(உ.உதயகாந்த்)
கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் மாவட்டமட்ட
விளையாட்டுப்போட்டிகள் வரலாற்றில் இவ்வருடம் (2014) இடம்பெற்ற கராத்தே
சுற்றுப்போட்டிகளில் ஆலையடிவேம்புப் பிரதேசத்திலிருந்து கலந்துகொண்டு அம்பாறை மாவட்டத்தின்
20 பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்தும் பங்குபற்றிய அணிகளுடனும் போட்டியிட்டு
சம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்ட ஆலையடிவேம்புப் பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர்
அழகையா ரிஷந்தன் தலைமையிலான கராத்தே அணி சுவீகரித்த வெற்றிக்கிண்ணத்தைப் பிரதேச
செயலாளர் வி.ஜெகதீசனிடம் கையளிக்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில்
இன்று (13) காலை இடம்பெற்றது.
இந்நிகழ்வில்
குறித்த கராத்தே அணி வீரர்களுக்குப் பயிற்றுவிப்பாளராகச் செயற்பட்ட கிழக்கு மாகாண
JKMO பிரதம போதனாசிரியர் சென்சி கே.கேந்திரமூர்த்தி அவர்களும் கலந்துகொண்டதுடன், குறைந்தளவான வீரர்களுடன் இப்போட்டிகளில் பங்குபற்றி வெற்றிக்கிண்ணத்தை
சுவீகரித்தமைக்காக பயிற்றுவிப்பாளர், விளையாட்டு உத்தியோகத்தர் மற்றும் அணி வீரர்களைப்
பாராட்டிய பிரதேச செயலாளர், அவர்களுக்குத் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இதற்கு
மேலதிகமாக இவ்விளையாட்டுப்போட்டி நிகழ்ச்சிகளில் ஆண்களுக்கான ‘கட்டா’ போட்டியில் ஆலையடிவேம்புப்
பிரதேச அணியைச் சேர்ந்த கே.சாரங்கன் இரண்டாம் இடத்தையும், கே.ரஞ்சி மூன்றாம்
இடத்தையும் பெற்றதுடன், ஆண்களுக்கான ‘குமிட்டே’ போட்டியில் 50 கிலோகிராம் எடைக்குட்பட்டோர்
பிரிவில் கலந்துகொண்ட கே.ரஞ்சி மூன்றாம் இடத்தையும், 84 கிலோகிராமுக்கு
மேற்பட்டோர் பிரிவில் போட்டியிட்ட ரி.சின்னத்தம்பி முதலாம் இடத்தையும், கே.சாரங்கன்
இரண்டாம் இடத்தையும் பெற்று இப்பிரதேசத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர் என்பதும் இங்கே
குறிப்பிடத்தக்கது.


















