தமிழ் மொழியைக் கற்று வெளியேறும் சிங்களப் பொலிஸாரின் நிகழ்வு!

(சுழற்சி நிருபர்;)
மட்டக்களப்பு – கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் தமிழ் மொழியைக் கற்று வெளியேறும் 93 சிங்களப் பொலிஸாரின் பல்வேறுபட்ட நிகழ்வுகள் இன்று 15.08.2014 வெள்ளிக்கிழமை காலை கல்லடியிலுள்ள பொலிஸ் கல்லூரியில் இடம்பெற்றது.

கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பதிகாரி கே. பேரின்பராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இக்கல்லூரில் தமிழ் மொழி கற்று வெளியேறும் ஆண் பொலிஸார் 90 பேரும் பெண் பொலிஸார் 3 பேருமாக இணைந்து தமிழ் மொழியில் நாடகம், நடனம், பாடல் போன்ற நிகழ்வுகளை நடத்திக் காட்டினர்.


இந்தக் கல்லூரியில் இரண்டாம் மொழி தமிழைக் கற்று வெளியேறும் எட்டாவது அணி இதுவாகும்.
இவர்களுக்கு ஆறு மாதகாலம் தமிழ் மொழி ஆற்றல் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
தமிழ் மற்றும் சிங்கள மொழியில் வல்லுநர்களான உப பொலிஸ் பரிசோதகர்கள் ஜுட் ரொமேஷ், அன்புராஜ் சந்தியாகுமாரி, கிருஷ்ணகுமாரி ஜெயநந்தகுமார், பொலிஸ் சார்ஜன்ற் ரீ. சிங்கராஜா, வெளிக்கள உத்தியோகத்தர் லக்ஷ்மி நிர்மலகுமாரன், ஆகியோரால் பயிற்சியளிக்கப்பட்டதாக கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பதிகாரி கே. பேரின்பராஜா தெரிவித்தார்.

இன்றைய நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட 231 வது இராணுப் பிரிவின் பிரிகேடியர் மேஜர் ஜெனரல் கே.எச்.பி. பாலித்த பெர்னான்டோ, தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி உபாலி ஜெயசிங்ஹ, மட்டக்களப்பு பொலிஸ் பரிசோதகர் ஏ.ஏ. வாஹித், உள்ளிட்ட இன்னும் பல பொலிஸ் உயர்நிலை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.