"மழைப்பழம்" சிறுவர் வடமோடிக் கூத்தின் ஆற்றுகை.

ஈழத்தமிழரது பாரம்பரியக் கலைவடிவங்களில் கூத்துக்கலை பிரசித்தமான ஒன்றாகும். இது இன்றும் தழிழ்மக்கள் வாழ்கின்ற இடங்களில் உயிர்த்துடிப்புடன் இயங்கிவருவதனைக் காணமுடிகின்றது.

இது பெரும்பாலும் வளர்ந்த ஆண்களுக்குரியதாகவே உள்ளது. பெண்கள், சிறுவர்களுக்கான இடம் ஆரம்பகாலக் கூத்துக்களிலே காணப்படவில்லை. குறிப்பாகச் சொல்லப்போனால் கட்டியக்காரன், தோழிப் பாத்திரங்களுக்கு மாத்திரமே ஒருசில சிறுவர்கள் உள்வாங்கப்பட, ஏனைய சிறுவர்கள் பார்வையாளர்களாகவும், எடுபிடிவேலைகளைச் செய்பவர்களாகவுமே இருந்துவந்தனர்.

எனவே இவ்வாறான விடயங்களைக் கேள்விக்குள்ளாக்கி முற்றுமுழுதாகச் சிறுவர்களுக்காக மாத்திரமே தனித்துவமாக உருவாக்கப்பட்ட கூத்தரங்கே சிறுவர் 'கூத்தரங்காகும்'.

ஈழத்துத் தழிழ் வரலாற்றிலே சிறுவர் கூத்தரங்கு என்ற எண்ணக்கரு, கருத்துருவம் 21 ஆம் நூற்றாண்டிலே கலாநிதி சி. ஜெயசங்கர் அவர்களின் சிந்தனை மூலமாகவே உருவாக்கம் பெற்றது. 'நந்திப்போர்' எனும் வடமோடிக் கூத்தின் மூலமாகவே சிறுவர் கூத்தரங்கு துளிர்விட ஆரம்பித்தது. இதன் அடுத்தகட்ட வளர்ச்சியாக 'மழைப்பழம்' என்கின்ற சிறுவர்களுக்கான வடமோடிக் கூத்தானது அரங்கேற்றப்பட்டது.


இதற்கான கதைக்கருவானது கலாநிதி சி. ஜெயசங்கர் அவர்களினால் தமிழில் மொழிபெயர்த்து எழுதப்பட்ட 'கிரிஜா' எனும் சிறுவர் கதையினை அடிப்படையாகக் கொண்டது. இக்கதையினை சீலாமுனைக் கிராமத்தைச் சேர்ந்த கூத்துப் பனுவல் எழுத்தாளர் திரு. செ.சிவநாயகம் அவர்களால் "மழைப்பழம்" எனும் பெயரில் கூத்துப் பிரதியாக எழுதப்பட்டது. இதனை சீலாமுனைக் கிராமத்தைச் சேர்ந்ததிரு. சி. ஞானசேகரம் அண்ணாவியாரால் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் இரண்டாம் வருட சிறப்புக் கற்கை மாணவர்களுக்கும், மூன்றாவதுகண் உள்ளுர் அறிவுத்திறன் செயற்பாட்டுக் குழு நண்பர்களுக்கும் பயிற்றுவிக்கப்பட்டு மாமாங்கேஸ்வரர் ஆலயத் திருவிழாச் சூழலில் அரங்கேற்றப்பட்டிருந்தது.

இக்கூத்தின் கதாநாயகியாக 'சிறுமிசுந்தரி' எனும் பாத்திரம் காணப்படுகின்றது. பெண்களின் உரிமைகள், அவர்களின் பேச்சுச் சுதந்திரம், வீரம், துணிவு என்பனவற்றினை வெளிப்படுத்துவதாகவும், ஆணாதிக்கத்திற்கு எதிராக சமநீதிபேசும் வகையிலும் இப்பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் காலம் காலமாக பெண்கள் அடக்குமுறைக்குள் உட்படுத்தப்பட்டிருப்பதனை வேதவல்லிபாத்திரம் மூலமாகவும், பொய் பேசுவதால் ஏற்படும் நிலையினை மதிவதனன் என்கின்ற பாத்திரம் மூலமாகவும் உணர்த்தப்படுகின்றது. சிறுவர்களுக்கு நற்கருத்துக்களையும், ஒழுக்க விழுமியங்களையும் எடுத்துக் கூறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள கூத்தே மழைப்பழம் ஆகும்.
மழைப்பழம் எனும் சிறுவர் கூத்தினை எனது இறுதியாண்டு ஆய்வுக்கட்டுரைக்காக சித்தாண்டி - 3 இல் வசிக்கின்ற சிறுவர்களை ஒன்றிணைத்து அண்ணாவியார் வே. தம்பிமுத்து அவர்களின் உதவியுடன் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றது. இக்கூத்தாற்றுகையின் சட்டம் கொடுத்தல் நிகழ்வானது சித்தாண்டி வைத்தியர் வீதியிலுள்ள ஆற்றங்கரைப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையிலுள்ள இல்லத்தில் 12.07.2014 சனிக்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றது. கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் தலைவர் கலாநிதி. வ. இன்பமோகன் அவர்களும் கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்களும் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கூறியிருந்தனர்.

அத்துடன்  இதன்போது கிழக்குப் பல்கலைக் கழக நுண்கலைத்துறையின் சிறப்புக் கற்கை மாணவர்களும் மற்றும் இரண்டாம் வருட, மூன்றாம் வருட பொதுக்கற்கை மாணவர்களும் வருகை தந்திருந்தனர்.

இதேபோன்று கூத்தில் பங்குகொள்ளும் சிறுவர்களின் பெற்றோர்கள்,உறவினர்கள்,அக்கிராம மக்கள் ஆகியோர்களும் இந்தநிகழ்விற்கு வருகை தந்திருந்ததுடன் அவர்களது கருத்துக்களையும் தெரிவித்திருந்தனர். இவர்கள் கூறிய விடயங்களிலிருந்து இச்சிறுவர் கூத்தில் கொண்டுள்ள விருப்பம், தங்களது பிள்ளைகளினை சிறப்பாகப் பழக்கி அரங்கேற்றம் செய்யவேண்டும் என்கின்ற ஆர்வமும் வெளிப்பட்டது.
இதன் அடுத்தகட்டச் செயற்பாடாக மிகவிரைவில் 'சதங்கையணி விழா' செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது சித்தாண்டி- 3,வைத்தியர் வீதியிலுள்ள ஆற்றங்கரைப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையிலுள்ள இல்லத்திலே பாரம்பரிய முறைப்படி நடைபெறவுள்ளது.

இந்தநிகழ்வானது சிறுவர் கூத்தரங்க வளர்ச்சிக்கு மேலும் வலுச்சேர்ப்பமாக அமையும்.

தி. துலக்சனா.
நுண்கலைத்துறை.
கிழக்குப் பல்கலைக் கழகம்.