இன்று வெருகலம்பதி திருத்தல பாதயாத்திரை ஆரம்பம்!

( வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்றுப்பிரசித்திபெற்ற வெருகலம்பதி சித்திரவேலாயுதசுவாமி ஆலய வருடாந்த ஆவணி மகோற்சவத்தையொட்டி காரைதீவிலிருந்து வேல்சாமி தலைமையிலான குழுவினரின் பாதயாத்திரை இன்று 18ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகியது. 

இன்று பகல் 12மணிக்கு காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகும் பாதயாத்திரை 10 நாட்கள் தொடர்ந்து 10 இடங்களில் தரித்து 26ஆம் திகதி சென்றடையும்.

இன்று பெரியகல்லாற்றில் தரித்துநிற்கும் குழுவினர் நாளை புதுக்குடியிருப்பிலும் நாளை மறுதினம் ஊறணியிலும் மறுநாள் 21ஆம் திகதி வந்தாறுமூலையிலும் 22ஆம் திகதி கிரானிலும் 23ம் திகதி வட்டவானிலும் 24ம் திகதி மாங்கேணியிலும் 25ம் திகதி வாகரையிலும் தரித்து மறுநாள் 26ம் திகதி வெருகலை அடைவர்.  

வெருகலம்பதி சித்திரவேலாயுதசுவாமி ஆலய வருடாந்த ஆவணி மகோற்சவ கொடியேற்றத்திருவிழா இம்மாதம் 27ஆம் திகதி நடைபெறும். கொடியேற்ற தினத்திற்கு வெருகலம்பதியை சென்றடையக்கூடியவாறு இப்பாதயாத்;திரை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக வேல்சாமி மகேஸ்வரன் தெரிவித்தார்.
காரைதீவு ஸ்ரீ நந்தவன சித்திவிநாயகர் தேஸ்தானத்தின் தர்மகர்த்தாவான வேல்சாமி மகேஸ்வரன் கடந்த 15வருடங்களாக கதிர்காமத்திற்கான பாதயாத்திரை தொடர்ந்து பக்த்முக்தியாக முன்னெடுத்துவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்தவருடமும் வெருகலம்பதிக்கான பாதயாத்திரையை மேற்கொண்டிருந்தவர்என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தம்பிலுவில் திருநாவுக்கரசுநாயனார் குருகுல பணிப்பாளர் கண.இராஜரெத்தினம் செயலாளர் பா.சந்திரேஸ்வரன் தலைமையிலான குழுவினர் வெருகலம்பதி ஆலய தீர்த்தோற்சவத்தையொட்டி திருக்கோவிலிலிருந்து பாதயாத்திரையை மேற்கொள்ளவுள்ளவுள்ளதாக தெரிவித்தனர்.