ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நடைபெறும் பொலிஸ் நடமாடும் சேவை

(தியாஷினி)

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கான மாபெரும் பொலிஸ் நடமாடும் சேவை இன்று (23) காலை 9.00 மணிமுதல் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நடைபெறுகின்றது.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல் தலைமையில் நடைபெறும் இந்நடமாடும் சேவையின் ஆரம்ப வைபவத்திற்கான பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் கலந்துகொண்டதுடன், தேசியக்கொடி மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ கொடியேற்றத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

பிற்பகல் 4.00 மணிவரை நடைபெறவுள்ள இந்நடமாடும் சேவையில் கல்முனை பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் நடமாடும் பற்சிகிச்சை நிலையம், அட்டாளைச்சேனை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை, அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலை, ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரியின் பணிமனை ஆகியவற்றிலிருந்து வருகை தந்துள்ள வைத்திய நிபுணர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மூலமான வைத்திய சேவைகள் வழங்கப்படுவதுடன், ஆலையடிவேம்பு பிரதேச மக்களின் சிவில் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் பொருட்டு ஆலையடிவேம்பு பிரதேச இணக்கசபை உறுப்பினர்கள் மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மூலமான சேவைகளும் வழங்கப்படுகின்றன.

இவற்றுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் பதிவாளர் பிரிவு, சமுகசேவைகள் பிரிவு, நிருவாகப் பிரிவு, வாழ்வின் எழுச்சி (சமுர்த்தி) அபிவிருத்திப் பிரிவு, கிராம அபிவிருத்திப் பிரிவு, திட்டமிடல் பிரிவு மற்றும் காணிப் பிரிவு ஆகியவற்றின் உத்தியோகத்தர்களும் கிராம உத்தியோகத்தர்களும் இந்நடமாடும் சேவையில் பொதுமக்களுக்கான தமது சேவைகளை வழங்குகின்றனர்.

இந்நடமாடும் சேவையில் பனங்காடு கிராம அபிவிருத்திச் சங்கத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட ஒருதொகுதி கழிவறைகளைச் சுத்தப்படுத்தும் திரவங்கள் அடங்கிய பொதியினை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் அக்கரைப்பற்று மாவட்ட வைத்திய அதிகாரி எம்.ரி.ஜாரியாவிடம் கையளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.