கட்டுரை-சிறுவர்கள் என்பர்கள் இன்னொருவரின் சரியான வழிகாட்டல்களின் கீழ் வளர்க்கப்பட வேண்டியவர்கள். எனவே அவர்களின் சகல நடத்தைகளுக்கும் பெரியவர்களே காரணமாகின்றனர். சிறுவர்களின் கல்வியின் முக்கியத்துவத்தினை பெரியவர்களே முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.
பெற்றோர்களின் விளிப்புணர்வின்மையே பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும்பாலும் தடையாக அமைகின்றது. பெற்றோர்கள் வெளிநாட்டுக்குச் செல்கின்றமை குறிப்பாக தாய்மார் வெளிநாட்டு வேலைக்குச் செல்கின்றமை பிள்ளைகளை தனிமையாக்கி விடுவதாகவும் அதுவே அவர்களின் தொழிலுக்குச் செல்வதற்கான வழியைத் திறப்பதாகவும், தெண்டிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அத்தோடு பெற்றோர்கள் வெளிநாட்டுக்குச் செல்வதால் பிள்ளைகளின் பராமரிப்பு தாத்தா, பாட்டி மாரிடமும் ஏனைய உறவினரிடமும் ஒப்படைக்கப்படுவதாகவும் அவர்கள் தான் பிள்ளைகளை விடுமுறை நாட்களில் வேலைக்குச் செல்ல அனுமதிப்பதாகவும் அதுவே பிள்ளைகளின் பணம் பெறுவதற்கான ஆசையைத் தூண்டி கல்வி ஆசையை முறியடிப்பதாகவும் உணர்த்தப்படுகின்றது.
சிறுவர்களின் கல்வியில் தொழில் ஒரு தடையாக அமைந்தாலும் சில சிறுவர்கள்
அதற்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். சில மாணவர்கள் தமது குடும்பத்தினைக்
காப்பாற்ற வேண்டும் என்பதற்காக வேலைக்குச் செல்கின்றனர் எனவும்
குறிப்பிடப்படுகின்றது.
கிராமப்புறங்களில் பாடசாலைக்கும் வீட்டுக்குமான தூரம் அதிகம், பஸ் வண்டிச் சேவை மிக மிகக் குறைவு, பிரதேச பாடசாலைகளில் ஆசிரியர்கள் போதாமை போன்றவையும் மாணவர்களை கல்வியில் இருந்து விலகி வேலைக்குச் செல்லத் தூண்டுகின்றது அதேவேளை வயது முதிர்ந்தவர்களின் பராமரிப்பில் இருக்கும் பிள்ளைகள் வீட்டில் சமையல் வேலைகளுக்கு குறிப்பாகப் பெண் பிள்ளைகள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இதானால் பிள்ளைகள் தமது உணவுக்காகவும் தனது சகேதரர்களுக்காகவும் பாடசாலைக் கல்வியை இடை நிறுத்தவேண்டி ஏற்படுகின்றது. இதற்கான முக்கிய காரணம் தாய்மார் வெளிநாடு செல்வதும், தந்தைமார் வேறு திருமணம் முடிப்பதுமே ஆகும்.
சிறுவர்களை வேலைக்கமர்த்துவதால் அவர்களது வறுமை ஓரளவு நீங்கிய போதும் கல்வி ரீதியாக அது பெரும் பாதிப்பையே ஏற்படுத்துகின்றது. சிறுவர்களிற்கு அவர்களின் வயதிற்குரிய அடிப்படை வசதிகள், கல்வித் தேவைகள் என்பன பூர்த்தி செய்யப்படுவது மிகவும் முக்கியமாகும். இவர்களை தமது வயதிற்கு மீறிய வேலையை செய்யத் தூண்டும் போது அவர்கள் தமது உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் கடுமையான பாதிப்பை அடைகின்றார்கள்.
இங்கு இச் சிறுவர்களின் கல்விச் சிறுபராயமானது முற்றாக மறுக்கப்படுகின்றது.
இவ்வாறு பாதிப்படையும் சிறுவர்கள் எதிர்காலத்தில் ஒரு நல்ல பிரஜையாக
உருவாக்க முடியாதுள்ளது. இன்று பாரிய சமூக விரோதச் செயல்களில்
ஈடுபட்டவர்களின் கடந்த காலத்தை நோக்கினால் அவர்களில் பெரும்பாலானோர்
சிறுவயதில் தொழில் புரிந்தோ அல்லது வேறு எவ்வகையிலேனும் பாதிக்கப்பட்டோ
இருந்தவர்களாகவே தான் காணப்படுகின்றார்கள். இதற்கு காரணம் சிறுவயதில்
இவர்களுக்கு ஏற்பட்ட உடல், உள ரீதியான தாக்கங்களே அவர்களின் நடத்தை
மாற்றங்களிற்கு காரணமாக அமைந்து விடுகின்றன.
இவற்றில் இருந்து வெளிப்படையாகத் தெரியும் விடயம் என்னவெனில் சிறுவர்கள் தாமாக விரும்பி வேலைக்குப் போவதில்லை. அவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். கல்வியில் உயர்வதற்கு தமது அடிப்படைத் தேவைகள் அவர்களுக்கு அளவாகக் கிடைத்தாலே போதும். தற்கால எழுவினாக்களில் சிறுவர்களின் நன்னடத்தைகள் பாதிக்கப்பட்டு வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே வேலியே பயிருக்கு ஆபத்தாக இருந்தால் அவர்களின் எதிர்காலம் என்னாவது? பிள்ளைகளின் தேவைகள் சந்திக்கப்படும் போதுதான் அவர்கள் கற்றலில் முழுமையாக ஆர்வம் காட்டுவர் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.
-சந்துரு மரியதாஸ் -
உதவி விரிவுரையாளர்
கல்வி, பிள்ளை நலத்துறை
கிழக்குப்பல்கலைக்கழகம்.
-சந்துரு மரியதாஸ் -
உதவி விரிவுரையாளர்
கல்வி, பிள்ளை நலத்துறை
கிழக்குப்பல்கலைக்கழகம்.













