கிழக்கு கல்வித்துறையில் முறையற்ற நியமனங்கள்! ரத்துச்செய்யாவிடின் கல்வி வீழ்ச்சியடையும் அபாயம்! - இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்.

கிழக்கு மாகாண கல்வித்துறையில் அண்மைக்காலமாக முறையற்ற நியமனங்கள் இடம்பெற்றுவருகின்றன. இதனால் கல்வித்துறை மேலும் வீழ்ச்சியடையும் ஆபத்து எதிர்நோக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்தகாலங்களைப்போலல்லாது கல்வியில் மிகவும் ஆழமாக அரசியல் ஊடுருவியுள்ளது.இதனால் எதையெடுத்தாலும் அரசியல் சிபார்சு எதிர்பார்க்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

கிழக்கில் அண்மைக்காலமாக தற்காலிகம் என்றபோர்வையில்   இடம்பெற்றுவரும் ஆசிரிய ஆலோசகர் நியமனம் உதவிக்கல்விப்பணிப்பாளர் நியமனம் என்பன முழுக்கமுழுக்க அரசியல்சிபார்சில் வழங்கப்பட்டுவருவதாக திறமையான தகுதியுள்ள ஆசிரியர்கள் கவலைப்பட்டு சங்கத்தின் கவனத்திற்கு  கொண்டுவந்துள்ளனர்.
பல வலயங்களில் நீண்டகாலமாக மேற்படி உதவிக்கல்விப்பணிப்பாளர் பதவி ஆசிரியஆலோசகர் பதவி என்பன நிரப்பப்படாதிருந்துவருகின்ற வேளையில் சில வலயங்களில் அவசர அவசரமாக தற்காலிகம் என்றுகூறி எந்தவித முறையான பரிட்சையோ நேர்முகப்பரீட்சையோ இல்லாமல் அரசியல் சிபார்சில் நியமனம் வழங்கப்பட்டுவருகிறது. இந்த அவசரத்தின் அவசியம் என்ன?
போட்டிப்பரிட்சை நடாத்தி அதிலிருந்து இலங்கை ஆசிரியர் சேவை தரம் 1 அல்லது தரம் 2-1 ஜச் சேர்ந்தவர்களை நேர்முகப்பரீட்சையினூடாக தெரிவுசெய்வது முறையான நடைமுறையாகும். அப்போதுதான் தரமாக கல்வியை எதிர்பார்க்கலாம்.

ஆனால் இந்நடைமுறை அண்மைக்காலமாக மீறப்பட்டுவருவது அவதானிக்கப்படுகிறது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கல்வி தொடர்பான அநீதிகளை பிரச்சினைகளை பாரபட்சங்களைத் தீர்ப்பதற்கு பிரத்தியேக பிரிவொன்று தேவைப்படுவதாக இணைப்பாளர்கள் அலுத்துக்கொள்கின்றனர்.
இதுதொடர்பாக கேட்பதற்கு மாகாணகல்விப்பணிப்பாளரைத் தொடர்புகொள்ள முயற்சித்தால் முடியாமல்போகின்றது.
எனவே முறையற்ற விதத்தில் வழங்கப்பட்ட நியமனங்களை ரத்துச்செய்து உரிய முறையில் விண்ணப்பங்களைக்கோரி திறந்த பரீட்சை மூலம் நேர்முகப்பரீட்சையினூடாக நியமனங்களை வழங்குமாறு வலியுறுத்துகிறோம்.

கணித விஞ்ஞான உதவிக்கல்விப்பணிப்பாளர் பதவிகளுக்கு விஞ்ஞான கணித பட்டதாரியல்லாத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.  இது முறையா? யாரது சிபார்சில் இம்முறையற்ற நியமனங்கள் இடம்பெறுகின்றன? ஒருவர் பல வருடங்களாக ஒன்றுக்குமேற்பட்ட பதவிகளை கவனித்துவருவது முறையா?
மேடையில் பேசும்போதுமட்டும் எதிர்கால சந்ததிக்கு நாம் துரோகம் செய்யக்கூடாது நல்ல தரமான கல்வியை வழங்கவேண்டும.; என்றெல்லாம் கூறுவார்கள். ஆனால் இவ்வாறான முறையற்ற நியமனங்கள்  ஊடாக அவர்கள்தான் எதிர்காலசந்ததிக்கு துரோகம் செய்கின்றார்கள்.
கல்வித்துறையில் ஆசிரியர் இடமாற்றங்கள் ஏலவே அரசியலால் குழம்பிப்போயுள்ளது. அவரவர் விரும்பியவாறு விரும்பிய காலத்தில் இடமாற்றங்களைச் செய்கின்றனர். கிழக்கு மாகாணத்திற்கென இடமாற்றக்கொள்கையொன்று இதுவரை ஏற்படுத்தப்படவில்லை.
தேசியக்கல்விக்கொள்கை இடமாற்றசபைகள் போன்றன வெறும் கண்துடைப்பாகவே இருந்துவருகிறது. இடமாற்றசபைகளில் எடுக்கப்படும் தீர்மானங்கள் இரவோடிரவாக மாற்றப்பட்டு தேவைக்கேற்ப மாற்றப்படுகின்றன.

அப்பாவி ஆசிரியர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுவருகின்றனர். நீதிகேட்டுச் செல்லும் ஆசிரியர்கள் மனமுறிவோடு திரும்பவேண்டியுள்ளது.பாசைப்பிரச்சினை ஒருபுறம்.
இந்நிலையில் கல்வி அடைவுமட்டத்தை எவ்வாறு உயர்வாக எதிர்பார்ப்பது? பவர்பொயின்ற் சமர்ப்பணத்தை காண்பித்து அதிபர் மற்றும் கல்வி அதிகாரிகளிடம் எவ்வாறு அடைவுமட்டம் குறைந்தது என்று கேட்பதில் பிரயோசனம் உண்டா?

முதலில் கல்வியில் சமவாய்ப்பை ஏற்படுத்தி சகல வளங்களையும் பாரபட்சமின்றி வழங்கிவிட்டு அடைவுமட்ட அபிவிருத்திபற்றிகேட்டால் ஓரளவு நியாயம் எனலாம்.

எனவே கல்வி அபிவிருத்திபற்றி இனிமேல் பேசுவதானால் இம்முறையற்ற நடைமுறைகளை களைந்துவிட்டுவாருங்கள். மாணவர்கள் பாவம். கடவுள்தான் காப்பாற்றவேண்டும்.

( வி.ரி.சகாதேவராஜா)