வாகரை-பால்சேனை அ.த.க. பாடசாலை உதை பந்தாட்டப் போட்டியில் தேசியமட்டத்திற்கு தெரிவு

(சித்தாண்டி நித்தி) 2014 ஆம் ஆண்டு பாடசாலைகளுக்கு இடையில், கல்முனை ஷஹிறா கல்லூரியில் நடைபெற்ற மாகாண மட்ட 15 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான உதை பந்தாட்டப் போட்டியில் மட்/ககு-பால்சேனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அணியினர் 26 பாடசாலை உதை பந்தாட்ட அணியுடன் போட்டியிட்டு தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

கல்குடா கல்வி வலயத்தின் வாகரைக் கோட்ட அதிகஸ்டப் பிரதேச பாடசாலையான இதில்,  உரிய பயிற்சி பெறக்கூடிய உதை பந்தாட்ட மைதானமோ, அவ்விளையாட்டுக்கான வளங்களோ இல்லாத நிலையில், மாணவர்களின் அயராத உழைப்பினாலும்,  திருமதி.ஹரிதர்சன் ஜெயப்பிரபா, திரு.சு.ஜெயமுரளி ஆசிரியர்களின் பயிற்றுவித்தலினாலும் இவ்வெற்றி நிலையை அடையக்குகூடியதாக இருந்தது எனினும் புற்பற்றைகளுடன் குன்றும் குழியுமாக உள்ள மணல் தரைகளில் வெறுங்காலுடன் பயிற்சிபெற்று, இவ்வெற்றி ஈட்டப்பெற்றமை தமிழ் பிரதேச பாடசாலை என்ற வகையில் குறிப்பிடத்தக்கது. 

பாடசாலையின் அதிபர் இவ்வெற்றிதொடர்பாக தனது கருத்தைகுறிப்பிடுகையில் 'இப்பாடசாலை கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் வலய மற்றும் மாகாண மட்டத்தில் 2012, 2013 ஆம் ஆண்டுகளில் சாதனைகளை ஈட்டிவந்துள்ளதை பலரும் அறிவர். அதேபோன்று இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் பெரும் சாதனைகளை நிலை நாட்டி வந்த இப்பாடசாலைக்கு எவராலும் எவ்வித ஊக்குவிப்புக்களும், ஆதரவுகளும் வழங்கப்படவில்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும். இந்நிலையில் உரிய பொருத்தமான பௌதிக வளங்கள் வழங்கப்பட்டால், இப்பாடசாலைச் சமூகம் தேசிய இலக்குகளை அடையும் என வித்தியாலய முதல்வர் திரு.பொன்.இராமச்சந்திரன் மகிழ்ச்சியோடு கூடிய கவலையை தெரிவித்தார்.