(சதீஸ்)
மட்டக்களப்பு வாகனேரி நீர்ப்பாசன திட்டத்தின்மூலம் தற்போது வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் உடனடி நடவடிக்கையினால் நீர்பாசனம் வழங்கப்பட்டுள்ளது.
மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக சுமார் பத்தாயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நெல்வயல் நிலங்களுக்கு உடனடி நீர்பாசனம் வழங்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் பொன்.ரவீந்திரன் தெரிவித்தார்.
அண்மையில் விவசாயிகள் குழுவொன்று பிரதியமைச்சர் முரளிதரன் அவர்களை சந்தித்து நீர் தட்டுப்பாடு பற்றி பேசி நீர்வழங்க வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
மாதுறுஓயா குளத்திலிருந்து வாகனேரி நீர்ப்பாசனக் குளத்திற்கு வரும் நீர் நெலும்வெவ, நமயல பகுதியில் கட்டப்பட்டுள்ள பாரிய அணையினால் தடைப்பட்டிருந்தது. பிரதியமைச்சரின் இவ் முயற்சியினால் நூற்றுக்கணக்கான தமிழ்,முஸ்லிம் விவசாயிகள் பயன்பெறவுள்ளனர்.
கடந்த 15 நாட்களாக நீர்ப்பாசனம் கிடைக்கப்பெறாமல் இருந்ததாக கூறப்படும் அக்குரான, களுவாமடு, புனாணை, மயிலந்தனை, மற்றும் கிடச்சிமடு உட்பட பல பகுதி வயல் நிலங்கள் சமீபகால வரட்சியினால் பாதிப்புக்குள்ளாகியிருந்ததஞ குறிப்பிடத்தக்கது.













