(த.லோகதக்சன்)
இந்துசமய வரலாற்றில் போற்றத்தக்க 63 நாயன்மார்களுள் ஒருவராவும், இந்து தர்மத்தின் பாரம் பரியமான பண்புகளில் ஒன்றான சிவனடியார்க்கு விருந்தோம்பும் பண்பினையும் கொண்டவராக திகழ்ந்த இளையான்குடிமாற நாயனாரின் குருபூசை நிகழ்வானது திங்கட்கிழமை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் குச்சவெளி பிரதேச செயலகப் பரிவிற்குட்பட்ட வாழையூற்று கிராமத்தில் இயங்கி வருகின்ற ஞானசம்பந்தர் அறநெறிப் பாடசாலையினால் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
இந்நிகழ்வானது அறநெறிப்பாடசாலை நடைபெற்றுவரும் வாழையூற்று பலநோக்கு மண்டப கட்டிடத்தில் அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு அறநெறிப் பாடசாலை பொறுப்பாசிரியர் திருமதி.காயத்திரி சதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் குச்சவெளி பிரதேச இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் நே.பிருந்தாபன்;, வாழையூற்று கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் எம்.மணிவண்ணன், வாழையூற்று ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பரிபாலன சபை செயலாளர் பா.அரவிந்தன், ஆலய நிர்வாகசபை உறுப்பினர்களான க.அருமைநாயகம், கந்தசாமி மற்றும் மாணவர்களின் பெற்றோரும், நலன்விரும்பிகளும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் குருபூசை வழிபாட்டினைத் தொடர்ந்து இளையான்குடி மாறநாயனாரின் சிறப்புக்கள், வாழ்க்கை வரலாறு பற்றிய மாணவர்களின் சிறப்பு சொற்பொழிவுகளும் அறநெறி பொறுப்பாசிரியரின் கீழ் இயங்கும் கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் இளையான்குடிமாற நாயனாரின் வாழ்க்கை வரலாற்றினை சித்தரிக்கும் அறநெறி மாணவர்களின் நாடகக் காட்சியும் இடம்பெற்றது.
இதன்போது கலந்து கொண்ட அதிதிகளால் சிறப்புரையும் ஆற்றப்பட்டது. இதனை அடுத்து மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.












