எமது நாட்டில் இடம் பெற்ற சரி பிழைகளை ஆராயும் வல்லமை சர்வதேசத்திற்கில்லை-ஸ்ரீ.ல.சு.கட்சி அமைப்பாளர் அருண் தம்பிமுத்து


(மா.சசி)

எமது நாட்டில் இடம் பெற்ற சரி பிழைகளை ஆராயும் வல்லமை சர்வதேசத்திற்கில்லை. கடந்த 30 வருடங்களாக நமது நாட்டில் இடம் பெற்றதையெல்லாம் வேடிக்கை பார்த்த சர்வதேசம் இன்று மட்டும் வந்து என்ன செய்யப்போகின்றது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் ஜனாதிபதி இணைப்பாளருமாகிய அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.

நேற்று சனிக்கிழமை (28.6.2014) மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.


தொடர்ந்து அவர் தெரிவிக்கையில் சர்வதேச விசாரணை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஆர்ப்பரிக்கின்றனர். இது தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பிரிவினையையும், மக்கள் மத்தியில் ஒரு நிம்மதியற்ற நிலைமையினையுமே ஏற்படுத்தும்.

யுத்தம் முடிந்து முன்னாள் போராளிகள் என்ற ரீதியில் புனர்வாழ்வு பெற்று அனைத்தையும் மறந்து நிம்மதியாக அமைதியாக வாழந்து கொண்டிருக்கும் எமது உறவுகளை மீ;ண்டும் கோரமான நிலைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையாகவே இது அமைந்திருக்கினறது.;

தேசிய அரசியல் கட்சிகளில் தமிழர்களின் பிரதி நிதித்துவம் இருக்க வேண்டும். அப்போதுதான் தமிழர்களின் குரல்களும் தேசியரீதியில் எழுப்பப்படும்.

கிழக்கு மாகாணத்தில் ஒரு தமிழ் அமைச்சர்களும் இல்லாததினால் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த முடியாதுள்ளது.அதற்கான பிரேரணையினை முன்வைக்க ஒரு அமைச்சர் இல்லாதுள்ளது.



கிழக்கு மாகாணத்தில் ஒரு தமிழ் அமைச்சர் இருந்திருந்தால் கல்முனையில் தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும் நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுத்து அதை முன்னெடுத்து அந்தப்பிரச்சினையை தீர்த்து வைத்திருக்கலாம்.

 இன்று இரண்டு தமிழ் அமைச்சர்கள் இருக்கின்றார்கள். அதில் அமைச்சர் தொண்டமான மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தியும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடமாகாணத்தை பிரதிநித்துவப்படுத்தும் வகையிலும் இருக்கின்றனர்.இவர்கள் கல்முனை தமிழ் பிரதேச செயலக விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கத் தயாரில்லை.

அந்த வகையில் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்களின் தேவைகளை அமைச்சரவைக்கு கொண்டு சென்று நிறைவேற்றிக் கொள்வதற்கு தமிழ் அமைச்சர் ஒருவர் கிழக்கு மாகாணத்திலில்லை.


கல்முனையில் தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதால் முஸ்லிம்களுக்கு எந்தவொரு ஆபத்தும் ஏற்படப்போவதில்லை. இது தொடர்பில் முஸ்லிம்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை.
கல்முனையில் தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோருவது எமது அடிப்படை உரிமையாகும். இந்த விவகாரம் தொடர்பாக நானும் நடவடிக்கை எடுத்தேன்.


நமது நாட்டில் அரசியல் மாற்றம் வரவேண்டுமாக இருந்தால் அனைத்து சமூகங்களையும் இனைத்துத்தான் அதை பெறமுடியும். ஒரு சமூகத்தினை விட்டு தவிர்த்து எந்தவொரு மாற்றத்தினையும் பெற்றுக்கொள்ள முடியாது.



