'வட்டிக்குக் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு மக்களைத் திரட்டி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து கொடுப்பவர்கள் சமூர்த்தி உத்தியோகத்தர்கள்தான் என்பது வருத்தமளிக்கின்றது'- சந்திரகாந்தன்-


  (சுழற்சி நிருபர்;)
'வட்டிக்குக் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு மக்களைத் திரட்டி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து கொடுப்பவர்கள் சமூர்த்தி உத்தியோகத்தர்கள்தான் என்பது வருத்தமளிக்கின்றது'  இவ்வாறு ஜனாதிபதியின் ஆலோசகரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
நேற்று மட்டக்களப்பு மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சத்துருக்கொண்டானில் கிராம மகளிருக்கு வாழ்வாதார சுயதொழிலை ஆரம்பிப்தற்காக 10 அயிரம் ரூபாய் நுண்கடன் காசோலைகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.
மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் வெள்ளக்குட்டி தவராஜா தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.





இலகு நுண்கடன்களுக்கான காசோலைகளை வழங்கி வைத்து விட்டு தொடர்ந்து அவர் உரையாற்றினார்.
'மட்டக்களப்பு நகரை அண்டிய கிராமங்களிலே நிர்வாக ரீதியான மக்களது சேவைகள் திறம்பட இடம்பெற்றிருப்பது போன்று தெரிகின்றது.
கோறளைப்பற்று, கோறளை வடக்கு போன்ற வேறு பல பிரதேச செயலகப் பிரிவுகளிலே இடம்பெற்ற இவ்வாறான பல நிகழ்வுகளுக்கு நான் அதிதியாகச் சென்றிருந்த போது அங்கு ஏராளமான பொதுமக்கள் தமது அலுவல்களை முடித்துக் கொள்வதற்காக இடம்பெயர் சேவையை நாடியிருந்ததை அவதானித்தேன்.
காணிப்பிரச்சினை சுகாதாரப் பிரச்சினை என்று அவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வேண்டி மக்கள் அங்கே திரண்டிருந்தார்கள்.
அதனோடு ஒப்பிடுகின்ற போது மட்டக்களப்பு மாநகர சபைப் பிரிவிலே சனத்தொகை அதிகம் கூடிய இந்த இடங்களிலே குறைந்தளவான மக்கள் இந்த இடம்பெயர் சேவையை நாடியிருப்பது மக்களுக்கு ஏற்கெனவே சேவை வழங்கப்பட்டு அவர்களது பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருப்பதைத்தான் காட்டி நிற்கிறது.
அதிகாரிகளும் மற்றும் அக்கறையுள்ள அனைத்துத் தரப்பினரும் மக்களது பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கின்ற போது மக்கள் இதனை உணர்ந்து ஒத்துழைப்பு வழங்குவார்களாக இருந்தால் வளர்ச்சி கண்ட ஒரு பசுமையான மாவட்டமாக மட்டக்களப்பை மாற்றியமைக்க முடியும்.
குடும்ப முகாமைத்துவத்தில் பெண்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.
வருமானத்தையும் செலவையும் சரியாக முகாமைத்துவம் செய்யத் தெரியாததினால் நாம் வறுமையை அனுபவிக்கின்றோம். அதனால் மட்டக்களப்பு மாவட்டம் இலங்கையில் வறுமையின் முதலாமிடத்திற்கே சென்றிருக்கின்றது.
உங்களது விழிப்புணர்விலிருந்துதான் மாற்றம் வரவேண்டும்;.
உள்ளுர் உற்பத்திகளை மக்கள் தரக்குறைவாக நோக்கி அவற்றைப் புறக்கணிப்பதுதான் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மிகப்பெரிய பிரச்சினை. இது விடயமாக மனப்பாங்குகளில் மாற்றம் வரவேண்டும்.
இங்கே உள்ள பால், மீன், விவசாயம் போன்ற இன்னோரன்ன வளங்களை இந்த மாவட்ட மக்கள் அனுபவிக்காமல் வெளிமாவட்டங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றோம்.
அதற்குப் பதிலாக வெளிமாவட்டங்களிலிருந்து வரும் உற்பத்திக் கவர்ச்சிகளில் மயங்கி விடுகின்றோம். இதனால் எமது பணம் அங்கே லாபமாகப் போய்ச் சேருகின்றது.
மக்களாக இந்த விடயங்களைச் சீர்தூக்கிப் பாராது விட்டால் இப்பொழுது இருப்பதை விட இன்னமும் சீரழிவுகளை நாம் எதிர்நோக்க வேண்டிவரும்.
