ஆசிரியர்களின் உரிமைகளை மதித்து சுதந்திரமாக இயங்கவிடுங்கள் மேதினச் செய்தியில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்

(காரைதீவுநிருபர்)
'ஆசிரியர்களின் உரிமைகளை மதித்து நாட்டில் தரமான கல்வியை வழங்க ஆசிரியர்களை சுதந்திரமாக நிம்மதியாக பணியாற்றவிடுங்கள். ஆசிரியர்கள் ஜக்கியம் ஓங்கட்டும்.'
 
இவ்வாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள மேதினச் செய்தியில் குறிபபிட்டுள்ளது. சங்கத்தின் தலைவர் வி.ரி.சகாதேவராஜா பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன் ஆகியோர் விடுத்துள்ள இச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
 
நாட்டில் அரச துறையில் எண்ணிக்கை கூடிய தொழிலாளர் துறையாக ஆசிரியவர்க்கம் திகழ்வதால் அனுகூலங்கன் காணப்படுகின்ற அதேவேளை பிரதிகூலங்களும் காணப்படுகின்றன.
இலங்கையைப் பொறுத்தவரையில் ஆசிரியர்களுக்கான வேதனம் என்பது அவர்களது வாழ்க்கைச்செலவைச் சமாளிக்க போதுமானதல்ல.அதனால் சமகாலத்தில் சமூகஅந்தஸ்தைப் பேணுவதில் அவர்கள் பெரும் சவால்களை எதிர்நோக்கிவருகின்றார்கள்.
தற்போது ஆசிரியர் இடமாற்றம் என்பது எப்போதும் எந்நேரமும் நடக்கலாம் என்ற துரதிஸ்ட வசமான நிலைமை காணப்படுகின்றது. குறிப்பாக வடக்கு கிழக்கில் வருடம் பூராக இந்நிலைமை காணப்படுகின்றது.முன்னரெல்லாம் வருடஇறுதியில் இடமாற்றசபைகளின் தீர்மானத்திற்கமைவாக நேர்மையாக நீதியாக இவ்விடமாற்றங்கள் நடைபெற்றுமுடிந்துவிடும்.ஆனால் இன்று நிலைமை வேறு.
தேசிய இடமாற்றக்கொள்கையொன்று இருப்பதும் அதனை ஆசிரிய தொழிற்சங்கங்கள் அடிக்கடி வலியுறுத்துவதும் அதனை பின்பற்றாமல் விரும்பம்போன்று இடமாற்றங்களை மேற்கொள்வதும் வழமையாகிவிட்டன.
ஆசிரியர் இடமாற்றங்களை மாகாண கல்விஅமைச்சின் செயலாளரும் செய்கிறார்.மாகாண கல்விப்பணிப்பாளரும் செய்கிறார். வலயக்கல்விப்பணிப்பாளரும் செய்கிறார். இதனால் அப்பாவி ஆசிரியர்கள் பந்தாடப்படுகிறார்கள். மாகாணத்திற்கென ஒரு பொதுவான இடமாற்றக்கொள்கையொன்று இல்லாதது துரதிஸ்டமே.
ஆசிரிய சங்கங்களை அழைத்து இடமாற்றசபைக்கூட்டங்களை ஒப்புக்கு நடாத்திவிட்டு தமது விருப்பம்போல் செய்வதும் பரவலாக அவதானிக்கப்பட்டுள்ளது. இடமாற்றசபைகளில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை உதாசீனம் செய்யும்பாங்கு காணப்படுகிறது.
மாகாணத்திற்கென நியமமான இடமாற்றக்கொள்கையொன்று இல்லாமையினால் 10வருடங்களையும் தாண்டி பலநூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் தூரஇடங்களிலே சேவையாற்றவேண்டியுள்ளது.கல்வியமைச்சின் சட்டதிட்டங்களை மதித்த ஆசிரியர்கள் தொடர்ந்து கஸ்டப்படுகிறார்கள்.
 
 ஒருசில வலயக்கல்விப்பணிப்பாளர்கள் 10வருடங்களைத் தாண்டியும் ஒரு வலயத்தில் இருப்பதால் அங்கு பலதில்லுமுல்லுகள் நடப்பதற்கும் விரும்பியவாறு இடமாற்றங்களை செய்வதற்கும் வழிகோலுகிறது. இதற்கு மேலதிகாரிகள் என்று சொல்லப்படுவோரும் துணைபோவதுபோல் தெரிகிறது.
அவ்வதிகாரியின் தில்லுமுல்லுகளை  பட்டியல்படுத்திவருகிறோம்.ஆளுநரிடம் இதுபற்றி முறையிடுவோம். தவறினால் ஜனாதிபதியைச் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

ஆசிரியர்கள் இவ்வாறு நேரங்காலம் இல்லாமல் இடமாற்றம் செய்யப்படுவதனால் அவர்கள் நிம்மதியில்லாமல் சீரான கற்பித்தலை மனம்வைத்து கற்பிக்கமுடியாமலுள்ளது. எனவே அவர்களை சுதந்திரமாக நிம்மதியாக பணியாற்றவிடவேண்டும்.

மேலும் ஆசிரியர்களுக்கான பதவியுயர்வு நிலுவைகள் வழங்கல் சுற்றுநிருபம் பின்பற்றல்கள் வலயத்திற்கு வலயம் மாறுபட்டுள்ளது. 10மாத கடன் பெறுவதென்பது முயற்கொம்புக்கு ஒப்பானதாகும்.
மாகாணத்தின் கல்வித்தரம் குறைவாக இருக்கிறது எனவே ஆசிரியர்கள் முதல் கல்வி அதிகாரிகள் வரை மிகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றவேண்டும். 10வீதம் அடைவுமட்டத்தை கூட்டிக்காட்டவேண்டும் என கேட்பதைவிடுத்து அதற்கு முக்கிய பாத்திரமான ஆசிரியர்களின் நலன்கள் பேணப்படுவதில் கவனம் செலுத்தவேண்டும்.அவர்கள் இதயசுத்தியுடன் நிம்மதியாக சுதந்திரமாக கற்பிக்கும் சூழலை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும்.

ஆசிரியர்கள் மனம்வைத்தாலன்றி எந்த தரமான  கல்விமுன்னேற்றத்தையும் ஏற்படுத்திவிடமுடியாதென்பதை அனைவரும் உணர்ந்துகொள்ளவேண்டும்.

எனவே ஆசிரியர்களை அவ்வாறு இயங்க கல்வித் தலைமைகள் சிந்திக்கவேண்டும்.