பொத்துவிலுக்கு வழங்கப்பட்ட சொகுசு பஸ் அதாஉல்லாவினால் அபகரிப்பு பிரச்சாரம் உண்மைக்குப் புறம்பானது - உதுமாலெப்பை

(ஏ.எல்.ஜனூவர்)
பொத்துவில் உப பஸ் சாலைக்கு வழங்கப்பட்ட சொகுசு பஸ் அமைச்சர் அதாஉல்லாவினால் அபகரிக்கப்பட்டுள்ளதாக மேற்கொள்ளப்பட்டு வரும் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட விசமத்தனமான பிரச்சாரம் உண்மைக்குப் புறம்பானது என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை குறிப்பிட்டார்.



பொத்துவிலுக்கு வழங்கப்பட்ட சொகுசு பஸ் அமைச்சர் அதாஉல்லாவினால் அபகரிப்பு என்று வெளியாகியுள்ள செய்திக்கு மறுப்புத் தெரிவிக்கையில் அமைச்சர் உதுமாலெப்பை மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அமைச்சர் மேலும் தெரிவித்தாவது,
பிரதேச வாதங்களை வளர்த்து, பிரதேசங்களுக்கிடையில் பிணக்குகளை உருவாக்கி, சுயநல அரசியலுக்கு முன்னுரிமை வழங்கிச் செயற்படும் முஸ்லிம் காங்கிரஸினால் காலத்திற்குக்காலம்; தேசிய காங்கிரஸின் தலைமைத்துவம் குறித்து இத்தகைய பொய்ப்பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவது ஆச்சரியமான விடயமல்ல.
தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவர் அமைச்சர் அதாஉல்லாவின் சேவையின் மீது மக்கள் கொண்டுள்ள நல்லெண்ணத்திற்கு ஊறு விளைவிக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் இத்தகைய விசமத்தனமாக பிரச்சாரங்கள் ஒருபோதும் பயனளிக்கப்போவதில்லை.


கடந்த மே மாதம் 30ஆம் திகதி  நடைபெற்ற அக்கரைப்பற்று இ.போ.ச. பஸ் சாலையின் 35வது வருட நிறைவு விழாவிற்கு அமைச்சர் அதாஉல்லாவின் அழைப்பின் பெயரில் பிரதம அதிதியாக கலந்து கொள்ள  வருகை தந்த போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம   பொத்துவிலில் தங்கியிருந்த வேளை, முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள் போக்குவரத்து அமைச்சரைச் சந்தித்து, பொத்துவில் உப பஸ் சாலைக்கு சொகு பஸ் வழங்க வேண்டும் என்று கேட்டதாகவும் அதற்கு அமைச்சரினால் இரு  சொகுசு பஸ்கள் வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டதாகவும்; அந்த பஸ்கள் பொத்துவிலுக்கு கிடைப்பதை அமைச்சர் அதாஉல்லா தடுத்துள்ளதாகவும்  பொத்துவில் பிரதேச சபைத் தலைவரினால் வழங்கப்பட்டுள்ள ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்;, இவ்விடயத்திலுள்ள  உண்மைத் தன்மை குறித்து மக்கள் அறிவது அவசியமாகிறது என அமைச்சர் தெரிவித்தார்
உண்மைய நிலை என்னவெனில்,  அக்ககரைப்பற்று பஸ் சாலையின் 35வது வருட நிறைவு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் குமார வெல்கம அக்கரைப்பற்கு இ.போ.ச பஸ் சாலைக்கு 2 சொகுசு பஸ்களும் 4 சாதாரண பஸ்களும் வழங்குவதாக குறிப்பிட்டிருந்தார். இவற்றில் இரு  சொகுசு பஸ்களை உடன் வழங்குவதாகவும் தெரிவித்ததுடன், இ.போ.ச பஸ் சாலைகளுக்கு பஸ்களை பகிர்ந்தளிக்கும் திட்டத்திற்காக இறக்குமதி செய்யப்படும் 200 பஸ்களில் பொத்துவில் உப   பஸ்சாலைக்கும் இரண்டு பஸ்களை வழங்குவதாகக் குறிப்பிட்டார்.
இவ்வேளை, அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, கல்முனை பஸ் சாலைகளுக்கு பஸ்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பாக பொத்துவில் மற்றும் அக்கரைப்பற்று பஸ்சாலைகளுக்கு பஸ்கள் வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் அதாஉல்லா போக்குவரத்து அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

