பாரம்பரிய அரங்க விழாவில் "புலிக்கூத்து"

மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில், இவ்வருட விழா உற்சவத்தின்போது 'பாரம்பரிய அரங்க விழா' ஒன்று நடைபெற்றது. இது இவ்வாலய திருவிழாக் காலங்களில் கடந்த மூன்று வருடங்களாக, கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்களின் முன்னெடுப்பில் கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறையினரால் நடாத்தப்பட்டு வரும் தொடர்செயற்பாடாகும். இவ்வகையிலே இம்முறையும் நான்காவது வருடமாக இப்பாரம்பரிய அரங்கவிழா செவ்வனே நடந்து நிறைவேறியது.

இவ்விழாவில் ஒவ்வொரு வருடமும் தமிழரின் பாரம்பரியக்கலையான பாரம்பரியக்கூத்தின் வட்டக்களரி அமைக்கப்பட்டு அதில் பாரம்பரியக்கூத்துக்கள் இடம்பெறும், அத்தோடு பாரம்பரிய கலைசார் காட்சிப்படுத்தல்களும் இடம்பெறுவது வழக்கம். இம்முறையும் இவை ஏற்பாடு செய்யப்பட்டு, தப்பிசை, மத்தளக்கச்சேரி, பறை முழக்கம், போன்ற பாரம்பரிய இசை நிகழ்ச்சிகளும் வடமோடி - தென்மோடிக் கூத்துக்கள், புலிக்கூத்து என்பனவும் நிகழ்த்தப்பட்டன. மேலும் பாரம்பரிய அரங்க காட்சிப்படுத்தல்களாக கொம்புமுறிச்சடங்காற்றுகைப் பொருட்களும், பாரம்பரிய வாத்தியங்களும் காட்சிப்படுத்தப்பட்டன. இது மட்டுமன்றி கூத்தரங்கின் எழுத்துப் பனுவல்களை ஆக்கும் புலவர்களின் சந்திப்பு, சமகால கூத்தரங்க இயக்கப் பின்புலத்தில் செம்மையாக்கம்-நவீனவாக்கம்-மிளுருவாக்கம் என்ற எண்ணக்கருக்கள் பற்றிய உரையாடல்கள், இளம் கூத்துக்கலைஞர்களைக் கௌரவித்தல் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றன. 

மேலும் இப்பாரம்பரிய விழா, மட்டக்களப்பின் சில பாரம்பரியக் கலைகளை ஒரே இடத்தில் காணும் சந்தர்ப்பத்தினையும் வழங்கியது. இச்சந்தர்ப்பம் கோயில் திருவிழா காணவந்த மக்கள், பாரம்பரியக்கலை சார்ந்த ஆர்வலர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள் என பலருக்கு வாய்ப்பளித்தது. இந்தவகையில் மட்டக்களப்பு, வந்தாறுமூலையிலுள்ள புலிக்கூத்து எனும் பாரம்பரியக்கலையும் இங்கு ஆற்றுகை செய்யப்பட்டது. இக்கலை பெரும்பாலும் பலருக்கு அறியபடாத ஒன்று. எனவே பலர் கூடுகின்ற இத்தகைய சூழலில் இவ்வாறான கலையை வெளிக்காட்டும் ஒரு களமாகவும் இப்பாரம்பரிய விழா அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வகையில் இங்கு ஆற்றுகை செய்யப்பட்ட வந்தாறுமூலை புலிக்கூத்து பற்றி நோக்குவோமாயின்: மட்டக்களப்பு மாவட்டத்தின், பாரம்பரிய கலை வடிவங்களின் உயிர்த்துடிப்பு உள்ள கிராமங்களில் வந்தாறுமூலையும் ஒன்றாக விளங்குகின்றது. இங்கு வடமோடி, தென்மோடிக் கூத்துக்கள், வசந்தன் போன்ற பல பிரபல்யமான  பாரம்;பரிய கலைகள் காணப்படுகின்றன. இவற்றுள் புலிக்கூத்து எனும் பாரம்பரியமான ஒரு கலை வடிவமும்; மறைந்து உள்ளமை, இன்று இக்கிராம மக்களுக்கே பலருக்கு தெரியாத விடயமாக உள்ளது. இந்நிலை இக்கிராமத்தவர் மத்தியில் மட்டுமன்றி எம்மவரிலும் பலர் அறியப்படாத ஒரு நிலையாகவே உள்ளது.