முப்பது வருடங்களின் பின்னர் தமிழ் மக்கள் ஒரு திசை தெரியாத நிலையிலேயே இருக்கின்றார்கள். இந்நிலமையினை அரசியலில் இருப்பவர்கள் நன்கு புரிந்து கொண்டு தமிழ் மக்களுக்கு வழிகாட்டும் விதத்தில் செயற்படவேண்டும்.

தற்போது எமது கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பல மாற்றங்களை உருவாக்கியுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் தமிழ் உறுப்பினர்கள் இணைக்கப்பட்டு தமிழ் மொழியில் கருமம் ஆற்றக் கூடிய செயற்பாடுகளும் அதிகரித்துள்ளன.

ஆளும் கட்சியிலுள்ள அரசியல்வாதிகள் அரசியல் சலுகைகளுக்காக அரசியலுக்கு வந்தவர்கள் என பலர் மத்தியில் அபிப்பிராயக் கருத்துக்கள் உண்டு. இந்த அபிப்பிராயம் மாற்றப்படல் வேண்டும். அரசியலுக்காக அரசியல் கட்சிகளில் சேரவேண்டும்.

இதுவரை காலமும் நான் கட்சியில் இருந்து ஒரு ரூபாய் கூட சம்பாதித்ததில்லை. எனது அரசியல் நடவடிக்கை எனது சொத்துக்களின் மூலமாகவே இடம் பெற்றுவருகின்றது.

தமிழ் தேசியம் பற்றி எனக்கு உடன்பாடான கருத்துக்களும் இருக்கின்றன. முரண்பாடான கருத்துக்களும் இருக்கின்றன.

நான் மற்றவரை ஏளனம் செய்வதற்கோ விமர்சிப்பதற்கோ அரசியலுக்கு வரவில்லை.

ஜனநாயக மரபுகள் எங்கள் மத்தியில் இல்லாது போனதால்தான் தமிழர்களின் நிலைமை இன்று இவ்வாறு இருக்கின்றது. எமது மக்கள் வெறுமனே ஆட்டு மந்தைகளாகவே கையாளப்பட்டிருக்கின்றார்கள்.

எமது தமிழ் சமூகம் கடந்த கால யுத்தத்தில் தியாகிகள் துரோகிகள் என்ற பெயர்களில் தமிழ் தலைமைகளையும், தமிழ் புத்தி ஜீவிகளையும் இழந்திருக்கின்றோம்.

தற்போது சர்வதேச விசாரணை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஆர்ப்பரிக்கின்றனர். இது தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பிரிவினையையும், மக்கள் மத்தியில் ஒரு நிம்மதியற்ற நிலைமையினையுமே ஏற்படுத்தும்.

யுத்தம் முடிந்து முன்னாள் போராளிகள் என்ற ரீதியில் அனைத்தையும் மறந்து புனர்வாழ்வு பெற்று நிம்மதியாக அமைதியாக வாழந்து கொண்டிருக்கும் எமது உறவுகளை மீ;ண்டும் கோரமான நிலைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையாகவே இது அமைந்திருக்கின்றது.

எமது நாட்டின் சரி பிழை குறித்து கூறும் அருகதை சர்வதேச சமூகத்திற்கு கிடையாது எனவும் தெரிவித்தார்.

மேலும் எனது அலுவலகத்தில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் என்னை மக்கள் சந்திக்கலாம்.புதன் மற்றும் வியாழக்கிழமைகளிலும் மக்கள் எனது காரியாலயத்திற்கு வரமுடியும். எனது அமைப்பாளர்களையும் சந்திக்க முடியும். வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கட்சி உறுப்பினர்களின் சந்திப்பு இடம்பெற்று வருகின்றது.

இந்த மாவட்டத்தில் எமது சமூகத்தின் கல்வி அபிவிருத்திக்காக பல திட்டங்களை நான் மேற் கொண்டுள்ளேன். அதே போன்று இளைஞர் யுவதிகளின் முன்னேற்றம், வாழ்வாதாரம் போன்ற பல்வேறு திட்டங்களையும் மேற்கொள்வதற்கு நான் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன் என மேலும் அவர் தெரிவித்தார்.