சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய அணிகள் 5 போட்டிகளில் சாதனை

(நித்தி) நடைபெற்று முடிந்த மாகாணமட்ட விளையாட்டு சுற்றுப்போட்டிகளில் சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய அணிகள் 5 விளையாட்டுக்களில் சாம்பியன்களாக மாகாணத்தில் தெரிவுவாகியுள்ளனர்.

சிவானந்தா மைதானத்தில் (31.05.2014) நடைபெற்றபோட்டியில் 15 வயதுக்கு உட்பட்ட பெண்கள், 17 வயதுக்கு உட்பட்ட பெண்கள், 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் வலைப்பந்தாட்ட போட்டிகளில் மூன்று வயதுப்பிரிவிலும் சம்பியன்களாக தேர்வாகி சாதனை படைத்துள்ளனர். மூன்று வயதுப்பிரிவிலும் ஒரு பாடசாலை சம்பியன்களாக வருவது இது இரண்டாம் தடவை, 2013ம் ஆண்டு இப்பாடசாலையினால் இந்த சாதனை முதலாவது தடவையாக படைக்கப்பட்டுள்ளது. 







அத்துடன் 25.05.2014ம் திகதி புனித சிசிலியா தேசியப்பாடசாலையில் நடைபெற்ற மாகாண மட்ட 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கூடைப்பந்தாட்டப்  போட்டியில் 4வது தடவையாக சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய மாணவிகள் சம்பியன்களாக தெரிவாகியுள்ளனர். நிரந்தரமான கூடைப்பந்தாட்ட மைதானம் இல்லாத போதும் நான்கு முறை இந்த சாதனை நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. சாதனை படைத்த மாணவர்களுக்கு அதிபர் ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் பழைய மாணவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். 


19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான எறி;பந்தாட்டப்  போட்டியிலும் இப்பாடசாலை சாம்பியனானது. ஏறிபந்து, கூடைபந்து, வலைப்பந்து போட்டிகளில்  1ம் இடத்தினை பெற்றிருந்தாலும் விளையாட்டிற்கான அடிப்படை வசதிகள் இன்மையால் மாணவர்களை தேசிய மட்டத்திற்கு பயிற்றுவிப்பதில் உடற்கல்வி ஆசிரியர்கள் மிக அசௌகரியங்களை எதிர் நோக்குவதாக தெரிவித்தனர். வலைப்பந்து, கூடைப்பத்து, எறிபந்து, கூடைப்பந்தாட்ட மைதானம் இன்மை, மாணவர்களுக்கு தேசிய மட்டத்திற்கு அழைத்து செல்வதற்கான நிதி பற்றாக்குறை, இதுபோன்ற காரணங்களால் இப்பாடசாலை மாணவர்கள் தேசிய மட்டத்திலும் சாதனை படைப்பது என்பது ஒரு கனவாகவே இருந்து வருகின்றது. இம்மாணவர்களின் எதிர்பார்ப்புக்களையும் சாதனைகளையும் எவரேனும் கவனத்தில் கொள்ளமாட்டார்களா என சித்தாண்டிக் கிராமத்தில் சாதனை புரிந்த மாணவர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.

தேசியமட்டப் போட்டிகளுக்கு தயாராகும் சகல கல்குடா வலய மாணவர்களையும் பாராட்டிவரும் வலய கல்விப் பணிப்பாளர் திரு.செ.ஸ்ரீகிருஸ்ணராஜா குறித்த மாணவர்களையும் பாராட்டிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.