(த.லோகதக்சன்)
வாழைச்சேனைப் பிரதேசத்தில் நூறு வருடங்களுக்கு மேற்பட்ட ஆலயமாக வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 20ம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 29ம் திகதி வெள்ளிக்கிழமை தீர்த்த உற்சவத்துடன் மஹோற்வசம் நிறைவுபெறவுள்ளது.
20ம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகி பத்து நாட்கள் திருவிழாவான இடம்பெற்று 29ம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவடையும்.
எதிர்வரும் 24ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாம்பழத் திருவிழா, 27ம் திகதி புதன்கிழமை வேட்டைத் திருவிழா ஆலய பின் தெரு மக்களாலும், மறுநாள் வியாழக்கிழமை தேரோட்டத் திருவழாவானது ஆலய முன்தெரு மக்களாலும் இடம்பெறும்.
இத்தேரோட்டத் திருவிழாவானது ஆலயத்திலிருந்து காலை ஆரம்பமாகி வாழைச்சேனை பேச்சியம்மன் ஆலய வீதி, சேர்மன் கனகரெத்தினம் வீதி, பிரதான வீதி, விபுலானந்த வீதி, புதுக்குடியிருப்பு வழியாக சென்று பத்திரகாளியம்மன் ஆலயம், சிவமுத்துமாரியம்மன் ஆலயம் பின்னர் வாழைச்சேனை மாடி வீதி, கல்குடா வீதி, விபுலானந்த வீதி, மீண்டும் கல்குடா வீதி வழியாக வருகை தந்து ஆலயத்தை சென்றடையும்.
இறுதி நாள் 29ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.00 மணிக்கு வங்கத்தின் கரை பாசிக்குடா கடற்கரையில் புண்ணிய தீர்த்தோற்சவம் இடம்பெற்று மாலை திருப்பொன்னூஞ்சல் பூசையும், கொடியிறக்க பூசையுடனும் உற்சவம் நிறைவு பெறும்.
ஆலய உற்சவத்தின் தேரோட்டத் திருவிழா, தீர்த்தோற்சவ திருவிழா ஆகிய இரு நாட்களும் அன்னதானம் ஆலயத்தில் வழங்கப்படும்.
ஆலய வராலாற்றின் சிறு குறிப்பு :
அந்தக்காலத்தில் இப்படி அருமையான ஒரு இடத்தில் தன் மூத்த குமாரனும் மூலப்பொருளுமான ஸ்ரீ கைலாயர் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் போது அவருக்குத் துணையாக வந்திருப்பது போன்று அவர் தாயான உமையம்மையார் ஸ்ரீ முத்துமாரியம்மன் என்னும் பெயருடன் அருகில் கோயில் கொண்டெழுந்தருளியுள்ளார்.
முற்காலந்தொடக்கம் அண்மைக்காலம் வரை கதிர்காம யாத்திரை செய்யும் அடியார்கள் முத்துமாரியம்மன் கோயிலருகிலும், அக்காலத்தில் ஆலயத்தின் முன்நின்ற சீனிப்புளிய மரத்தடியிலும் தங்கிச் சமைத்துச் சாப்பிட்டுச் செல்வர். காலநிலைத்திரிபுகள் காரணமாக இப்போது அடியார் யாத்திரைகள் குறைவுபட்டு விட்டன. இருந்தும் சில அடியார்கள் இப்போதும் வந்து செல்கின்றனர்.
மட்டக்களப்பு மாமாங்கத்திற்கு வருகை தந்த இராமபிரான் மதுரை ஓயா நதியைக் கடந்து செல்வதற்காக வாழைச்சேனை ஊரில் (அக்காலத்தில் இந்த இடம் அடர்ந்து குளிர்ந்த ஆனந்தமான சோலைக்காடாக இருந்திருக்கும்.) சிறிது பொழுது தங்கியிருந்து இளைப்பாறி இவற்றைக் கடந்து பிரயாணத்தை தொடர்ந்திருக்கலாம். ஏனெனில் நாம் குறிப்பிட்டபடி பண்டைக்காலம் தொடக்கம் மட்டக்களப்பு புகையிரத வீதியும், றோட்டுப்பாதையும் (ஓட்டமாவடிப் பாலம் அமைந்த பின்) திறக்கும் வரை கிழக்குப் பிரயாணங்கள் யாவும் மதுரைஓயா ஆற்றின் தபால் துறை வழியாகவே நடைபெற்றது. ஆதலால் ஸ்ரீ இராமபிரான் குழுவினரும் இக்கரையில் தங்கியிருந்தே ஆற்றைக் கடந்திருப்பார் என்று யூகிப்பதில் சந்தேகப்பட இடமில்லை.
