புலிகள் என சந்தேகத்தில் இளைஞர்களை கைது செய்ய முடியுமாயின் பொது பல சேனாவை ஏன் கைது செய்ய முடியாது?

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைக்க முடியுமாயின் அப்பட்டமாக வன்முறைகளில் ஈடுபடுகின்ற பொது பல சேனா, சிங்கள ராவய போன்ற தீவிரவாத இயக்கத்தினரை ஏன் அந்த சட்டத்தை பிரயோகித்து கைது செய்ய முடியாது?

இவ்வாறு கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அளுத்கம, தர்கா நகர, பேருவளை, பன்னல உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பேரினவாத தாக்குதல்களைக் கண்டித்து நேற்று கல்முனை மாநகர சபையில் கண்டனத் தீர்மானத்தை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.



அவர் அங்கு மேலும் பேசுகையில் கூறியதாவது;

“கடந்த 15ஆம் திகதி அளுத்கம, தர்கா நகர் ஆகிய இடங்களில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன ஒழிப்பு நடவடிக்கை 1983 ஆம் ஆண்டின் கறுப்பு ஜூலை போன்றதொரு கறைபடிந்த கறுப்பு ஜூனாக நோக்க வேண்டியுள்ளது.
அந்தளவுக்கு தர்கா நகரில் இன வெறியாட்டம் நடந்தேறியுள்ளது.

ஜனாதிபதியும் பாதுகாப்பு செயலாளரும் நாட்டில் இல்லாத வேளையில் இந்த வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீண்ட கால யுத்தத்திற்குப் பின்னர் நாட்டில் அமைதியான சூழ்நிலையில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இவ்வாறான இனவெறித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் நாட்டை மீண்டும் இருள் சூழ்ந்த நிலைக்கு தள்ளுவதற்கு முயற்சிக்கப்படுகிறது.

தர்கா நகர் மீதான தாக்குதல்கள் நன்கு திட்டமிட்டே அரங்க்கேற்றப் பட்டிருக்கின்றன. முஸ்லிம்கள் செறிவாக வாழ்கின்ற பிரதேசம் ஒன்றை ஊடறுத்து பேரணி சென்றது மாத்திரமல்லாமல் பள்ளிவாசலுக்கு அருகில் வைத்து பேரணி மீது கல்வீச்சு நடத்தும் அளவுக்கு அவர்களது திட்டமிடல் இருந்துள்ளது.

பள்ளிவாசல் அருகில் இருந்து பேரணி மீது கல் வீச்சு நடத்தினால் என்ன நடக்கும் என்ற பாரதூரத்தை அங்குள்ள முஸ்லிம்கள் அறியாதவர்களல்ல. ஆகையினால் முஸ்லிம்கள் அந்த வேலையை அங்கிருந்து செய்திருக்க அணுவளவும் வாய்ப்பில்லை என்பது சிறு பிள்ளைக்கு கூட தெரிந்த விடயமாகும்.

ஆனால் கூட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை முஸ்லிம் பிரதேசமொன்றினுள் பேரணி செல்வதற்கும் பயன்படுத்தியது மாத்திரமல்லாமல் முஸ்லிம்களை வம்புக்கிழுக்கும் கோஷங்களையும் மேற்கொண்டு பேரணி மீது தாமே கல்வீச்சையும் நடத்தி விட்டு கலவரத்திற்கு தூபமிட்டுள்ளனர். இறுதியில் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு முஸ்லிம்களை வீடுகளுக்குள் முடக்கப்பட்ட நிலையிலேயே அவர்களது வர்த்தக நிலையங்களும் வீடுகளும் சொத்துகளும் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளன.

இதற்கு பொதுபல சேனா மாத்திரமல்ல சிங்கள ராவய போன்ற பௌத்த தீவிரவாத இயக்கங்களும் முன்னிலை வகித்துள்ளன. இவர்களின் இன வெறித் தாக்குதல்கள் அளுத்கம, தர்கா நகர், பேருவளை போன்றவற்றுடன் நின்று விடவில்லை.

