கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தராக நியமனம்

(உ.உதயகாந்த்)

ஆலையடிவேம்பு பிரதேச செயலத்தின் கிராம உத்தியோகத்தர்களுக்கான புதிய நிருவாக உத்தியோகத்தராக சேவைத் தரம் – 1 ஐச் சேர்ந்த ஏ.தர்மதாச அரசாங்க நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் இணைந்த சேவைகள் பணிப்பாளரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை முதலாந் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் வழங்கப்பட்டுள்ள இந்நியமனமானது, ஆலையடிவேம்பு பிரதேச செயலத்தில் கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தராகக் கடமையாற்றி, தற்போது காரைதீவு பிரதேச செயலத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள ஈ.குலசேகரனது வெற்றிடத்தை நிரப்பும் வகையில் இவரது சேவை மூப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதத்தை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் நேற்று (27) அவரிடம் கையளித்தார்.

ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள அக்கரைப்பற்று - 7 ஐப் பிறப்பிடமாகவும், கோளாவில் கிராமத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட ஆரியதாச – ரஞ்சிதம் தம்பதியினரின் மகனான இவர், 1981 ஆம் ஆண்டு முதல் விசேட சேவை உத்தியோகத்தராகத் தனது அரசசேவையினை ஆரம்பித்ததுடன் 1987 ஆம் ஆண்டில் கிராம உத்தியோகத்தர் சேவையில் உள்ளீர்க்கப்பட்டு ஆலையடிவேம்பு பிரதேச எல்லைக்குட்பட்ட கண்ணகிகிராமம், பனங்காடு, அளிக்கம்பை, சின்னமுகத்துவாரம், வாச்சிக்குடா, நாவற்காடு, ஆலையடிவேம்பு, கோளாவில், அக்கரைப்பற்று – 7, அக்கரைப்பற்று – 9, அக்கரைப்பற்று – 8/1 ஆகிய கிராமசேவகர் பிரிவுகளில் கடமையாற்றியுள்ளார்.

அத்துடன் ஆலையடிவேம்பு பிரதேச கமக்காரர் குழுக்கள், விவசாய அபிவிருத்திச் சபைகள், பலநோக்குக் கூட்டுறவுச்சங்கக் கிளைகள் என்பவற்றின் பதவிநிலை உறுப்பினராகக் கடமையாற்றியுள்ள இவர், அக்கரைப்பற்று லயன்ஸ் குழு மற்றும் சிவில் பாதுகாப்புக் குழு என்பற்றின் தற்கால அங்கத்தவராகவும் உள்ளார். அக்கரைப்பற்று இராம கிருஸ்ண மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர், சமய, சமுகப்பணிகள், விளையாட்டுத்துறை என்பவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பதுடன், கடந்தகால ஆலையடிவேம்பு பிரதேச கலை கலாசார நிகழ்வுகளிலும் பங்களிப்புச் செலுத்தியுள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.