வனவள சூழல் பாதுகாப்புப் பற்றிய விழிப்பூட்டல் செயலமர்வு

(சுழற்சி நிருபர் & சதீஸ் )
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வனவள சூழல் பாதுகாப்புப் பற்றிய செயலமர்வு வவுணதீவுப் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் கடந்த புதன்கிழமை (25.06.2014) இடம்பெற்றது.

வவணதீவுப் பிரதேச செயலகப் பிரிவில் கடமையாற்றும் சகல கிராம சேவை அதிகாரிகளும், குடியேற்ற உத்தியோகத்தர்களும், காணிப்பிரிவு அலுவலர்களுக்குமாக இந்த செயலமர்வு இடம்பெற்றது.
வனவளங்களைப் பாதுகாப்பதின் நன்மைகளும் காடழிப்பினால் உண்டாகும் தீமைகளும் பற்றிய விரிவான விழிப்புணர்வூட்டல் இந்த செயலமர்வின் போது இடம்பெற்றதாக மாவட்ட உதவி வனவள அதிகாரி எம்.ஏ. நஸீஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்தில் காடழிப்பினால் மக்கள் நீண்டகால நோக்கில் எதிர்கொள்ளக் கூடிய இயற்கைச் சவால்கள், மற்றும் மனிதர்களுக்கும் ஏனைய ஜீவராசிகளுக்கும் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் பற்றியும் இவற்றைத் தடுத்து நிறுத்துவதற்காக உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவான விளக்கமளிக்கப்பட்டதாக உன்னிச்சைப் பிராந்திய வனவள வெளிக்கள உத்தியோகத்தர் எம்.எல்.எம். நிஸ்மி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்தில் சமகாலத்தில் ஏற்படக் கூடிய நிகழ்வுகளாக நீர் நிலைகளும் காடுகளும் கருகிப் போனதால் காட்டு யானைகளின் ஊடுருவல், கடும் வறட்சி, நிலத்தின் ஈரலிப்பு வறண்டு போதல், மண்ணரிப்பு என்பன பேரழிவுகளாக உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

வவணதீவு உதவிப் பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாபு, வனவள வெளிக்கள உத்தியோகத்தர்களான கே. குலேந்திரன், எஸ். தம்பிராசா ஆகியோரும் இந்த சூழல் பாதுகாப்புப் பற்றிய செயலமர்வில் கலந்து கொண்டு தமது கருத்துக்களைப் பரிமாறினர்.