3 மாதப் பயிற்சியினை நிறைவு செய்த கிராம உத்தியோகத்தர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராம சேவையாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டு 3 மாதப் பயிற்சியினை நிறைவு செய்தவர்களுக்கான தற்காலிக நியமனங்கள் நேற்றைய தினம்  செவ்வாய்க்கிழமை (10) மாலை மாவட்ட செலயகத்தில் நடைபெற்றது.
பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைக்கும் வகையில் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள கிராம சேவையாளர்களுக்கு நாடு பூராகவும் நேற்றையதினம் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன.



மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த தற்காலிக நியமனம் வழங்கலில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்எம்.சார்ள்ஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
அத்துடன், பிரதேச செயலாளர்களான எஸ்.தவராஜா, கே.தனபாலசுந்தரம், என்வில்வரெத்தினம், எஸ்.எல்.எம்.ஹனிபா, மாவட்ட செயலக கணக்காளர் நேசராசா, உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன்,நிருவாக உத்தியோகத்தர் ஆர்.தயாபரன் உள்ளிட்டோரும் உதவிப்பிரதேச செயலாளர்களும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
கிராமங்களில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்த்துவைக்கும் வகையில் போட்டி பரீட்சைகள் மூலம் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் புதிதாக கிராம சேவையாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 72பேர் கிராம சேவையாளர்களாக தெரிவுசெய்யப்பட்டனர்.
இவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக மாவட்ட செயலக ரீதியாகவுமம் பிரதேச செயலக ரீதியாகவும் விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன் கிராமிய ரீதியில் பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைப்பது தொடர்பிலான பயிற்சிகள் அளிக்கப்பட்டிருந்தன.
இதனைத்தொடர்ந்து இவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் கடமைக்கமர்த்தப்படவுள்ளனர்.
இதில், 66 பேருக்கான தற்காலிக நியமனக்கடிதங்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வழங்கிவைக்கப்பட்டதுடன் பொது நிருவாக அமைச்சின் செயலாளரினால் விரைவில் நியமனக்கடிதங்கள் வழங்கப்படவுள்ளன.
உடனடியாக இவர்களை அவர்கள் நியமிக்கப்பட்ட கிராமங்களில் கடமைக்கமர்த்துவதற்காகவே இந்த தற்காலிக கடிதங்கள் மாவட்ட செயலகத்தினால் வழங்கப்படுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.