'இந்த நாட்டை மற்றவர்கள் கட்டி எழுப்புவதற்கு நீங்கள் சந்தர்ப்பம் வழங்காதீர்கள். சூழல் மாசடைவதால் இந்த உலகமும் மனித மனங்களும் கெட்டுப் போயிருக்கின்றது.' இவ்வாறு சர்வோதயத் தலைவர் கலாநிதி ஆரியரட்ண தியானித்தார்.
சர்வோதய தியான நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வமத தியான நிகழ்வு மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதய தியான மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட சர்வோதய இணைப்பாளர் எஸ். மதனகுமார் தலைமையில் இன்று புதன்கிழமை 11.06.2014 இடம்பெற்றது.
தியான நிகழ்வை ஆரம்பித்து வைத்து தொடர்நது உரையாற்றிய சர்வோதய இயக்கத்தின் தலைவர் கலாநிதி ஏ.ரி. ஆரியரட்ண,
நிலம், நீர், வளி, ஆகாயம் என்று இன்று எல்லாமே மனித நடவடிக்கைகளால் மாசுபட்டிருக்கின்றது. இதனை விட மனித மனங்கள் குரோத உணர்வுகளாலும் தீய எண்ணங்களாலும் அழுக்கடைந்து கறை படிந்திருக்கின்றது.
இப்பொழுது நாம் ஒரு நச்சுச் சூழலுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எனினும் இதனை இவ்வாறே விட்டு வைக்காமல் நாம் இந்த உலகத்தைத் தூய்மையானதாக மாற்றி எதுவுமறியாத அப்பாவிகளாகப் பிறக்கப்போகும் எதிர்கால சந்ததியினருக்கு தூய்மையான ஒரு உலகத்தைப் பரிசளிக்க வேண்டும்.
நாம் பருகும் நீரில் நஞ்சு கலந்திருக்கின்றது, நாம் உற்பத்தி செய்யும் மரக்கறிகளும், காய் கனிகளும் தானியங்களும் இறைச்சி வகையும் இரசாயனங்கள் கொண்டு உற்பத்தி செய்யப்படுகின்றன. அதனையே நாம் உண்கின்றோம், அதனால் மெல்ல மெல்ல நமது உடல நஞ்சூட்டப்படுகின்றது.
போத்தல்களில் அடைக்கப்படும் குடி நீர் கூட இன்று மாசுபட்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அணு ஆயுதத்தால் உலகம் அமைதியிழந்து இயற்கையும் மனித இருப்பும் கேள்விக்குள்ளாகியிருக்கின்றது.
இவை என்னதான் நடந்தாலும் நமது நாட்டு அரசியல்வாதிகளும் உலகிலுள்ள ஜாம்பவான் அரசியல் வாதிகளும் இது பற்றிச் சிந்திப்பதாக இல்லை. அவர்களது சிந்தனை அதிகாரத்தையும் பணத்தையும் தக்கவைத்துக் கொள்வதாகவே இருக்கின்றது.
சமயத் தலைவர்களும் தங்களது சுயநலத்தின் காரணமாக பிளவுபட்டுள்ளார்கள்.
உலகில் நடக்கும் மனித நாச வேலைகளைத் தடுத்து அமைதி நிறைந்த ஆன்மீக உலகை உருவாக்க உலகிலுள்ள ஆன்மீகத் தலைவர்கள் யாவரும் ஒன்று படவேண்டும் என்ற வேண்டுகோளை ஈரானிலுள்ள இஸ்லாமிய ஆன்மீகத் தலைவர்கள் முன்வைத்துள்ளார்கள்.
இன்று இஸ்லாமிய எழுச்சிக்கூடாக இஸ்லாமிய ஆன்மீக உலகம் ஒன்றுபட ஆரம்பித்திருக்கின்றது.
இலங்கையிலும் நாம் தொன்று தொட்டு ஐக்கியப்பட்ட சமூகங்களாகவே வாழ்ந்து வந்திருக்கின்றோம். ஆயினும் சுயநல அரசியல்வாதிகளின் போக்குகளால் சக வாழ்வு வாழும் மக்களுக்கிடையிலான சமாதானம் சீர்குலைக்கப்பட்டிருக்கின்றது.
நாட்டில் கடந்த 56 வருடங்களாக சர்வோதய இயக்கம் சமாதானத்திற்காக பாடுபட்டு வந்திருக்கின்றது. இன,மத மொழி வேறுபாடுகளுக்கப்பால் ஒரேகுடும்பம், மனிதம் என்பதே சர்வோதய இயக்கத்தின் அடி நாதமாகும்,
உலக சமாதானத்தை வேண்டிய ஒரு முன்னெடுப்பாக எதிர்வரும் 27 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் உலகிலுள்ள முக்கிய 5 மதங்களின் தலைவர்களும், சகல அரசியல் தலைவர்களும் ஒன்றிணைகிறார்கள், உலகிலுள்ள 200 நாடுகளிலிருந்து 1600 சர்வோதயத் தொண்டர்களும் இந்நிகழ்வில் பங்குபற்றுகின்றார்கள்.
இரண்டு மணித்தியால 'மைத்திரி பாவனா'தியானத்தில் நாமெல்லோரும் அன்றைய தினம் ஒன்றிணைகின்றோம்.
அந்த ஆன்மீக தியான ஒருமைப்பாட்டு எழுச்சியைத் தொடர்ந்து ஜுலை 05 ஆம் திகதி இரவு 9.30 மணிக்கு உலகம் பூராகவுமிருந்து வருகை தரும் 1.4 மில்லியன் மக்கள் ஒன்று கூடி உலக அமைதிக்காகவும் சகவாழ்வுக்காகவும் மனஒருநிலைப்பாட்டு தியானத்தில் ஈடுபடவிருக்கின்றார்கள்.
அது போன்று நீங்களும் உங்கள் உள்ளத்தில் அமைதியைப் பயிற்றுவித்து அதனை உலக அமைதிக்காகப் பரப்ப வேண்டும். உள்ளத்திலிருந்து உருவாகும் ஒளி உலகை அமைதிப் பூங்காவாக மாற்றும்' என்றார்.
சர்வோதயத் தலைவர் கலாநிதி ஏ.ரி. ஆரியரட்ணவின் துணைவியார் நீதா ஆரியட்ண, சர்வோதய கிழக்கு மாகாண இணைப்பாளர் ஈ.எல். அப்துல் கரீம், முன்னாள் மட்டக்களப்பு கல்வி வலயப் பணிப்பாளர் சுபா சக்கரவர்த்தி, மட்டக்களப்பு வின்சன்ற் தேசியக் கல்லூரி அதிபர் கனகசிங்கம் ராஜகுமாரி ஆகியோரும் மட்டக்களப்பு வின்சன்ற் தேசியக் கல்லூரி மாணவிகள், கிராமிய சர்வோதயத் தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் தியான நிகழ்வில் கலந்து கொண்டனர்.












