யுத்தத்தின் வலியும் வேதனையும் எனக்கும் நன்கு தெரியும்! தற்போது அபிவிருத்திகளைப் பெற்று நாம் நிம்மதியாக வாழ்கின்றோம்!.

வவுணதீவு பிரதேசத்தின் நரிப்புல்தோட்டம் கிராமத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுவரும் "கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டம்" எனும் அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் வௌ்ளப்பெருக்கு ஏற்படாவண்ணம் தடுப்புச் சுவர் அமைக்கும் வேலைத்திட்டம் நேற்று 29ம் திகதி மாலை 6.00 மணியளவில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

ரூபா.10இலட்சம் செலவு மதிப்பீட்டிலான இத் திட்டத்திற்கு பிரதம அதிதியாக மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் கலந்துகொண்டு  அடிக்கல் வைத்து திட்டத்தினை ஆரம்பித்துவைத்தார்.

'எந்த அரசாங்கத்தாலும் செய்யாத அபிவிருத்திகளை எமது அரசாங்கம் குறுகிய கலத்தில் செய்துள்ளது. இப்போது நாம் நிம்மதியாக வாழ்கின்றோம். யுத்தத்தில் எமது பிள்ளைகளை பலி கொடுத்து, சாகடித்து என்ன பிரயோசனம் கிடைத்தது. அதன் வலியும் வேதனைகளும் உங்களைப்போன்று எனக்கும் நன்கு தெரியும். ஏனெனில் எனது அண்ணனையும் போராட்டத்தில் இழந்துள்ளேன். இங்கிருக்கும் எனது இணைப்பாளர் பொன்.ரவீந்திரனும் அவரது அண்ணனை இழந்துள்ளார். வீட்டுக்கு வீடு எமது தாய்மார்கள் பிள்ளைகளை இழந்துள்ளார்கள்'. 

என இங்கு இடம்பெற்ற கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் உரையாறுகையில் கூறினார்.

அவர் தொடர்ந்து போசுகையில்,
'இப்போது எமது மக்கள் சந்தோசமாக வாழ்கின்றார்கள். யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதால் எமது சமூகம் தற்போது பாரிய முன்னேற்றம் அடைந்து வருகின்றது. நவீன நாகரிகமுள்ள சமூகமாக மற்றமடைந்து வருகின்றது.

இன்று மக்கள் எதிர்பார்க்காத பல வேலைத் திட்டங்களை நாங்கள் ஏற்படுத்திவருகின்றோம். படுவான்கரை பிரதேசம் உட்பட அனைத்து பகுதிகளுக்குமான குடிநீர்ப்பிரச்சினையை தீர்க்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இதற்கு ஆயிரக்கணக்கான மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்று வருகின்ற அபிவிருத்தி இந்த கருணா அம்மானின் காலத்தில் மாத்திரம் மட்டுப் படத்தக் கூடாது,. எதிர் காலத்திலும் அவை தொடர்ந்து கொண்டு போகவேண்டும் அதற்கு எமது மக்கள் அரசியல் ரீதியாக விழிப்படைய வேண்டும். தற்போதிருக்கின்ற ஆளுங் கட்சியின் மத்திய குழு உறுப்பிர்களில் ஒருவராக நான் இருக்கின்ற காரணத்தினால்  மட்டக்களப்பின் பல அபிவிருத்திக்ளுக்கு நிதிகளைக் கொண்டு வரமுடிகின்றது.


இன்று இந்த நாட்டில் அனைத்து  மக்களுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கே ஆதரவளித்து வருகின்றனர். எதுவித இனவேறுபாடும் காட்டாமல் ஜனாதிபதி அனைத்து இன மக்களுக்கும் ஆற்றிவரும் சேவையே அதற்கு காரணமாகும். 

எதிர்வரும்  காலங்களில் தமிழ் மக்கள் சிறந்த முறையில் அரசியலை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நான் ஒருவனே இருந்துகொண்டு இவ்வாறு பல வேலைத்திட்டங்களை பெற்று அபிவிருத்தியை செய்கின்றேன் என்றால் எதிர்காலத்தில் என்னைப்போல் சில பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்தால் நாம் நினைத்துப் பார்க்காத அளவிற்கு அபிவிருத்தியடைந்து நம் சமூகத்தை முன்னேற்றலாம்.

இவ்வாறு பல உதவிகள் வழங்கப்பட்டாலும் தேர்தல்கள் வரும்போது அரசாங்கத்துக்கு எதிராகவே வாக்களிப்பீர்கள். ஆனால் உதவி தேவையென்றால் அரசாங்கத்திடமே வருகின்றீர்கள். நீங்கள் வாக்களிக்கா விட்டாலும் உங்களுக்கு தேவையானவற்றை பெற்றுக்கொடுத்தே வருகின்றேன். உங்களுக்காகவே இரவுபகலாக பாடுபடுகின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 கல்வி வலயங்கள் இருக்கின்றன. எமது சகோதர முஸ்லிம் இன மக்களைப் பிரதிதித்துவப்படுத்தும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயமே   இலங்கையில் முதலாவது இடத்தை பெற்றுச் சாதனை படைத்துள்ளது. 

இதைப்போன்று எமது மக்களும் கல்வியில் முன்னேற்றம் காணவேன்டும். பின்நோக்கிய  நிலையில் எமது சமூகம் செல்லக்கூடாது. எதிர்காலத்தில் கல்வியில் வீறுநடை போட வேண்டும். இவற்றுக்காக நான் அதிக முயற்சி எடுத்து வருகின்றேன்.

எமது கல்வியின் பின்னடைவுக்கு பிரதான காரணம் கடந்த 30வருடகால யுத்தம் எங்களை கீழ் நகர்த்தியுள்ளது. அத்துடன் எம்மத்தியில் கல்வியில் ஆர்வம் குன்றி வருவதும் காரணமாகும்.

கல்வியில் அபிவிருத்தி விடயங்களில் நான் மிக ஆர்வமாகவும் அவதானமாகவும் இருக்கின்றேன். தற்போதுகூட பல பாடசாலைகளுக்கு தேவைக்கேற்ப உதவிகள் வழங்கிவருகின்றேன்'. 

என அவர் உரையாற்றுகையில் கூறினார்.

இந் நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், மீள்குடியேற்றப் பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன்.ரவீந்திரன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ரி.நிர்மல்ராஜ் மற்றும் கிராம உத்தியோகத்தர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.