பாராளுமன்ற பிரதிநிதித்துவமோ, மாகாண சபை பிரதிநிதித்துவமோ இல்லாத பொத்துவில் பிரதேசத்தின் அபிவிருத்திக்காக மில்லியன் கணக்கில் செலவு செய்யும் அமைச்சர் அதாஉல்லா, கேவலம் இரு சொகுசு பஸ்கள் பொத்துவிலுக்கு கிடைப்பதை அபகரித்துள்ளார் என்பது  அபாண்டமான குற்றச்சாட்டாகும். இக்குற்றச்சாட்டானது காழ்ப்புணர்ச்சியுடன் கூடிய  சின்னத்தனமான பிரச்சாரமாகவே நோக்க வேண்டியுள்ளது.
பொத்துவில் பிரதேச மக்களின் மீதுள்ள பற்றின் காரணமாக அப்பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதில் அமைச்சர் அதாஉல்லா எவ்வளவு அக்கறை கொண்டுள்ளார் என்பதை பொத்துவில் மக்கள் நன்கு அறிந்து யதார்த்தநிலையைப் புரிந்துகொண்டு தேசிய காங்கிரஸின் பக்கம் பெரும்பான்மையான மக்கள்  இணைந்து வருவதைச் சகித்துக்கொள்ள விரும்பாதவர்கள் தேசிய காங்கிரஸுக்கும் மக்களுக்குமிடையே இடைவெளியை ஏற்படுத்தி பொத்துவில் பிரதேசத்தை மீண்டும் இருண்ட சூழ்நிலைக்குள் தள்ள முயற்சிக்கின்றனர்..

பொத்துவில் பிரதேசத்தின் அபிவிருத்திக்காக பல நூற்றுக்கணக்கான மில்லியன் ரூபாய்கள் அமைச்சர் அதாஉல்லாவினால் செலவிடப்பட்டுள்ளது. பொத்துவில் கலாசார மண்டபம், புதிய பிரதேச சபைக் கட்டட நிர்மாணம், பசரிச்சேனை விளையாட்டு மைதான அபிவிருத்தி, விவசாய வீதிகள் நிர்மாணம், பொத்துவில் மத்திய கல்லூரியின் பார்வையாளர் அரங்கு உட்பட இன்னும் பல உட்கட்டமைப்பு வசதிகளுக்கான அபிவிருத்திப் பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்

அது மாத்திரமின்றி முஸ்லிம் காங்கிரஸின் அதிகாரத்திலுள்ள இறக்காமம், நிந்தவூர் பொத்துவில் பிரதேச சபைகளுக்கும் கல்முனை மாநகர சபைக்கும் உள்ளுராட்சி மாகாண அமைச்சினால் வாகனங்கள் மற்றும் கட்டட வசதிகள் அமைச்சர் அதாஉல்லாவின் சிபாரிசின் பெயரில் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் அதாஉல்லாவினால் குறிப்பாக பொத்துவில் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளை, பொய்ப்பிரச்சாரங்கள் செய்து தங்களது சுயநல அரசியல் இருப்பைத்; தக்கவைத்துக்கொள்ள விரும்பும் முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள்  மறந்தாலும், பொத்துவில் மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள் என்று நம்புகின்றேன்.

