்கப்பட்ட பயிற்சிகளுக்கும் மேலதிகமாக மட்டக்களப்பில் நீங்கள் சிறப்பான பயிற்சிகளைப் பெற்றுள்ளீர்கள் என்ற மகிழ்ச்சியான விடயத்தையும் நான் சொல்லிக் கொள்வதில் பெருமையடைகின்றேன்' என்றார்.












