யோகேஸ்வரன் எம்.பிக்கு எதிரான துண்டுபிரசுரத்திற்கு கண்டன அறிக்கை

வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம் தொடர்பாகவும், எமது கௌரவ ஆலயத் தலைவர் தொடர்பாகவும் ஆனி மாதம் 22ம் திகதி வற்றிநியூஸ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட செய்தி தொடர்பாக உண்மைத்தன்மையை  தெளிவுபடுத்த வேண்டியது எமது ஆலய தர்மகர்த்தா சபையினரின் கடப்பாடாகும்.
அந்தவகையில் எமது வருடாந்த பொதுக்கூட்டம் ஆனி மாதம் 15ம் திகதி காலை 8.00 மணிக்கு ஆரம்பமானபோது இரண்டாவது  தடவையாகவும் இவ்வருட நிதியாண்டிற்கான ஆலயத்தலைவராக எல்லோராலும் ஏகமனதாக கௌரவ சீ.யோகேஸ்வரன்  அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்.

எனினும் அதன் பின்னர் எமது ஆலய வளர்ச்சியில் பொறாமை கொண்டவர்களும் இஎமது ஆலய வளர்ச்சியினை பொறுக்கமுடியாத விசமிகளும், எமது கௌரவ ஆலயத்தலைவரின் தனிப்பட்ட, அரசியல் எதிரிகளாலும், எமது ஆலயத்தையும்  எமது கௌரவ ஆலயத் தலைவரையும் இழிவுபடுத்தும் விதத்தில் துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டது.


இத் துண்டுப்பிரசுரத்தில் உள்ள விடயங்களில் எவ்வித உண்மையும் இல்லை என்பதோடு இதை யாரும் பெரிதுபடுத்தவில்லை என்பதே உண்மையாகும். இருந்தபோதும் தீர விசாரிக்காமல் எமது ஆலயம் தொடர்பாகவும் எமது கௌரவ ஆலயத் தலைவரையும் இழிவுபடுத்தும் விதத்த்pல் இணையத்தளத்தில் செய்திகளை வெளியிடுவது கண்டிக்கத்தக்கது ஆகும்.

இதனை நாம் தனிப்பட்ட ஒருவருக்கு ஏற்பட்ட அவமானமாக கருதாது எமது ஆலயத்தின் வளர்ச்சிக்கும், இறையாண்மைக்கும் ஏற்பட்ட அவமானமாகவே கருதுகிறோம். எனவே  இனி வரும் காலங்களில் இவ்வாறான ஆதாரமில்லாத துண்டுப்பிரசுரங்களை இணையத்தளத்தில் வெளியிடும் போது அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்வதோடு இதற்கு வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய தர்மகர்த்தா சபையினரின் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.



வாழைச்சேனை புதுக்குடியிருப்பு  இந்து இளைஞர் மன்ற கண்டன அறிக்கை

அத்தோடு அண்மையில் 15-06-2014 அன்று எமது இந்து இளைஞர் மன்றத்தினுடைய தலைவர் கௌரவ சீ.யோகேஸ்வரன்  அவர்கள் தொடர்பாக மிகவும்  கீழ்த்தரமான முறையில் துண்டுப்பிரசுரம் ஒன்று எமது இந்து இளைஞர் மன்றத்தினுடைய பெயரை பயன்படுத்தி வெளியிடப்பட்டது.

இதற்கும் எமது இந்து இளைஞர் மன்றத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. அத்துடன் இது எமது கௌரவ தலைவரின் வளர்ச்சியில் பொறாமை கொண்டவர்களால் வெளியிடப்பட்டுள்ளது என்பதே உண்மை.

இருந்தபோதிலும் இது தொடர்பாக ஆனி மாதம் 22 ம் திகதி தங்களது இணையத்தளத்தில் பொறுப்பற்ற முறையில் இத்துண்டுப்பிரசுரம் தொடர்பான செய்தி வெளியிடப்பட்டது. இப்படியான செய்திகளை வெளியிடும்போது அதன் உண்மைத்தன்மையை எங்களுடன் தொடர்பு கொண்டு கேட்டிருக்க வேண்டும். இவ்வாறு தான்தோன்றித்தனமாக செய்தி வெளியிடுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.