சுற்றாடலை தூய்மையாக வைத்திருக்க வேண்டியதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வு ஊர்வலங்கள் மட்டக்களப்பு நகரில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றன.
மட்டக்களப்பு மாநகர சபையினால் அனுஷ்டிக்கபட்டு வரும் உள்ளுராட்சி வாரத்தின் இரண்டாம் நாள் நிகழ்வாக கல்லடி மணிக்கூட்டுக் கோபுரம், மாமாங்கப் பிள்ளையார் கோவில் சந்தி, புதூர் நூலகம் ஆகிய மூன்று இடங்களிலிருந்து ஊர்வலங்கள் ஆரம்பமாகி முனை வீதி சிறுவர் பூங்காவைச் சென்றடைந்தன.
இதன்போது மாநகர சேவைகள் தொடர்பான வீதி நாடகம் கிழக்கு பல்கலைக் கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிலைய மாணவர்களினால் கிழக்கு பல்கலைக் கழக மருத்துவ பீடத்தின் முன்னால் நடாத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம். உதயகுமார் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
மாநகர சபையின் உதவி ஆணையாளர் என். தனஞ்செயன், கிழக்கு பல்கலைக் கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிலைய பணிப்பாளர் கே. பிரேம்குமார், வரியிறுப்பாளர் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.