30 வீத வட்டிக்குப் பணம் பெற்று அதன் மூலமாகத் தொழில் செய்து 10 வீத லாபத்தைப் பெற்றால் 20 வீதம் நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டி வருகின்றது. இதன் விளைவு இருப்பதையும் இழப்பதோடு மனநிலையும் பாதிக்கப்பட்டுவிடுகின்றது.
எனவே இதனைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
எங்கள் மாவட்டத்திலுள்ள அத்தனை வளங்களையும் பயன்படுத்தி உற்பத்தி செய்யக் கூடிய பொருட்களை நாம் வெளிமாவட்டங்களிலிருந்து வாங்கிக் கொண்டிருக்கின்றோம்.
மரவள்ளிக் கிழங்குக்குப் பெயர்போனது மட்டக்களப்பு மாவட்டம். ஆனால் மட்டக்களப்பிலே ஒரு கிலோ மரவள்ளிக் கிழங்கின் விலை 110 ரூபாய் என்ற அடிப்படையில் விற்பனையாகிறது.
தேங்காய் உற்பத்திக்கு மிகவும் பெயர்போன மட்டக்களப்பு மாவட்டம் இப்பொழுது குருநாகல் தேங்காயை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது. அதேவேளை ஒரு தேங்காயின் விலை 60-70 ரூபா வரையில் விற்கப்படுகின்றது.
இருக்கின்ற வளங்களைப் பயன்படுத்தி உச்சப் பயனைப் பெற நாம் முயற்சிப்பதில்லை.
கடன் பட்டவர்களாகவே நாம் வாழப் பழகிக் கொண்டுள்ளோம். எங்களுடைய தரவுகளும் புள்ளி விவரங்களும் இதனைத்தான் காட்டுகின்றது.
வட்டிக்குக் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு மக்களைத் திரட்டி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து கொடுப்பவர்கள் சமூர்த்தி உத்தியோகத்தர்கள்தான் என்பதை நான் அறிந்துள்ளேன். இது வருத்தமளிக்கின்றது.
கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சந்திவெளியில் கிராம சேவையாளரின் அலுவலகம் ஒன்றில்தான் வட்டிக்குக் கடன் வழங்கும் நிறுவனம் ஒன்றிற்கான கூட்டம் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஒரு பாடசாலைக்கு நான் சென்றிருந்தேன் அது ஐந்தாம் ஆண்டு தொடக்கம் 11 ஆம் ஆண்டு வரையுள்ள பாடசாலை. கணக்கின்படி 283 மாணவர்கள் அங்கே கல்வி கற்பதாகக் கூறப்பட்டது. ஆனால் அரைவவாசிக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைக்குச் சமுகமளித்திருக்கவில்லை.
இதனைவிட அநியாயம் என்னவென்றால் அங்கு ஐந்தாம் ஆண்டு தொடக்கம் 11 ஆம் ஆண்டு வரையும் கல்வி கற்கும் 152 மாணவர்களுக்கு தங்களுடைய பெற்றோரின் பெயர்கள், அவர்களது சொந்த முகவரி என்பனவற்றைக் கூட எழுதத் தெரியாமலிருப்பது வேதனைப்பட வேண்டிய வெட்கப்பட வேண்டிய ஒன்றாக இருந்தது.
இத்தனைக்கும் மத்தியில் அந்தப்பாடசாலையிலே கற்பிப்பதற்கு போதியளவு ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். மாதாமாதம் சம்பளம் பெறுகின்றார்கள்.
இந்த மாணவர்களின் கல்விப் பின்னடைவுக்கு யார் பொறுப்பு? ஒரு கிராமத்தின் கல்வி பின்னடைகிறதென்றால், பாடசாiலையில் இடைவிலகல், பிள்ளைகளின் வரவுக் குறைவு இவற்றையெல்லாம் வகுப்பாசிரியர், ஆசிரியர்கள், அதிபர், சமூர்த்தி அலுவலர், சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம சேவையாளர் என்று எல்லோருமே பொறுப்பக் கூற வேண்டும். இது அவர்கள் செய்ய வேண்டிய பணி.
இவ்வளவு அதிகாரிகளும் அலுவலர்களும் இருக்கத்தக்கதாக எழுத்தறிவில்லாத பிள்ளைகள் உருவாகிறார்கள் என்றால் இதைவிட அநியாயம் வேறான்றுமில்லை' என்றார்.
இந்நிகழ்வில்; மாவட்ட அரசாங்க அதிபர் சறோஜினிதேவி மன்மதராஜா சார்ள்ஸ், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பி. பிரசாந்தன் உட்பட இன்னும் ஏராளமான அதிகாரிகளும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.