இவ்வாலயத்தில் விசேடமாக வெள்ளிக்கிழமைகளில் மதிய பூசையாக ஒரு பொங்கல் நடக்கும் என்று நேர்த்திக்கடன் வைத்தோர்களும் இடையிடையே பொங்கல் பூசை செய்து வந்தனர் என்றும் முன்னோர் கூறியுள்ளார். இக்காலத்தில் ஒரு அற்புதமான நிகழ்ச்சியும் இக்கோயிலில் நடந்ததாம் அதாவது “பிச்சிலான்” கணபதி என்னும் ஒரு பையன் பூசை நடைபெறும் காலங்களில் தவறாது இக்கோயிலுக்கு வந்து பிள்ளையாரை வணங்கி பொங்கல் வாங்கி சாப்பிடுவது வழக்கமாய் இருந்ததாம். தற்செயலாக ஒருநாள் பிச்சிலான் பூசைக்குப் பிந்தி விட்டான் பூசை முடிந்து ஆட்களும் கலைந்து விட்டனர்.
பிச்சிலானுக்கு பொங்கல் கிடைக்கவில்லை பசியும் சலிப்பும் ஏற்பட பிச்சிலான் பிள்ளையாரைத் துக்கிக் கொண்டு போய் கோயில் முன் இருந்த ஓடைக்குள் போட்டுவிட்டுப் போய்விட்டான். அடுத்தமுறை பொங்கல் செய்ய வந்தவர்கள் கோயிலுக்குள் பிள்ளையாரைக் காணாது எங்கும் தேடினார் பூசைக்கு நேரம் போகிறது பிள்ளையாரைக் காணவில்லை கடைசியாக அந்த ஓடையில் சலவை செய்து கொண்டிருந்த சலவைத் தொழிலாளி ஒருவரிடம் விசாரித்த போது பிச்சிலான் தான் அந்தப் பக்கம் திரிந்தான் என்றாராம் பூசைக்காரர் பிச்சிலான் போனபக்கம் ஓடையைப் போய்ப் பார்த்தபோது அதற்குள் பிள்ளையார் போடப்பட்டிருப்பதைக் கண்டு அதை எடுக்கத் தூக்கிய போது முடியாத பாரமாய் இருந்ததாம் பல பேர் தூக்கியும் தூக்கமுடியாது போக பின்பு பிச்சிலானை தேடிப்பிடித்துக் கூட்டி வந்து அவன் போய் துக்கியதும் இலகுவாய் தூக்கப்பட்டதாம் அவனையே கொண்டு இருந்;த இடத்தில் முன்போல் பிள்ளையாரை வைப்பித்து பொங்கலிட்டுப் பூசை முடிந்ததும் பிச்சிலானுக்கு முதலில் பொங்கல் கொடுத்து அவனை மகிழ்வித்தனராம் அன்றிலிருந்து யார் பொங்கலிட்டாலும் பிச்சிலானை மறவாது அவனுக்கு ஒரு பங்கு கொடுத்து வந்தனர்.
குறிப்பிட்ட பிச்சிலான் நிகழ்ச்சியின் பின்னர் பொக்கணியர் தமது மக்கள் உட்பட வண்ணக்கு, கங்காணி அதிகாரிகளுடன் ஊரிலுள்ள அனைத்து குடிமக்களிருந்தும் ஒவ்வொரு குடிக்கும் ஒருவர் வீதமாக பிரதிநிதிகளைக் கொண்டதான ஒரு முகாமைத்துவத்தை அமைத்துப் பரிபாலிக்கத் தொடங்கினர்.
இதனால் இக் கோயிலைக் கல்லினால் கட்டியும் முடித்தனர். அக்காலத்தில் கைலாய மலையிலிருந்து கல்லெடுத்துப் பொழியப்பட்ட மூன்று பிள்ளையார் உருவச்சிலைகள் கப்பல் முலம் இலங்கைக்குக் கொன்டுவரப்பட்டன என்றும், அதில் ஒரு சிலையை மேற்படி கோயிற் பரிபாலகர் வாங்கி விதிமுறையான அபிசேக, பூசா அர்ச்சனைகளுடன் புதிதாகக் கட்டப்பட்ட கோயிலில் மூலமூர்த்தியாக வைத்து 1908ம் ஆண்டு ஆவணி மாதம் முதன் முதற் கும்பாபிசேகம் நடத்தினார்கள் என்பது பற்றி சிறுகுறிப்பொண்டு அக்காலத்தில் கங்கானக் குறிப்புப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இக் கும்பாபிசேகத்தின் போது ஸ்ரீ கைலாயப் பிள்ளையாரைத் தூக்கி ஆசனத்தில் வைத்தார்கள்.

