இன்று பல நாடகவியல்; ஆய்வாளர்கள் மட்டக்களப்பின் பாரம்பரிய கலைகளின் தோற்றம் வளர்ச்சி அவற்றின் நிகழ்த்துகை முறைகள் சார்ந்த விடயங்களை கட்டுரை, நூல்கள் வாயிலாக வெளியிட்டுள்ளனர். ஆனால் அவர்களும் இப்புலிக்கூத்து சார்ந்த விடயங்களை ஆய்வு செய்து, பெரிதளவில் பேசத்தவறிவிட்டனர். இதனாலேயே பாடசாலை மட்டத்திலும். பல்கலைக்கழக மட்டத்திலும் பல கலைச்செயற்பாடுகள் இடம்பெறுகின்ற போதிலும், இக்கலைகளிற்குள் புலிக்கூத்து என்ற கலை பற்றி பெருமளவில் அறியப்படவில்லை. இருப்பினும் எமது நுண்கலைத்துறையின் கீழ் கல்வி பயின்ற மாணவி ப.திலகரூபி கடந்த 2010-2011ஆம் ஆண்டளவில் 'வந்தாறுமூலை கலை வடிவங்கள்' எனும்; ஆய்வில் வந்தாறுமூலையில் புலிக்கூத்து எனும் கலைவடிவம் உண்டு என இனங்காட்டி, அதனை  நுண்கலைத்துறையில் நிகழ்த்துகையும் செய்வித்தார். இதன் பின்னரே எமக்கு இப்புலிக்கூத்து பற்றி அறியமுடிந்து. 

இப்புலிக் கூத்தின் கதை அம்சமானது காட்டுக்குச் செல்லும் வேடுவர்களையும் புலியினையும் மையமாக கொண்டமைந்துள்ளது. அதாவது, வேடுவன் ஒருவன் ஒரு புலியினை வளர்த்து அதனை ஊருக்குள் கொண்டு திரிந்து அந்த புலியினை ஆட்டுவித்து பிழைப்பவனாக உள்ளான். இ;வன் தனக்கும் புலிக்கும் உணவு தேடுவதற்காக புலியோடு காட்டுக்குள் செல்வது வழக்கம். இவ்வாறு செல்லும் சமயத்தில் காட்டுக்குள் புலியினை தன்பாட்டில் விட்டு விட்டு அவன் உணவு தேடுகின்றான். இந்த நேரத்தில் ஒரு வேடுவிச்சியும் இரண்டு வேடர்களும் காட்டிற்குள் வருகின்றனர். இவர்கள் வரும் வழியில் இந்த புலி வேடுவிச்சி மீது பாய, வேடுவன் கோபம் கொண்டு புலிக்கு அம்பு எய்து கொன்று விடுகின்றான். இந்த நேரத்தில் புலியினை வளர்த்தவன் வந்து, புலி இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகின்றான். பின்பு, அம்பு எய்த வேடுவனிடம் போய் 'இந்த புலியினை வைத்துத்தான் நான் பிழைக்கின்றேன், என்னுடைய புலியினை எப்படியாவது உயிர்ப்பித்துத் தாருங்கள்' என அழுகிறான். பின் இவனது பரிதாபத்தினால் அம்பு எய்த வேடர்கள் தங்களின் மந்திர வித்தையினால் புலியினை உயிர்ப்பித்து கொடுக்கின்றார்கள். இவ்வாறு அமைந்துள்ளது.