அட்டாளைச்சேனைப் பிரதேசத்திற்கு நீண்டகாலமாக அரசியல் அதிகாரம் வழங்கப்படுமென முஸ்லிம் காங்கிரஸினால் ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் வாக்குறுதி அளிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டு வந்த இப்பிரதேத்தலிருந்து கிழக்கு மாகாண சபைக்கு இரு முறை என்னைத் தெரிவு செய்து மாகாண அமைச்சர் பதவியையும் வழங்கி யுத்தத்தினாலும் இயற்கை அனர்த்தத்தினாலும் பாதிக்கப்பட்டு அரசியல் அதிகாரமில்லாமல் இருந்த சகோதரக் கிராமமான பொத்துவில் பிரதேசத்திற்கு முடிந்தளவு பணிகளை புரிய வேண்டுமென தேசிய காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான அதாஉல்லா வேண்டிக்கொண்டதற்கிணங்க நான் பிறந்த மண்ணின மக்களைபோல் பொத்துவில் பிரதேச மக்களையும் கருதி முடிந்த அத்தனை பணிகளையும் மேற்கொண்டு வருகின்றேன்.

அதற்கமைய, பொத்துவில் பிரதேச மக்களின் வாழ்வாதார உயிர்நாடியாக விளங்கும் விவசாய நீர்ப்பாசன அபிவிருத்திக்காக 110 மில்லியன் ரூபாவும், வீதி அபிவிருத்திக்காக 200 மில்லியன் ரூபா நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலை, கல்வி உட்பட ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகளும் பொத்துவில் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதை பொத்துவில் மக்கள் மாத்திரமல்ல, பொய்ப்பிரச்சாரங்களை மேற்கொண்டு தங்களது சுய அரசியலுக்காக மக்களை திசை திருப்பிக்கொண்டிருப்பவர்களும் நன்கு அறிவார்கள்.
காலாகாலம் பொத்துவில் பிரதேச மக்களை ஏமாற்றி வாக்குகளைக் கொள்ளையடித்து, அதிகப்படியான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதன் பின்னர் அப்பிரதேசத்தினதும் மக்களினதும் தேவைகளில் எவ்விதமான அக்கறையும் கொள்ளாதவர்கள் தேசிய காங்கிரஸின் தலைமைத்துவத்தினாலும் என்னாலும் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திப் பணிகளை மக்களிடமிருந்து மூடிமறைப்பதற்காக இத்தகைய போலிப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவது வேதனையளிக்கிறது.
பொத்துவில் பிரதேசத்தில் என்னால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்திப் பணிகளைச் சகித்துக்கொள்ள முடியாத முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்களால் சொந்த மண்ணைக் காட்டிக்கொடுப்பது போன்று அட்டாளைச்சேனையின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதியினை பொத்துவில் பிரதேசத்துக்கு கொண்டு செல்கிறார் எனவும் என்மீதும் குற்றஞ்சுமத்தினர்

இந்நிலையில், பொத்துவில் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தயாராகவுள்ளது என்பதை பகிரங்கமாகத் தெரிவிக்க முன்வருமாயின் அப்பிரதேசத்தில் எங்களால்; மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளிலிருந்து விலகிக்கொள்ளத் தயாராகவுள்ளோம்.
இதேவேளை, போக்குவரத்து பஸ் சாலைகளின் முகாமைத்துவங்களுக்கிடையில் நிலவும் நிர்வாக நடைமுறைச் சிக்கல்களின் காரணமாக ஏற்பட்ட இந்த சொகுசு பஸ் விடயத்தை தேசிய காங்கிரஸின் தலைமைத்துவத்தின் மீது வீண் பழி சுமத்த முயற்சிக்கும் இவர்களின் போலிப் பொய்பிரச்சாரங்களுக்கு மக்களே பதில் அளிக்க வேண்டும்,
உண்மைக்குப் புறம்பான இவ்விடயத்தில் அமைச்சர் அதாஉல்லா எவ்விதத்திலும் தொடர்புபடவில்லையெனவும்,  வேண்டுமென்றே அப்பிரதேச முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்களினால்; மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட பிரச்சாரம் இதுவெனத்;; தெரிவித்துக்கொள்வதாக அமைச்சர் உதுமாலெப்பை மேலும் குறிப்பிட்டார்.