இன்று சுவாமி விபுலானந்த அடிகளாரின் 67வது சிரார்த்த தினம்!

( வி.ரி.சகாதேவராஜா)
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 67வது சிரார்த்த தினம் (19.07.2014 சனிக்கிழமை) இன்றாகும். 
காரைதீவில் 27.03.1892இல் பிறந்த அவர் 55 ஆண்டுகள் இப்பூவுலகில் வாழ்வாங்கு வாழ்ந்து தமிழுக்கும் சமயத்திற்கும் ஆன்மீகத்திற்கும் அரும் தொண்டாற்றி 19.07.1947 இல் புகழுடம்பெய்தினார் என்பது தெரிந்ததே.
இலங்கை அரசாங்கம் சுவாமி விபுலானந்தரைக் கௌரவிக்குமுகமாக அவரது உருவப்படம் பொறித்த நினவு முத்திரையை வெளியிட்டதுடன் கல்வியமைச்சின் தேசிய தமிழ்மொழித்தின விழாவை அவரது சிரார்த்த தினத்தில் நடாத்துவதென்றும் பிரகடனம் செய்தது.

விஞ்ஞானத்தையும் மெய்ஞ்ஞானத்தையும் ஒருங்கே கற்று இயல் இசை நாடகம் எனும் முத்தமிழிலும் துறைபோன உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியரான சுவாமி விபுலானந்தரின் 67வது சிரார்த்த தினத்தையொட்டி இன்று தமிழ்கூறு நல்லுலகெங்கும் பல நினைவு நிகழ்ச்சிகளை நடாத்த ஏற்பாடாகியுள்ளன.

கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவகம் என்பன நேற்றும் இன்றும் நினைவுப்பேருரையுள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை நடாத்திவருகிறது.
முதன்முறையாக சுவாமிகள் பிறந்த காரைதீவு உள்ளிட்ட இடங்களில்  தயாரித்த வீடியோ ஆவண விபரணத்திரைப்படம் கல்லடி சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் இராஜதுரை அரங்கில் காண்பிக்கப்படவுள்ளது. மேலும் நினைவுப்பேருரைகள் கலைநிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.

இலங்கையின் பல பாகங்களிலும் உலகின் தமிழர் வாழும் பல நாடுகளிலும் இன்றையதினம் சிரார்த்ததின நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
இதனைவிட அவர் பிறந்த காரைதீவு மண்ணிலும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கனடா சுவாமி விபுலானந்தர் சங்கம் இன்றைய தினம் நடாத்தும் பெருவிழாவிற்காக ஒரு மாத காலத்திற்கு முன்னரே மாணவர் மத்தியில் பெரும் போட்டிகளை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.