முஸ்லிம்கள் மீதான அத்தாக்குதல்கள் பன்னல, பாணந்துறை என்று நாட்டின் பல பகுதிகளிலும் அங்கும் இங்குமாக தொடர்ந்து கொண்டே செல்கின்றன. பள்ளிவாசல்கள் மீதும் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டு செல்கின்றன. காரணம், இவர்கள் மீது இன்னும் சட்டம் சரியான முறையில் பிரயோகிக்கப்படவில்லை என்பதுதான்.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைக்க முடியுமாயின் அப்பட்டமாக வன்முறைகளில் ஈடுபடுகின்ற பொது பல சேனா, சிங்கள ராவய போன்ற தீவிரவாத இயக்கத்தினரை ஏன் அந்த சட்டத்தை பிரயோகித்து கைது சேது சட்டத்தின் முன் நிறுத்த முடியாது என்று கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.

இது விடயத்தில் எமது முஸ்லிம் காங்கிரசும் தலைமைத்துவமும் மிகவும் உறுதியுடன் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. பொது பல சேனா உள்ளிட்ட தீவிர அமைப்புகள் மீதும் ஞான சார தேரர் மீதும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகளை எமது கட்சி மேற்கொண்டுள்ளது என்பதை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

முஸ்லிம்களின் பொருளாதாரத்தின் மீதும் உடைமைகள் மற்றும் உயிர்கள் மீதும் இலக்கு வைத்து மேட்கோள்ளப்பட்டுள்ள கொடூர தாக்குதலை ஜனநாயகத்தின் மீது பற்றுக்கொண்ட எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்த நாட்டின் பிரஜை என்ற முறையிலும் நாட்டை நேசிக்கின்ற தேசப்பற்றுள்ள பிரஜை என்ற முறையிலும் சிறுபான்மை தமிழ் பேசும் முஸ்லிம் சமுகத்தை சேர்ந்தவன் என்ற முறையிலும் பெரும்பான்மை சிங்கள மக்களுடன் அவர்களை நண்பர்களாக கொண்டு அவர்களின் பாசையில் அங்குள்ள பாடசாலையில் சிங்கள மொழியில் சரளமாக படித்தத்தவன் என்ற முறையிலும் மிகவும் வெட்கமான- கேவலமான பௌத்த மதத்துக்கே அசிங்கமான நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தக் கூடிய இவ்வாறான சம்பவத்தைஇட்டு மிகவும் மன வேதனையடைகின்றேன்.

சட்டத்துக்கும் ஒழுங்குக்கும் பொறுப்பான ஜனாதிபதி அவர்களும் பாதுகாப்பு செயலாளர் அவர்களும் நாட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் சூழ்நிலைகளை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பொதுபல சேனா, சிங்கள ராவய என்பன ஒன்றாக சேர்ந்து சட்டத்தை தங்களது கையில் எடுத்து இவ்வாறான கொடூர செயலை செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.

ஆகையினால் நடந்தேறிய தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு இழப்பெடுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் இனிமேல் இவ்வாறன சம்பவங்கள் இடம்பெறாதவாறு முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வன்முறைகளை முன்னெடுத்து வருகின்ற அனைத்து தீவிரவாத அமைப்புகளையும் தடை செய்ய வேண்டும் என்றும் ஞான சார தேரர் போன்றோர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் கல்முனை மாநகர சபை அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” என்று முதல்வர் குறிப்பிட்டார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஏ.அமிர்தலிங்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான ஏ.ஏ.பஷீர், ஏ.ஆர்.அமீர், ஏ.எல்.எம்.முஸ்தபா, எம்.எஸ்.உமர் அலி, ஏ.எம்.பரக்கத்துல்லா, எம்.ஐ.எம்.பிர்தௌஸ், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் பெஸ்டர் ரியாஸ், ஐ.தே.க.உறுப்பினர் ஏ.எச்.எம்.நபார் ஆகியோரும் இக்கண்டனப் பிரேரணை மீது உரையாற்றினர்.