ஆரம்ப காலங்களில் இப்புலிக் கூத்தில் புலியும், புலியினை ஆட்டுபவனும் மட்டுமே பாத்திரங்களாக நின்று, அண்ணாவிவியின் மத்தள இசைக்கும், தாளத்திற்கும் ஏற்ப ஆடினர் என அறிய முடிகின்றது. மேலும் இக்கூத்து சித்திரை வருடப் பிறப்பு போன்ற விசேட நாட்களில் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று அவ்வீட்டு முற்றங்களில் நிகழ்த்தப்பட்டது எனவும், இச்சமயத்தில் சமூகம் மகிழ்தலும், கூத்தினை நிகழ்த்தியவர்களுக்கு வீட்;டவர் அன்பளிப்பு, கைவிஷேடம் போன்றன கொடுப்பது வழக்கம் எனவும் அறியமுடிகிறது. இது மகிழ்வான வாழ்வியல் அம்சத்தினை பிரதிபலிக்கின்றது. ஆனால் இந்த பாரம்பரியமான முறைகள் தற்காலத்தில் மிகமிகக் குறைவு. இத்தகைய பாரம்பரியங்களை விடுவித்து இக்கூத்து தனியாக பிரியாமல் அந்தந்த முறைப்படியே வளர்க்கப்பட வேண்டியது அவசியமாகும்.

இப்புலிக்கூத்தானது, இவ்விழாவின் இரண்டாவது நாள் மாலை இடம்பெற்றது. இக்கூத்திற்கு அண்ணாவியாராக சி.இராசதுரையும், உதவி அண்ணாவியராக கு.ஆண்டியப்பன் என்பவரும் விளங்கினர். வழக்கமாக இப்புலிக்கூத்தினை ஆடும் கலைஞர்கள் பெரியவர்களே. ஆனால், இம்முறை இங்கு ஆடிய கலைஞர்கள் சிறுமிகள். இவர்களது ஆட்டம் மிகவும் அழகான முறையில் அமைந்திருந்தது. இவர்கள் அண்ணாவியாரின் மத்தள ஒலிக்கும், உதவி அண்ணாவியாரின் தாள ஒலிக்கும் ஏற்ப தங்களை இசைவுபடுத்தி ஆடி, தங்களது பாத்திரங்களை சிறப்பாக வெளிப்படுத்தினர். இங்கு ஆட்டத்துடன் அபிநயமே பிரதானமாகக் காணப்பட்டது. சிறுவர்களைக் கூத்தர்களாக கொண்டு இப்புலிக்கூத்து ஆற்றுகை செய்தமை, சிறுவர்களாலும் இத்தகைய கூத்துக்களை செவ்வனே ஆடமுடியும் என்பதனை நிருபித்தது. அதிலும் இக்கூத்தில் முழுக்க முழுக்க சிறுமியர்கள் பங்கு பற்றியமை பாராட்டத்தக்க விடயமாகும் இக்கூத்து தொடங்கி சொற்ப வேளையிலே பார்வையாளர்கள் பலரை ஈர்த்தது. பல சிறுவர்களும் ஓடிவந்து பார்வையிட்டமையினை அவதானிக்க முடிந்தது. சில ஆர்வலர்கள் முன்வந்து பாராட்டி, அச்சிறுமிகளுக்கு அன்பளிப்பும் வழங்கினர். இச்செயற்பாடுகள் அவர்களுக்கான ஊக்கப்படுத்தலாக அமைந்திருந்தது.

இந்தவகையில் பிரபல்யம் இல்லாத நிலையிலும், தொன்மை வாய்ந்த கலையான இப்புலிக்கூத்தினை பயிற்றுவித்து, முன்னெடுத்து வரும் சி.இராசதுரை அண்ணாவியாரும், இவரோடு இணைந்து செயற்படும் கு.ஆண்டியப்பன், இ.லோகிதராஜா போன்றோரும், இக்கூத்தில் பங்குகொள்ளும் கலைஞர்களும் பெரும் பாராட்டிற்குறியவர்களே. எனவே இவ்வாறான  பாரம்பரியக்கலைகளை, இன்றைய எமது காலனித்துவமயப்பட்ட நவீன சமூதாயத்திற்கு இனம்காட்டும் இத்தகைய செயற்பாடு தொடர்செயற்பாடாக அமையவேண்டும்.

நடராஜா துஷ்யந்தி
நுண்கலைத்துறை,
கிழக்குப்பல்கலைக்கழகம்.