கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஹொரண ஸ்ரீபாலி வளாக ஊடகக் கற்கைத் துறை விரிவுரையாளர்களும் மாணவர்களும் நேற்று மட்டக்களப்புக்கு கற்கை கள விஜயம் மேற்கொண்டதாக ஊடகக் கற்கைத் துறைப் பிரிவுத் தலைவர் கலாநிதி. ரஞ்சன் ஹெட்டியாராய்ச்சி தெரிவித்தார்.
புதனன்று காலை மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கும், ஏறாவூர் நகர சபைக்கும் இவர்கள் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
ஏறாவூர் நகர சபைக்கு விஜயம் செய்த கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஹொரண ஸ்ரீபாலி வளாக ஊடகக் கற்கைத் துறை விரிவுரையாளர்களையும் மாணவர்களையும் ஏறாவூர் நகர பிதா அலிஸாஹிர் மௌலான வரவேற்றதுடன் கடந்த யுத்தகாலச் சூழ்நிலைகள் மற்றும் சமகால நிலைமைகள் பற்றி விரிவாக விளக்கமளித்தார்.
பொதுவாக ஆயுத வன்முறைகளுக்குப் பின்னரான சமகால நிலைமை, இனங்களுக்கிடையிலான சகவாழ்வுச் சூழ்நிலை, பாதிப்புக்களிலிருந்து மக்கள் மீண்டெழுவதற்கான சாதகமான வாய்ப்புக்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்திகள் உள்ளிட்ட பல விடயங்கள் தமது கள கற்கை விஜயத்தின்போது அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்ததாக தலைமை விரிவுரையாளர் குமேஷ் பிரபாஷினி தெரிவித்தார்.
அங்கு ஊடகவியலாளர் சந்திப்பொன்றும் இடம்பெற்றது.
இனங்களுக்களுக்கிடையிலான இன ஐக்கியத்தை வளர்ப்பதில் இப்பகுதியில் ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களினதும் பங்கும் பணியும் பற்றியும் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஹொரண ஸ்ரீபாலி வளாக ஊடகக் கற்கைத் துறை விரிவுரையாளர்களும் மாணவர்களும் கேட்டறிந்து கொண்டனர்.
யுத்த காலத்தில் படுகொலைகளும், இனச்சுத்திகரிப்பும், தொடர்ச்சியான தாக்குதல்களும், இடம்பெற்று திறந்தவெளி அகதி முகாம்போல ஆக்கப்பட்டிருந்த ஏறாவூர் நகர பிரதேசத்தில் யுத்தம் காரணமாக ஏற்பட்ட சாதகமான மாற்றங்களால் ஏறாவூர் கல்விக் கோட்டம் தற்பொழுது இலங்கையில் கடந்த மூன்று வருடங்களாக முதல் தர கல்வி அடைவு மட்டத்தை எட்டியிருப்பதாக ஏறாவூர் நகர பிதா அலிஸாஹிர் மௌலான விளக்கமளித்தார்.
யுத்தப் பாதிப்புக்களிலிருந்து கல்வி அபிவிருத்தியை நோக்கி மீண்டெழுவதற்கு இது சிறந்ததொரு எடுத்துக் காட்டு என்று அலிஸாஹிர் மௌலானா சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் கடையிசியாக உருவாக்கப்பட்ட மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் உள்ள ஏறாவூர் கல்விக் கோட்டம் கடந்த மூன்று வருடங்களாக இடம்பெற்று வரும் க.பொ.சா.த. பரீட்சையில் ஆகக் கூடிய சித்திடையும் திறனைப் பெற்று முதலாமிடத்தைத் தக்கவைத்து வருகின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












