மீள் குடியேற்ற பிரதியமைச்சரினால் வவுணதீவு பிரதேசத்தில் மாதர் சங்கங்களுக்கு ரூபா.31 இலட்சம் நிதியும் சான்றிதழும் வழங்கிவைப்பு

(சதீஸ்  &வரதன்)
வவுணதீவு பிரதேசத்தில் உள்ள மாதர் அபிவிருத்தி சங்கங்களுக்கு மீள் குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்களினால் ஒரு சங்கத்திற்கு தலா ரூபா.1 இலட்சம் எனும் அடிப்படையில் ரூபா.31  இலட்சம் நிதி வழங்கப்பட்டு அதற்கான சான்றிதழும் இன்றையதினம் சங்கங்களுக்கு கையளிக்கப்பட்டது.

பொருளாதார அபிவிருத்தி மூலம் வறுமையற்ற சமூகத்தை கட்டி எழுப்பும் நோக்கில் கிராம மட்டத்திலுள்ள மாதர் சங்கங்களுக்கு இப் பணம் வழங்கிவைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மீள் குடியேற்ற பிரதியமைச்சர் உரையாற்றுகையில்,

'இம் மாவட்டத்தில் ஒரேஒரு தமிழ் அமைச்சராக நான் மட்டும் இருந்துகொண்டு இப்படியான அபிவிருத்தி திட்டங்களை உங்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கின்றேன். என்னைப்போல் இன்னும் இருவர் அமைச்சராக இருந்தால் உங்கள் பிரதேசம் மிக குறுகிய காலத்தில் அபிவிருத்தியை கண்டுவிடும். அதுமட்டுமல்ல நாம் இப்போது இருப்பதைவிட இன்னும் பலமாக இருந்துகொண்டு நம் சமூகத்தையும் கிராமத்தையும் முன்னேற்றலாம்.

இப் பிரதேசத்தில் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படாத கிராமங்களுக்கு படிப்படியாக நீர் வழங்க நடவடிக்க எடுக்கப்படும். தற்போது பாவற்கொடிச்சேனை கிராமத்திற்கு குடிநீர் வழங்க 1600 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போது மாதர் சங்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந் நிதியினை அச் சங்கங்கள் திட்டமிட்டு சிறந்தமுறையில் பயன்படுத்தி அதில் சிறந்த முன்னேற்றம் அடையும் சங்கங்களுக்கு எதிர்காலத்தில் அவர்களின் தேவைக்கேற்ப உதவிகளை நான் பெற்றுக்கொடுப்பேன்'.

போன்ற விடயங்களையும் தெரிவித்தார்.

இந் நிகழ்வின்போது உயர் தொழிநுட்ப கல்வி நிறுவனத்தின் இணைப்பாளர் எஸ்.ஜெயபாலன் அவர்களினால் கிராம மட்ட சங்கங்கள் எவ்வாறு செயற்பட்டால் உறுப்பினர்கள் மேம்படலாம், சமூகத்தினர் பொருளாதாரத்தில் அபிவிருத்தியடையலாம் போன்ற பல விடயங்கள் பற்றி கருத்துரை வழங்கினார்.

இந்நிகழ்வில் மீள் குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் பொன்.ரவீந்திரன் மற்றும் பிரத்தியேகச்செயலாளர் திருமதி.ஞா.ருத்திரமலர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் T.நிர்மலராஜ், உயர் தொழிநுட்ப கல்வி நிறுவனத்தின் இணைப்பாளர் எஸ்.ஜெயபாலன் உட்பட அரச அதிகாரிகள் மாதர் சங்கங்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது சிறுகைத்தொழில் புரிவோருக்கு பிரதியமைச்சரினால் தொழில் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது.